×
Saravana Stores

அன்னம்பாலிக்கும் சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

15.11.2024 – ஐப்பசி அன்னாபிஷேகம்

அபிஷேகப் பிரியனான சிவபெருமானை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நிறைமதி நாளன்று ஒவ்வொரு நட்சத்திரத்துக்குரிய பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில், சித்திரையில் மரிக்கொழுந்து, வைகாசியில சந்தனம், ஆனி மாதத்தில் காராம் பசுவின் பால், ஆவணியில் வெல்லம், புரட்டாசியில் கோதுமை மற்றும் பசுநெய் கலந்த வெல்ல அப்பம், கார்த்திகை மாதத்தில் பசுநெய் மற்றும் தாமரை தீபம், தைமாதத்தில் கருப்பஞ்சாறு மார்கழியில் பசுநெய் மற்றும் நறுமணப்பன்னீர் ஆகியவற்றை பகவானுக்குச் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு என்பார்கள். அந்த வகையில், ஐப்பசி மாதத்தில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

அன்னாபிஷேகம் செய்வது, இறைவனது பிரசாதம் சிற்றுயிர்முதற்கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே!‘சாம வேதத்தில் ஓர் இடத்தில் ‘அஹமன்னம்’ அஹமன்னம், அஹேமன்னதோ’ என்று கூறப்பட்டுள்ளது. அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்ன வடிவில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இறைவனின் அருவுருவமான லிங்கமூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் தினமே ஐப்பசி பௌர்ணமி நாள், அன்னாபிஷேக நாளாகப்போற்றப்படுகிறது.

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் முழுமையாக விளங்குகிறான். அன்று அவனது கலை அமிர்தக் கலையாகும். ஐப்பசிப் பௌர்ணமியன்று புது நெல்லைக்கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தைத் தரவல்லதாகும். சிவன் பிரம்ம ரூபி. அவரது மெய்யன்பர்கள் பிரதிபிம்ப ரூபிகள் பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதிபிம்பமும் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம்பாலிக்கும் அந்த அன்னபூரணியை, தன் வாம பாகத்தில் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லையில் அனுதினமும் காலை பதினோரு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு, அந்தஅன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. எனவேதான் இந்தத் தலத்தை அப்பர் பெருமான்,

‘‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம் பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பலிக்கும்மோ இப்பிறவியே!’’
– என்று சிறப்பித்துப் பாடினார்.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம். எனவே, அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்குச் சமம். அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம். தில்லையில் அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்ப்போம். ஐப்பசி பௌர்ணமியன்று காலையில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், இறைவனின் மேனி முழுவதும் அன்னம் சாற்றுதல் நடைபெறுகிறது. சாயரட்சை பூஜை, அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகிறது. பின் இரண்டாம் காலம் வரை அன்னாபிஷேகராக அருங்காட்சி தருகிறார் எம்பெருமான்! இரண்டாம் கால பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

பொதுவாக அபிஷேகம் செய்த அன்னத்தை ஓடும் நீரில் கரைப்பது வழக்கம். குறிப்பாக, லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தை விடுத்து, மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாகக் கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படுகிறது. இறைவனின் அருட்பிரசாதத்தை நீர்வாழ் உயிரினங்களுக்கும் படைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகிறது.

பொதுவாக, அன்னத்தை சிவலிங்கத்திருமேனி முழுவதும் சாற்றுவது எளிமையான அலங்காரம். ஆனால், பல சிவாலயங்களில் அன்னத்தை எம்பெருமானின் ஒரு முகம் அல்லது ஐந்து முகங்கள் கொண்டு அலங்காரம் செய்தும் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் கலந்து அலங்காரம் செய்கின்றனர். இன்னும் சில ஆலயங்களில் கருவறைப் படியிலிருந்து ஆவுடையார் வரைக்கும் படிகள் அமைத்து அவற்றில் காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர். ஒருமுறை சென்னையில் உள்ள கருமாரி திரிபுரசுந்தரி ஆலயத்தில் திரியம்பகேஸ்வரருக்கு மிகவும் நூதனமான முறையில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஒரு வருடம் எம்பெருமானின் மூன்று கண்களைக் குறிக்கும் வகையில் மூன்று லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர்.

