×
Saravana Stores

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள்; கல்லூரிகள் பின்பற்ற வேண்டும்: யு.ஜி.சி அறிவுறுத்தல்


சென்னை: பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, இதனை நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் என யு.ஜி.சி. அறிவுறுத்தி இருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைப்பது என்பது நம்முடைய சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது. மேலும் மனித ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், கழிவு மேலாண்மை சவால்களை எதிர்கொள்வதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கும், பொருளாதார நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் ஒரு முன் முயற்சியாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) வகுத்துள்ளது. இதனை நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என யு.ஜி.சி. அறிவுறுத்தி இருக்கிறது.

அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:
* நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முறையாக தடைசெய்து, அதற்கு பதிலாக பொருத்தமான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்று ஏற்பாடுகள் மூலம் தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
* கேன்டீன்கள், நிறுவன வளாகங்கள், விடுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் போன்றவற்றில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும்.
* ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு இயக்கங்கள் மற்றும் கருத்தரங்கங்களை நடத்த வேண்டும்.

* அனைத்து மாணவர்களும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை நிறுவனத்துக்குள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், வீடுகளிலும் பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
* பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்க்க வளாகங்களில் வாட்டர் டேங்குகள் போன்ற மாற்று வசதிகளை நிறுவ வேண்டும்.
* பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கவர்களுக்கு பதிலாக துணி, காகிதப் பைகள் போன்ற மாற்று தீர்வுகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள்; கல்லூரிகள் பின்பற்ற வேண்டும்: யு.ஜி.சி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : UGC ,Chennai ,
× RELATED நெட் தகுதித் தேர்வில் புதிதாக ஆயுர்வேதா உயிரியல் பாடம்: யுஜிசி அறிவிப்பு