×
Saravana Stores

டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சித்ரவதை செய்து கைதி மீது தாக்குதல்: மேலும் 11 போலீசார் சஸ்பெண்ட்


வேலூர்: டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்று கைதி சித்ரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் (30) டிஐஜி வீட்டில் வேலைக்கு அழைத்து சென்றபோது பணம், நகைகள் திருடியதாக கூறி அடித்து சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சிவக்குமாரின் தாய் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின்படி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும் சிபிசிஐடி போலீசார் டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கும், வேலூர் கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் சென்னை புழல் 2 சிறைக்கும் மாற்றப்பட்டனர்.

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெரிய குற்றத்தில் ஈடுபட்டுள்ள உயரதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேர் கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள 11 பேரிடம் விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் டிஐஜியின் தனிப்பாதுகாவலர் ராஜி, சிறப்பு படை குழுவை சேர்ந்த ரஷீத், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்ச்செல்வன், விஜி, பெண் காவலர்கள் சரஸ்வதி, செல்வி, சிறை வார்டன்கள் சுரேஷ், சேட்டு ஆகிய 11 பேரை சஸ்பெண்ட் செய்து டிஜிபி மகேஷ்வர்தயாள் உத்தரவிட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால் சிறைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சித்ரவதை செய்து கைதி மீது தாக்குதல்: மேலும் 11 போலீசார் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Vellore ,DIG ,Sivakumar ,Krishnagiri ,Vellore Central Jail ,
× RELATED பஸ்சில் சிக்கி மொபட்டில் சென்ற பெண் பலி