- வட தமிழகம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- வடக்கு நகர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- வளிமண்டல
- தென் தென்மேற்கு
- வானிலை மையம்
- தின மலர்
சென்னை: வடதமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் வரும் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று முன்தினம் மதியம் 2.30 மணி அளவில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, நேற்று காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை நிலவரப்படி அதே பகுதியில் நீடிக்கிறது, இது மெல்ல வட தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடதமிழகத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்தாலும் அது வலுவடையாது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு இழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும் இதனால் தமிழ்நாட்டில் வரும் 16ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
சென்னையில் இன்றும் மிதமான மழை பெய்யும் என்றும் இன்று முதல் உள்மாவட்டங்களிலும், கோவை, ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும், நெல்லை, தூத்துக்குடியிலும் மழை பெய்யும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post வடதமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி; வரும் 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.