ஒரு வருடம் பஞ்சபூதத் தலங்களைக் குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்களை அமைத்து அலங்காரம் செய்திருந்தனர். மற்றொரு வருடம் 12-ஜோதிர் லிங்கங்களைக் குறிக்கும் வகையில் 12-லிங்கங்களில் அலங்காரம் செய்திருந்தனர். நாடெங்கிலுமுள்ள சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும், தமிழகத்தில் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் அன்னாபிஷேகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்விரு ஆலயங்களில் உள்ள லிங்கத் திருமேனிகள் பெயருக்கேற்றாற் போல பெரிதாகையால் காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகிறது. அறுவடையான புத்தம் புதிய அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகிறது. இவ்விரு கோயில்களுக்கு நூறு மூட்டை அரிசி வரை அபிஷேகத்துக்குத் தேவைப்படுகிறது. உழவர் பெருமக்கள் கோயிலுக்கு இலவசமாக நெல்லை
வழங்குகின்றனர்.

அத்தனையும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்மூலம் சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மீது சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகிறது. எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னாபிஷேகம் ஆக மாலை நேரமாகி விடுகிறது. அதன் பின்னர் பூஜைகள் முடிந்து அர்த்தஜாமத்துக்குப் பின் அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரருக்கு, ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. சந்திரன் பூரண சோபையுடன் திகழும் பௌர்ணமி நாளில் 150-கிலோ அன்னத்தைக் கொண்டு அங்கே சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது சுவாமி வெள்ளை லிங்கமாகக் காட்சியளிப்பார். ஆவுடை மற்றும் பிரம்ம பாகத்தின் மேலுள்ள அன்னம் பக்தர்களுக்குப்பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிறகு அந்த பிரசாதத்தில் ஒரு பாகம் அருகில் உள்ள திருக்குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாகக் கரைக்கப்படுகிறது. அன்று இத்தலத்து இறைவி படியளக்கும் அன்னபூரணியாக அருள்வது மிகவும் விசேஷம்.

சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் அதே வேளையில், அம்பாள் சாகம்பரி அலங்காரத்தில் ஏராளமான காய்கறிகனிகளுடன் காட்சி தருவாள். அன்று விசேஷமா சக்தி ஹோமம் சிறப்பாக நடைபெறும். காஞ்சி மாநகரில் உள்ள காமாட்சியம்மன் ஆலயத்தில் அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

அன்னையை;
‘‘அன்னபூர்ணோ ஸதாபூர்னே சங்கர ப்ராண வல்லபே
ஞான வைராக்ய ஸித்தயர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி!’’
– என்று ஆதிசங்கரர் பகவத் மாதரின் பாடல் போற்றுகிறது.
அதாவது ‘உணவு நிறைந்தவளே!

எல்லாவற்றிலும் எப்போதும் நிறைந்தவளே! சங்கரரின் உயிருக்கு இனியவளே, பார்வதி, ஞானமும் வைராக்கியமும் நிறைவு பெற பிட்சையிட்டு உணவு தந்து – அருள்வாயாக.’’ என்கிறார்.
‘அஸ்மாகம் நித்யம் அஸ்து ஏதத்’
– என்பது மற்றொரு ஸ்லோகம்.

இதன் பொருள்: ‘நமக்கு இந்த அன்னம் என்றைக்கும் கிடைக்கட்டும்!’ என்பதாகும். என்றும் நாம் வழிபடும் அன்னபூரணிக்கும் அன்னலட்சுமிக்கும் எண்ணற்ற ஆலயங்
களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

‘‘வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து ஓங்கி மிக அருள்
மழை பொழிந்தும் இன்ப வாரிதியில் நின்னதன்
பெனுஞ் சிறகால் விருந்தாமலே யணைத்து
கோடாமல் வளர் சிற்றெறும்புமுதல் குஞ்சரக்கூட்ட
முதலான சீவ கோடிகள் தமக்குப் புசிக்கும்
புசிப்பினை குறையாமல் கொடுக்கும்’’
– அன்னை அன்னபூரணி என்கிறது இப்பாடல்.

