ஓசூர்: ஓசூர் அருகே மத்திகிரி கூட்ரோட்டில் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், இப்பகுதியில் போலீசார் போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் மாநகரம் வளர்ந்து வரும் நகரங்களிலேயே மிக முக்கிய நகரமாகவும், தொழில் நகரங்களில் பிரசித்தி பெற்ற நகரமாகவும் உள்ளது. ஓசூர் நகரம் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக இருப்பதால், இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் முதலீட்டாளர்கள் வசித்து வருகின்றனர். மத்திகிரி கூட்ரோடு தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில் உள்ள கிராமங்களை இணைப்பு சாலையும், தர்மபுரி ராயக்கோட்டை நகரங்கள் இணைப்பு சாலையும், பெங்களூரு மாநகர இணைப்பு சாலையும், ஓசூர் மாநகர இணைப்பு சாலையும் ஒன்று கூடும் இடமாக உள்ளது.
தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் கூட்ரோடு அமைந்துள்ளது. இந்த சாலைகளில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், ஐடிஐ, தனியார் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், தினசரி போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போலீசார் கண்காணித்து, சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மத்திகிரி கூட்ரோட்டில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.