சென்னை: சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மாநகரம் மற்றும் புறநகர் முழுவதும் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.
தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் நேற்று முன்தினம் மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் விட்டு விட்டு கன மழை பெற்று வருகிறது. சென்னை முழுவதும் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. அதேநேரம் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணி காரணமாக ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, தரமணி, நந்தம்பாக்கம், போரூர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இடையே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தண்ணீர் ஆங்காங்கே வெளியேற முடியாமல் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் காலை முதல் பிற்பகல் வரை கடுமையான போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.
அதேபோல், மழைநீர் வடிகால் பணி காரணமாக கே.கே.நகர். அசோக் நகர், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் ஒரு வழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அண்ணாநகர், கோயம்பேடு, முகப்பேர் பகுதிகளில் இருந்து மயிலாப்பூர், சாந்தோம், அடையாறு செல்லும் வாகன ஓட்டிகள் பூந்தமல்லி அருகே உள்ள ஸ்கை வாக் வழியாக நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் வழியாக தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா மேம்பலம் வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையை அடைகின்றனர். வள்ளுவர் கோட்டம் பகுதியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்தால் குறுகிய சாலைகளில் அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மழை காரணமாக வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பல்ேவறு இடங்களில் தானியங்கி சிக்னல்கள் மதியம் வரை சரியாக வேலை செய்யவில்லை. மேலும், காலையில் போக்குவரத்து காவலர்களும் சிக்னல் சந்திப்புகளில் பணியில் இல்லாததால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் திணறினர்.
அண்ணா சாலையில் ஆயிரம்விளக்கு சந்திப்பு, ஜி.பி. சாலை, தேனாம்பேட்டை சந்திப்பு, நந்தனம், ஆவடி, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, நீலாங்கரை, சோழிங்கநல்லூர் சந்திப்புகளில் வாகனங்கள் ஆமை போல் ஊர்ந்து சென்றதால், அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நேற்று காலை அலுவலகம் செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பல மணி நேரம் சாலையில் மழையில் நனைந்தபடி 11 மணிக்கு மேல் பணிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
மழை நேரங்களில் அதுவும் பீக் ஹவரில் மட்டுமாவது போக்குவரத்து போலீசார் அனைத்து சிக்னல்களிலும் பணியில் இருந்தால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்றும், தேவையற்ற இடங்களில் செய்யப்பட்டுள்ள ஒரு வழிபாதையை மழைக்காலங்களில் நீக்க வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசாருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை சென்னை, புறநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: காலையில் அலுவலகம் செல்வோர் கடும் அவதி appeared first on Dinakaran.