×
Saravana Stores

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

விருத்தாசலம், நவ. 14: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள பேரளையூர் ஊராட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் மூலம் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீரேற்றும் மின்மோட்டார் பழுதடைந்த காரணத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தடைபட்டது. இதனால் விரைவில் மின்மோட்டாரை சரிசெய்து குடிநீர் வழங்க கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது ஊராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் பூர்த்தி செய்யவில்லை என ஊராட்சி நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அப்போது உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்து தர வேண்டும் இல்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்து விட்டு சென்றனர். மறியலால் விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post பொதுமக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Peralaiyur panchayat ,Karuvepilangurichi ,Dinakaran ,
× RELATED புகையிலை பொருட்கள் விற்றவர் கைது