×
Saravana Stores

காவல்துறையில் பணிக்கு சேர்ப்பவர்களைபோல ஆசிரியர்களின் குற்ற பின்னணி குறித்து காவல்துறை மூலம் விசாரிக்கலாமே? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில், கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தகுதி தேர்வுடன் போட்டித் தேர்வு மூலமும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று 2018ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

வழக்கு தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.  விசாரணையின் போது, ஆசிரியர்களுக்கு எதிராக சமீப காலமாக பல வழக்குகள் வந்துள்ளன. கிருஷ்ணகிரி பள்ளி என்சிசி முகாம் வழக்கு மட்டுமல்லாமல் இன்று (நேற்று) கூட ஒரு வழக்கு தொடர்பாக பத்திரிகையில் செய்தி பார்த்தோம். குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும்.

எனவே, ஆசிரியர்கள் நியமனத்தின் போது அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் சரிபார்க்க கூடாது? இதுகுறித்து அரசு ஏன் ஒரு முடிவை எடுக்கக் கூடாது என்று அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களிடம் அவர்களின் குற்ற பின்னணி குறித்த விவரங்கள் கேட்கப்படுவதாக விளக்கம் அளித்தனர். இதே நடைமுறை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதைக்கேட்ட நீதிபதிகள், பார்கவுன்சிலில் வழக்கறிஞர்கள் பதிவு செய்யும் முன்பு அவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளனவா என்று காவல்துறையினர் மூலம் விசாரணை நடத்துவது போலவும், காவல்துறையில் பணிக்கு சேர்பவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளனவா என்று விசாரணை நடத்துவது போலவும், ஆசிரியர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளனவா என்று காவல்துறையினர் மூலமாக ஏன் விசாரணை நடத்தக் கூடாது என்று கேட்டு, இதுகுறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

The post காவல்துறையில் பணிக்கு சேர்ப்பவர்களைபோல ஆசிரியர்களின் குற்ற பின்னணி குறித்து காவல்துறை மூலம் விசாரிக்கலாமே? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்...