பொள்ளாச்சி : தீபாவளி விடுமுறைக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் திரும்பாதால் மஞ்சி உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனால், தென்னை மட்டையிலிருந்து பிரித்தெடுத்து மஞ்சியாக மாற்றி சுமார் 400க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மஞ்சி மற்றும் மஞ்சி கட்டிகள் வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மஞ்சி தொழிற்சாலையில் சுமார் 75 சதவீத தொழிலாளர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள், தினமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். ஆனால், தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த 30ம் தேதி வடமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர், தீபாவளி பண்டிகை முடிந்து சில நாட்கள் கடந்தும் இன்னும் பணிக்கு திரும்பாததால், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பல தொழிற்சாலைகள் இயங்காமல் உள்ளது.
இதனால், உள்ளூர் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களை கொண்டு மஞ்சியை உலர வைக்கும் பணி நடக்கிறது. வட மாநில தொழிலாளர்கள் பலர், இன்றும் பணிக்கு திரும்பாத, தொழிற்சாலையில் மஞ்சி உற்பத்தி நடைபெறுவது தடைப்பட்டுள்ளது. மேலும், கடந்த சிலநாட்களாக மீண்டும் பருவமழையால், பலதொழிற்சாலைகளில் ஈரப்பதத்துடன் உலர வைக்க பரப்பி போடப்பட்ட மஞ்சிகளும் ஆங்காங்கே தேக்கமடைந்து குவிந்து கிடக்கிறது.
ஒவ்வொரு மஞ்சி தொழிற்சாலையிலும் நாள் ஒன்றுக்கு சுமார் 5 டன் வரையிலான மஞ்சி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், 70 சதவீத வடமாநில தொழிலாளர்களும் இன்னும் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து வேலைக்கு திரும்பாததால், மஞ்சி உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், தற்போது பணிக்கு பலரும் திரும்பி வந்த நிலையில் உள்ளனர், விரைவில் வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு திரும்பியவுடன் மஞ்சி உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது என மஞ்சி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
The post தீபாவளி விடுமுறைக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் திரும்பாததால் மஞ்சி உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.