டெல்லி: கேரளாவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான ஓமனகுட்டன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சமூக வலைதள செயலியான வாட்ஸ்ஆப், ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-க்கு இணங்க மறுத்துவிட்டதாகவும், இதனால் வாட்ஸ்ஆப் செயலியின் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை வாட்ஸ்ஆப் மீறுவதாகவும், தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு வாட்ஸ்ஆப் செயலி அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தை மாற்ற விரும்பவில்லை என்றாலோ, அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவில்லை என்றாலோ, அதை நாட்டில் செயல்பட அனுமதிக்கக்கூடாது. நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படும் பல வலைதளங்கள் மற்றும் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், வாட்ஸ்ஆப் செயலியை தடை செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post வாட்ஸ்ஆப் செயலியின் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.