×

ஜெயங்கொண்டம் அருகே ரூ.1000 கோடியில் காலணி உற்பத்தி ஆலை: தைவானை சேர்ந்த பிரபல ஷூ நிறுவனம் அமைக்கிறது; முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1000 கோடியில் அமைய உள்ள தைவான் நாட்டை சேர்ந்த டீன்ஷூஸ் காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு செய்ய நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து ஜெயங்கொண்டம் சென்ற முதல்வர் அன்று இரவு அங்கு தங்கினார்.

நேற்று காலை ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைபுரத்தில் உள்ள சிப்காட்டில், 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தைவான் நாட்டை சேர்ந்த டீன்ஷூஸ் நிறுவன தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர், அரியலூர் கொல்லாபுரத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டத்தில் 26 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்ததுடன் 53 முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்து அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்துக்கான 27 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்ததுடன் 456 முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து 11,721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். இதில் மொத்தம் ரூ.174 கோடியில் 21,862 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு நம்முடைய தலைவர் கலைஞர் ஏராளமான திட்டங்களை உருவாக்கி கொடுத்திருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இந்த அரியலூர் மாவட்டத்தை உருவாக்கி கொடுத்தவரும் தலைவர் கலைஞர்தான். பெரம்பலூர் மாவட்டத்திற்கு சிறப்பு பொருளாதார மண்டலம் போன்ற திட்டங்களை கொடுத்தவரும் அவர்தான். கடந்த மூன்றாண்டுகளில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், மாமன்னர் ராசேந்திர சோழனுக்கு புகழ் சேர்க்கும் வகையில் ‘ஆடிதிருவாதிரை தினம்’ அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தோம். கங்கைகொண்ட சோழபுரத்தில் புதிய அருங்காட்சியகம், இன்று அடிக்கல் நாட்டியிருக்கும் ஜெயங்கொண்டம் காலணி உற்பத்தி தொழிற்சாலை, 15 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும். இதன் மூலமாக அவர்களுடைய வாழ்வாதாரமும், ஜெயங்கொண்டத்தின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும்.

இந்த இடத்திற்கு அருகே விளிம்பு நிலையில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு 3.52 ஹெக்டேர் நிலத்தில் இலவசமாக வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட இருக்கிறது. 61 பழங்குடியின குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு தலா 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வீதம், 3 கோடியே 9 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய பழங்குடியினர் நலத்துறை மூலமாக ஆணையிடப்பட்டிருக்கிறது. ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையை ‘மாவட்ட மருத்துவமனையாக’ ரூ.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று தற்சமயம் கட்டுமான பணிகள் முடிவுற்று இருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி அனல்மின் உற்பத்தி திட்டத்திற்காக 2005ம் ஆண்டு வரையிலும், 13 கிராமங்களில் 8373 ஏக்கர் நிலம் கையகப்படுத்தபட்டது. ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த சாத்தியமில்லை என்று முடிவாகியும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகால பிரச்னையாக இது இருந்தது. இந்த பிரச்னை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்ததும் அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு, முன்பு கொடுத்த இழப்பீட்டு தொகையை திரும்ப வாங்காமல் உரிய நில உரிமையாளரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று 2022ல் ஆணையை நான் பிறப்பித்தேன். இதுவரைக்கும் 6,808 ஏக்கர் நிலங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான உறுதிமொழிகள் பெறப்பட்டு, 5,656 ஏக்கர் நிலங்களுக்கு பட்டாவும் வழங்கியிருக்கிறோம்.

மீதமுள்ள நில உடமையாளர்களுக்கும் பட்டா மாற்றம் செய்ய நடவடிக்கையை எடுத்து கொண்டிருக்கிறோம். இதுவும் விரைவில் முடியும். இது எல்லாவற்றிற்கும் மேல், முக்கியமாக பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூரில், 243 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் ‘கோத்தாரி பீனிக்ஸ்’ காலணி உற்பத்தி தொழிற்சாலையை நானே அடிக்கல் நாட்டி, சரியாக ஒரே வருடத்தில் முடித்து, அந்த தொழிற்சாலையை நானே திறந்து வைத்தேன். இது எவ்வளவு பெரிய சாதனை.

அதுமட்டுமல்ல, குன்னம் வட்டத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். எறையூர் சிப்காட், பாடாலூர் தொழிற்பூங்காவிற்கு கூட்டுக் குடிநீர் திட்டம் வழங்க, ரூ.345 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இவ்வளவு திட்டங்களை தீட்டி தந்தவன் என்பதால்தான் உங்கள் முன்பு நான் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். இன்னும் பல திட்டங்களை தீட்டித் தர நினைப்பதால்தான், உங்களை பார்ப்பதற்கு நான் மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறேன்.

இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க திராவிட மாடல் அரசு பாடுபடுகிறது. அந்த வளர்ச்சியை உறுதி செய்யத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு செய்கிறோம். ஒவ்வொரு பயணத்திலும், ஒரு அனுபவம் மறக்க முடியாததாக அமைந்து விடுகிறது. “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”, “விடியல் பயணம்”, “மக்களைத் தேடி மருத்துவம்”, “நம்மைக் காக்கும் 48” என்று எத்தனையோ முத்திரை திட்டங்களையும் நான் மேடைதோறும் பட்டியலிட்டு சொல்கிறேன். இந்த முத்திரை திட்டங்களுக்கு இடையில் மறைந்திருக்கும் பல முத்தான திட்டங்களும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான் ‘‘ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம்”.

இன்றைக்கு ரூ.22 கோடி மதிப்பீட்டில் வாரணவாசி குழந்தைகள் மையத்தில் இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை தொடங்கி வைத்து விட்டு இங்கு வந்திருக்கிறேன். இந்த நேரத்தில் எல்லா மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் கட்சியை தாண்டி, அரசியலை தாண்டி, தேர்தலை தாண்டி செய்ய நினைப்பது. ‘‘மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் நான்” என்று சொன்னார் தலைவர் கலைஞர். எத்தனை மிக மிக வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.

என்னை பொறுத்தவரை, மிக மிக மிக நலிந்த மக்களுக்கான ஆட்சியாக இந்த ஸ்டாலின் ஆட்சி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விளிம்புநிலை மக்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் குறிப்பாக குழந்தைகள் நலன் பேணப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகள் தங்களுக்கு தேவையானவற்றை கேட்க முடியாது. அப்படி கேட்க முடியாதவர்களுக்கும் இந்த அரசே முன்வந்து செய்ய வேண்டும், அந்த நன்மைகளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு குடும்பத்திற்கு தேவையான எல்லாவற்றையும், ஒரு தந்தையாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக செய்து கொடுக்கிறேன்.

உங்கள் குழந்தைகள் நாளைக்கு வளர்ந்து நல்ல நிலையை அடையும் போது, அவர்கள் சொல்ல வேண்டும். எதிர்காலத்திலும் தொடரப்போகும், இந்த திட்டங்களால் வரலாற்றில் திராவிட மாடல் அரசும், அதை வழிநடத்தும் இந்த ஸ்டாலின் பெயரும் அழிக்க முடியாதபடி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் உறுதியோடு எடுத்து சொல்லி என்றைக்கும் உங்களோடு இருக்கக் கூடியவர்கள்தான் நாங்கள். எங்களோடு நீங்கள் நிச்சயமாக, உடனிருப்பவர்களாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறீர்கள். எனவே, அப்படிப்பட்ட ஆதரவை நீங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும். இந்த அரசுக்கு என்றைக்கும் நீங்கள் துணை நிற்க வேண்டும், துணை நிற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தநிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், கோவி.செழியன், சி.வி. கணேசன், டி.ஆர்.பி. ராஜா, கீதாஜீவன், எம்பிக்கள் திருமாவளவன், ஆ.ராசா, எம்எல்ஏ க.சோ.கா.கண்ணன், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, டீன்ஷுஸ் நிறுவனத்தின் துணை தலைவர்கள் ரிச்சாங் மற்றும் ஓட்டோயாங் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரியலூர் மற்றும் பெரம்பலூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், முதல்வரின் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றில் தற்போதைய நிலை குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் பணிகள் குறித்து தற்போதைய நிலை குறித்து முதல்வருக்கு விளக்கினர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

* காலணி உற்பத்தி தலைநகரமாகும் தமிழ்நாடு
இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி தொழில் மையாக திகழ்கிறது. குறிப்பாக உலக காலணி நிறுவனங்களில் உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. நைக், அடிடாஸ் உள்ளிட்ட முக்கிய பிராண்டுகளை தமிழ்நாட்டில் உள்ள ஆலைகள் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில் 32% காலணி தயாரிப்புகளை தமிழ்நாடு உற்பத்தி செய்து வருகிறது. இதனால் நாட்டில் காலணி தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது. மாநில அரசின் முற்போக்கான தொலைநோக்கு பார்வையும், கொள்கைகளும் தமிழ்நாட்டின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணியாக உள்ளது. 3,9500க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் அதில் பணிபுரியும் திறன்மிக்க பணியாளர்கள் என தொழில்துறையில் தமிழ்நாடு மிகுந்த வலுவோடு உள்ளது. மக்கள் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சி, தொழில்துறைக்கு ஆதரவான நிலைபாடு ஆகியவற்றின் மூலமாக தமிழ்நாடு அரசு நல்லாட்சி குறியீட்டில் முதலீடத்தில் உள்ளது.

* ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ ரூ.22 கோடியில் விரிவாக்கம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வாரணவாசி குழந்தைகள் மையத்தில் ‘‘ஊட்டச்சத்தை உறுதி செய்’’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ரூ.22 கோடியில் விரிவாக்கம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகள் பற்றிய கண்காட்சி அரங்கத்தினை பார்வையிட்டு, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவுகளை சுவைத்து பார்த்தார். பின்னர், அங்கன்வாடி குழந்தைகளுக்கு மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, வரகு முறுக்குகள், கருப்புகவுனி மற்றும் தூயமல்லி அதிசரங்கள், திணை லட்டு ஆகிய ஊட்டச்சத்து மிகுந்த தின்பண்டங்களை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இப்பெட்டகமானது, நெய், பேரிச்சம்பழம், ஊட்டச்சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், பருத்தி துண்டு (Towel), பிளாஸ்டிக் பக்கெட் மற்றும் கப் ஆகிய பொருட்களை கொண்டது. ஊட்டச்சத்து பெட்டகங்களை பெற்று கொண்ட தாய்மார்கள் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

* 90% பெண்களுக்கே வேலைவாய்ப்பு…
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், ‘தமிழ்நாட்டை முன்னேற்ற பாதையில் நமது முதல்வர் கொண்டு சென்று கொண்டிருக்கிறார். தற்போது ஆயிரம் கோடி முதலீட்டில் 130 ஏக்கர் பரப்பளவில் தைவான் நாட்டு தொழிற்சாலை துவங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இன்னும் பல்வேறு திட்டங்கள் மூலம் தொழிற்சாலைகளை துவங்கி தமிழகத்தை முதல் இடத்தில் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுத்துள்ளார். இங்கு அமைக்கப்படும் தொழிற்சாலையில் பணிகளில் 90 சதவீதம் பெண்களுக்கே வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, இன்னும் பல்வேறு தொழிற்சாலைகள் துவங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

* திமுக ஆட்சியில் தான் அரியலூருக்கு பெரிய வளர்ச்சி: முதல்வருக்கு திருமாவளவன் நன்றி
அரியலூர் கொல்லாபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ‘‘ நான் இந்த மண்ணுக்குரியவன், இந்த மாவட்டத்தை சார்ந்தவன் என்கிற முறையில் மக்களின் சார்பில் முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். பெரம்பலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்காவை தொடங்கி வைத்த போது, அரியலூர் மாவட்டத்திலும் அப்படி ஒரு தொழிற் பூங்கா வேண்டும் என்று நான் அந்த மேடையிலேயே முதலமைச்சரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தேன். இன்றைக்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் காலணி தயாரிக்கும் தொழில் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர் அவர்கள். இதன் மூலம் நேரடியாக 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது பெரு மகிழ்ச்சியை தருகிறது.

வரலாற்று சிறப்பு வாய்ந்த மாவட்டமாக இருந்தாலும் கூட, தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களும் அரியலூரும், பெரம்பலூரும் என்பதை முதல்வர் நன்கு அறிவார்கள். அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலைகள் ஏராளம் இருந்தாலும் கூட இன்னும் கட்டமைப்பு வசதிகளில் வலுப்பெறவில்லை. முக்கியமாக, உங்கள் ஆட்சிக்கு பிறகு தான் இந்த மாவட்டம் முழுமையாக கவனிப்புக்கு வந்திருக்கிறது. பெரிய அளவில் வளர்ச்சியை நோக்கி போய் கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியிலும் இப்போது நீங்கள் அடிக்கல் நாட்டியிருக்கிறீர்கள் என்பது பெருமை அளிக்கிறது. முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

The post ஜெயங்கொண்டம் அருகே ரூ.1000 கோடியில் காலணி உற்பத்தி ஆலை: தைவானை சேர்ந்த பிரபல ஷூ நிறுவனம் அமைக்கிறது; முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Jayangkondam ,Taiwan ,Chief Minister ,M. K. Stalin ,Ariyalur ,Perambalur ,Jeyangondam ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில்...