×
Saravana Stores

சம்பல் மசூதி விவகாரம் விசாரணையை தற்காலிகமாக நிறுத்த உ.பி கோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பல் நகரில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று இந்துத்துவா அமைப்புகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 24ம் தேதி ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது வக்கீல் கமிஷனர் தலைமையிலான அதிகாரி​களுக்​கும், பொது மக்களுக்​கும் மோதல் ஏற்பட்​டது. இதில் கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு என பயங்கர வன்முறை ஏற்பட்டது.

இந்த சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர். 30 போலீ​சார் படுகாயமடைந்​தனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவம் தொடர்பாக சம்பல் தொகுதி சமாஜ்வாடி எம்பி ஜியா உர் ரஹ்மான் பர்க், சமாஜ்வாடி எம்எல்ஏ இக்பால் மஹ்மூத் மகன் சோஹைல் மஹ்மூத் உள்ளிட்ட பலர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது. இந்த வன்முறைக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இவ்வளவு பெரிய கலவரத்திற்கு காரணம் மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றும், இந்த ஆய்வு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், மசூதி குறித்த கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கும்படி உபி அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணைக்காக மனுவை ஜனவரி மாதம் ஒத்தி வைத்தனர்.

* விசாரணை ஆணையம்
சம்பல் வன்முறை குறித்து விசாரிக்க அலகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தேவேந்திர குமார் அரோரா தலைமையில் 3 உறுப்பினர்கள் அடங்கிய விசாரணை ஆணையம் அமைத்து உபி ஆளுநர் ஆனந்திபென் படேல் நேற்று உத்தரவிட்டார். விசாரணை அறிக்கையை 2 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சம்பல் மசூதி விவகாரம் விசாரணையை தற்காலிகமாக நிறுத்த உ.பி கோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,UP Court ,Sambal Masjid ,New Delhi ,Hindutva ,Jama Masjid ,Sambal Nagar, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED அரசியலமைப்பின் முகவுரையில்...