அந்த அகிலாண்டேஸ்வரனையும், அன்ன பூரணியையும் வருடத்தில் ஒருநாள் மட்டுமாவது ஐப்பசி பௌர்ணமி நாளில் அன்னாபிஷேகக் கோலத்தில், அற்புதத் திருக்கோலத்தில் தரிசித்து நன்மைகள் பல பெறுவோம். ஐப்பசி மாதப் பூரத் திருநாளிலே பிலத்துவராம் வழியாகக் காஞ்சியை அடைந்த காமாட்சி, கம்பையாற்றங்கரையிலே, வேத வடிவான ஒற்றை மாமரத்தடியில் மணலால் ஆன சிவலிங்கத்தை ஸ்தாபித்து அன்னம் அளிப்பது முதற்கொண்டு 32-அறங்களையும் புரிந்தபடி காஞ்சி காமாட்சி இறைவனை ஆராதித்து வருகின்றாள்.

அன்னம் ஆதிபராசக்தியின் சொரூபம் `ஞானத்தை நாடும் தவமுனிவர்கள் முதற்கொண்டு அனைத்து உயிர்களும் அன்னத்தை ஒருபோதும் புறந்தள்ள இயலாது. ஐம்புலன்களும் அழகாக அமைந்த உடலால் தான் ஆண்டவனை அறிந்து, ஆனந்திக்க இயலும். இறையை உணரஉதவும் உடல் செழிக்க, உணவு மிக அவசியம். மனுதர்மம் சொல்கிறது. ‘இறையை நாடும் மனிதன் முதலில் இரையை வணங்கட்டும் அன்னையை அனைவரும் அறிய, அன்னையே சூத்திரம் வகுத்திருக்கிறான்.

கருவில் இருக்கும் பிள்ளையின் அடிவயிற்றில் அன்னையிட்ட தீதான் பசி. அதை அணைப்பவளும் அன்னையே’ நேற்றும் இன்றும் என்றும் இந்த உலகில் சகல உயிர் களையும் அன்னமெனும் அமுதளித்துப் பேணிக்காப்பவள் அன்னை.அந்த அன்னைதான் காசிமாநகரில்அன்னபூரணியாக அமர்ந்து அருள்பாலிக்கிறாள். கங்கைக்கரையில் கொடி கட்டிப்பறக்கும் காசிமாநகரில் அன்னை ஆதிசக்தி, விசாலாட்சி, துர்க்கை, வாராகி என வெவ்வேறு வடிவங்களில் குடி கொண்டிருந்தாலும், ஆட்சிப் பீடத்தில் அமர்த்தப் பட்டிருப்பவள் மாதா அன்னபூரணி. காசி மாநகரையே கருணையால் வழிநடத்திச் செல்லும் தலைமைத் தாயாக கொண்டாடப்படுகிறாள். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில்தான் அன்னபூரணி ஆலயம் அமைந்துள்ளது. கர்ப்பகிரகத்துக்கு நேர்எதிரில் பன்னிரண்டு தூண்கள் தாங்கி நிற்கும் ஒரு சபா மண்டபம் இருக்கிறது, அந்த மணிமண்டபத்தில் இருந்துதான் அன்னபூரணியை தரிசிக்க இயலும். அன்னை அன்னபூரணி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறாள்.

இரண்டடி உயர கருங்கல் சிலையாக நிற்கும் அன்னபூரணி இடது கையில் அன்னப் பாயசப் பாத்திரத்தையும், வலதுகையில் வாரி வழங்கும் கரண்டியையும் கொண்டு காட்சி தருகிறாள். அன்னையின் பீடத்துக்குக் கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி வாய்ந்த இந்த ஸ்ரீ சக்ரம் கண்களுக்குப் புலப்படாது. அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் மகிமையை ஆதிசங்கரர் தம்முடைய ‘அன்னபூர்ணாஷ்டகத்தில்’ இப்படிப் பாடுகிறார்.

