“கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்’’
– என்பது விஸ்வாமித்ரமுனி வாக்கு.ஆஹா, இனிய மெட்டு செம்மையான பொருள் ஆழ்ந்த கருத்து. அழகிய ராகத்துடன், திருப்பதி திருவேங்கடவனைத் துயிலெழுப்பும் தெய்வீகப் பாடல். ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்.இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தேன்குரலில் நம் செவிக்குள் பாய்ந்து, நமக்குள் இருக்கும் இறை சிந்தையையும் பக்தியையும் தட்டியெழுப்பிச் சிலிர்ப்பூட்டும் தெய்வப் பிரவாகம் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம். இறைவனைத் துயிலெழுப்பவே சுப்ரபாதம். தமிழில் “திருப்பள்ளியெழுச்சி’’ என்பார்கள். இந்த இடத்தில் ஆதியந்தம் இல்லாத இறைவனுக்கு ஏது தூக்கம் என்றொரு கேள்வி எழலாம். அது துயில் அல்ல. யோக நித்திரை. ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இதன் முதல் வரி விச்வாமித்ர முனிவரின் திருவாக்கில் உதித்தது என்பதே அது.ஸ்ரீ ராமபிரானின் பாலபருவம். அயோத்தி அரண்மனைக்கு விஜயம் செய்த விஸ்வாமித்திரர் தமது யாகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் அசுரர்களை அடக்கவும் அழிக்கவும் ஸ்ரீ ராமனைத் தம்முடன் அனுப்பிவைக்குமாறு தசரதனிடம் கேட்டுக் கொண்டார்.
தசரதரோ தயங்கினார். பின்னர் குலகுரு விசிஷ்டரின் அறிவுரைப்படி ஸ்ரீ ராமனை அனுப்பச் சம்மதித்தார்.கூடவே லட்சுமணனையும் அனுப்பி வைத்தார்.விஸ்வாமித்திரர் அவர்களுக்கு பலா, அதிபலா மந்திரோபதேசம் செய்ததுடன் வழியில் அமைந்திருந்த பல புண்ணியத் தலங்களின் மகிமைகளையும் மகான்களின் சரிதை களையும் விளக்கியவாறு அழைத்துச் சென்றார். இரவுவேளை வந்தது. காட்டில் ஓரிடத்தில் கட்டாந்தரையில் படுத்து உறங்கினர்.பொழுது புலர்ந்தது. அரண்மனையில் பஞ்சணையில் படுத்து உறங்கவேண்டிய அரசிளங்குமரர்கள் தரையில் படுத்திருப்பது கண்டு நெகிழ்ந்த விஸ்வாமித்ர மகரிஷி, மிக்க பரிவுடன் அவர்களைத் துயிலெழுப்பினார். ‘கௌசல்யா சுப்ரஜா ராமா’ என்று முதன் முதலில் திருமாலுக்குச் சுப்ரபாதம் அமைத்த பெருமையும் பாக்கியமும் அவருக்கு ஏற்பட்டது.இந்த வரியைக் கொண்டே துவங்குகிறது, இப்போது நாம் படித்தும் கேட்டும் மகிழும் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதமும் மற்றும் பிற சுப்ரபாதங்களும்.
ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம்
திருமலைவாசனின் சுப்ரபாதத்தில் முதல் பகுதி பெருமானைத் துயிலெழுப்புவதாகவும் அடுத்து அவன் பெருமையைத் தெரிவிக்கும் விதமாகவும் அடுத்து அவனைச் சரணடைந்து இறுதியாக அவனுக்கு மங்களம் பாடுவதாகவும் அமைந்துள்ளது. இப்பாடல்களில் வைணவ சித்தாந்தக் கருத்துகளும், பொதுவான நீதிகளும் அடங்கியுள்ளன என்பது பெரியோர்களின் கருத்து. ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் மொத்தம் 70 ஸ்லோகங்களுடன் நான்கு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி யோக நித்திரையில் இருக்கும் வேங்கடவனைத் துயில் எழச் செய்வது குறித்ததாகும். இதில் 29 ஸ்லோகங்கள் காணப்படுகின்றன. 2ம் பகுதி ஸ்ரீவேங்கடவனைத் துதி செய்தல் அதாவது போற்றி வணங்கும் பகுதி. இதில் 11 ஸ்லோகங்கள் உண்டு. 3ம் பகுதியான பிரபத்தியில் திருமகளின் பெருமை குறித்தும் ஸ்ரீ வேங்கடவனின் திருவடிகளில் சரணாகதி அடைவது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது.