‘‘நித்யானந்த கரீ வராபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ
நிர் தூதாகில கோர பாவன கரீ ப்ரத்யக்ஷ மாகேஸ்வரீ
ப்ராலே யாசல வம்ச பாவனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம்தேஹி க்ரும்பாவலம்ப னகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ!’’

இதன் பொருள்: ‘‘நிலைத்த மகிழ்ச்சியைத் தருபவளும், பயத்தைப் போக்கி நலத்தைச் செய்பவளும், அழகுக் கடலும், எல்லாக் கொடும் பாவங்களையும் விலக்கி புனிதமாக்குபவளும், பிரத்யட்சமான தேவியும், பனிமலை யரசனின் வம்சத்தைப் புனிதமாக்கியவளும் காசிநகரில் எழுந்தருளி அருள்பாலிக்கின்ற அன்னபூரணித்தாயே பிச்சையிடுவாயாக!’’ விஸ்வநாதர் ஆலயத்துக்கு அருகில் உள்ளது அன்னபூரணியின் ஆலயம்.

இதை ‘துளசி மானஸ மந்திர்’ என்பர். இங்கு உமாதேவி அன்னபூரணியாக வீற்றிருக்கிறாள். பசிக்கொடுமையை ‘அன்னம்’ எனும் அருமருந்தால் நீக்கி உயிர்களைக் காப்பதால் அவள் ‘அன்னபூரணி எனப்படுகிறாள். பிரம்மனின் கர்வத்தை அடக்க அவன் தலைகளில் ஒன்றை கொய்தார் சிவபெருமான். அதனால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானார். பசிப்பிணி அவரைத் தொற்றிக் கொண்டது. இந்தப் பசிப்பணி அகல, பரமசிவன் கையில் கபாலம் தாங்கி பிச்சை எடுக்க, அது நிறைந்ததால் தோஷம் நீங்கும் என்பது விதி. அதற்காக அன்ன பூரணியாக அவதரித்தார் ஆதிசக்தி.

ஈசனின்கை கபாலத்தை அன்னமிட்டு நிரப்பினாள். அதனால் சிவனாரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது.அன்னபூரணியின் அருளால் எவரும் பசிக் கொடுமைக்கு ஆளாக மாட்டார்கள். ஒருமுறை வேதவியாசர், சீடர்களுடன் காசிநகரில் பிட்சை ஏற்கச் சென்றார். ஆனால், அங்கு எவரும் அவருக்கு பிட்சை இடாததால், உடனே அவர் காசிநகரை சபிக்க நினைத்தார். அப்போது அன்னபூரணி அவருக்குக் காட்சியளித்து அன்னம் இட்டாள். இப்படி காசியில் அன்னக்கூடமும், அன்னதானமும் மிகவும் பிரசித்தம். இந்த அன்னபூரணியைத்தரிசித்தால்தான்  காசி யாத்திரை பூர்த்தியாகும் என்பார்கள்.

அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றொரு தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள ‘செந்தலை’ என்னும் தலம். இங்கு எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரரேஸ்வரருக்கு அன்னாபிஷேக நாளன்று முதலில் பகல் 11 மணிக்கு விபூதி அபிஷேகமும், பிறகு மற்ற அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. மாலை ஐந்து மணிக்கு எம்பெருமான் திருமேனி முழுவதும் அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்படுகிறது.

பூரண அலங்காரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு 16-வகையான ஷோட உபசாரங்களும் சிறப்பு தீபாரதனையும் நடைபெறுகிறது. இரவு 9 மணியளவில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது, பூரணச்சந்திரன், சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியில் சூடிய சந்திர சேகரனை, தனது அமிர்த கலைகளால் தழுவுகிறான். வேறு எங்குமே நடைபெறாத இவ்வற்புத நிகழ்ச்சி இத்தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது. இந்த அரிய நிகழ்வைக் காணவே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கூடுகிறார்கள்.

டி.எம்.ரத்தினவேல்

The post அன்னம்பாலிக்கும் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Annabishekam ,Annambal ,ABISHEKAM SHIVABERUMAN ,PURNAMI ,Chitra ,Vaikasia ,Ani ,Annampalikum ,
× RELATED அகிலங்களை காக்கும் அன்னாபிஷேகம் வைபவம்!