இதில் 16 ஸ்லோகங்கள் உண்டு. 4வது பகுதியான மங்களம் நிறைவுப்பகுதி மங்களகரமான அருளை வேண்டும் வகையில் துதிக்கப்படும். இந்தப் பகுதியில் 14 ஸ்லோகங்கள் அமைந்துள்ளன. அரங்கமா நகருளானுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களைப் பாடியவர் தொண்டரடிப் பொடியாழ்வார். பிற்காலத்தில் சோளிங்கர், ஒப்பிலா அப்பன் திருக்கோயில், திருவல்லிக்கேணி போன்ற சில திவ்யதேசங்களுக்கு அந்தந்த ஸ்தலத்தைச் சார்ந்த சில மஹநீயர்கள் சுப்ரபாதம் இயற்றி, அது அந்தந்த திவ்யதேசங்களில் அனுசரிக்கப்படுகிறது. மற்றபடி பல திருக்கோயில்களில் வேங்கடேச சுப்ரபாதமே பாடப்படுகிறது. இதை இயற்றியவர் மணவாள மாமுனிகளின் எட்டுச் சீடர்களில் ஒருவரான பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் என்ற மகான். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் இந்த மகான். பின்னாளில் இவருடைய வம்சத்தில் பிறந்து, அதே பெயரோடு 93 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்த பிரதிவாதி பயங்கரம் உ.வே.அண்ணங்கராச்சார்யர் சுவாமிகளால், ஸ்ரீ பி.வி. அந்தசயனம் ஐயங்காருக்கு சுப்ரபாதம் முறைப்படி
கற்றுத்தரப்பட்டது.
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர்
ஸ்ரீமணவாளமாமுனிகள், வைணவம் (திருமால் வழிபாடு) வளர்க்க நிறுவிய அஷ்டதிக் கஜங்களில் ஒருவர், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர். இவர் பிள்ளை லோகாச்சார்யர் என்ற ஆசார்ய புருஷரின் வம்சமான முடும்பை நம்பி வம்ஸத்தவர். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் (முன்னவர்) காஞ்சியில் அவதரித்தவர். 1361ம் ஆண்டு பிலவ வருடம் ஆடி மாதம் புஷ்ய நட்சத்திரத் திருநாளே இவருடைய அவதார நன்னாள். கடந்த 2011ல் இவருடைய 650வது அவதார நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. மணவாள மாமுனிகளுடன் திருப்பதி யில் கைங்கர்யம் செய்து வந்தவர். மாமுனிகளின் விருப்பப்படி, அவரது 73வது திருநட்சத்திரத்தை முன்னிட்டு திருவேங்கடவனுக்கு 73 ஸ்லோகங்கள் கொண்ட சுப்ரபாதத்தை இயற்றினார். மாமுனிகள். இந்தச் சுப்ரபாதத்தைத் தினமும் திருமலையில் வழிபாட்டில் ஓத வேண்டும் என்றும் மார்கழி மாதத்தில் மட்டும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும், ஆண்டாளின் திருப்பாவையும் ஓதப்பட வேண்டும் என்றும் நிர்ணயித்தார். அதன்படியே இன்றும் விடியற்காலையில் சுப்ரபாதம் ஓதப்படுகிறது.
பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமிகள் 108 திவ்ய தேசங்களுக்கும் சுப்ரபாதம் பாடியுள்ளார் என்றும் அவை அனைத்தும் ஓலைச் சுவடிகளாக உள்ளன என்றும் சொல்வார்கள்.
அண்ணா ஸ்வாமிகள் அவதாரத்தலம், காஞ்சிபுரம், ஸ்ரீ வரதராஜப் பெருமாள்கோயில் சந்நதி தெருவில் உள்ளது. அங்கே, பிரதிவாதி பயங்கரம் அண்ணாகோயில் என்றே ஒரு சந்நதி அமைந்துள்ளது. அவருடைய சந்நதிகள் காதியார் சந்நதியை நிர்வகித்து வருகின்றனர். மேலும் கீழ்த்திருப்பதி, மாயவரம் அருகில் திருஇந்தளூர் மற்றும் திருநாங்கூர் திவ்யதேசத்திலும் இவருக்குச் சந்நதிகள் அமைந்துள்ளன.
பிரதிவாதி பயங்கரம்
வேதாந்த தேசிகரின் குமாரரான நயனாரசார்யரிடம் ஸாமந்ய சாஸ்திரங்கள் பயின்றார், அண்ணங்கராச்சார்யர். பின்னர் மணவாள மாமுனிகளின் பெருமையைக் கேள்விப்பட்டு, ஸ்ரீ ரங்கம் சென்று அவர் திருவடிகளிலே ஆச்ரயித்து அவர் திருவருளால் அத்யாத்ம சாத்திரங்கள் எல்லாம் கற்று, அவர் நியமித்தருளின அஷ்டதிக் கஜங்களில் ஒருவரானார்.
நயனாரசார்யரிடம் சீடராக இருந்தபோது அத்வைதி பண்டிதர் ஒருவரை வாதத்தில் வென்றமையால் பெரிதும் மகிழ்ந்த நயனாரசார்யர் இவரை பிரதிவாதி பயங்கரரே என்று விளித்துக் கொண்டாடினார். அது முதல் இவரும் இவரது சந்ததியாரும் பிரதிவாதி பயங்கரம் என்றே போற்றி அழைக்கப்படுகிறார்கள்.
The post பக்தி உலா- சுப்ரபாதம் appeared first on Dinakaran.