×
Saravana Stores

சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தொடர் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும்: பேராசிரியர் சங்கம் வலியுறுத்தல்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தொடர் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் என பேராசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன், உயர்கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் பிரேம்குமார், பல்கலைக்கழகத்தில் நடக்கும் விதிமீறல்களை அரசுக்கு தெரிவித்ததன் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியிடை நீக்கத்தில் உள்ளார். பல்வேறு விதிகள், நீதிமன்ற உத்தரவுகள் இதை தவறு என தெரிவித்தும், துணைவேந்தர் கண்டுகொள்ளாமல் உள்ளார். எனவே, அவர் மீண்டும் பணிக்கு திரும்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டியலின ஆசிரியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வுக்கான கோப்புகளை அனுப்பாமல் காலம் கடத்தி வருகின்றனர். மேலும் அவர்களை மரியாதை குறைவாக நடத்துபவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியியல் துறைக்கு நிரந்தர பட்டியலின பெண் பேராசிரியை இருக்கும்போது, தற்காலிக ஆசிரியரை துறைத் தலைவராக நியமித்தது கண்டிக்கத்தக்கது. மேலும், உயிர்வேதியியல் துறையில் கடந்த 2005ம் ஆண்டு உதவிபேராசிரியராக சேர்ந்த பட்டியலினத்தவருக்கு, இன்று வரை பதவி உயர்வு வழங்காமல் இருப்பதை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பிக்க, மற்ற எந்த பல்கலைக்கழகத்திலும் இல்லாத விதிமுறையை பின்பற்ற சொல்வதால், பல மாணவர்கள் தங்களது ஆய்வினை முடிக்காமல் படிப்பை நிறுத்தி வருகின்றனர். 200 புள்ளி இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும், சமூக நீதிக்கு புறம்பாகவும் நிரப்பப்பட்ட அனைத்து பணியிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். சமூக நீதிக்கு புறம்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்து, அங்கு உரிய பட்டியலின ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

நீண்டகாலமாக தேர்வாணையர் பொறுப்பில் உள்ள பேராசிரியர் கதிரவனை அப்பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். இதேபோல், முழு கூடுதல் பொறுப்பு வகிக்கும் துறைத் தலைவர்களை உடனடியாக அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். மேலும், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்ட கூடுதல் முதன்மை தேர்வுக் கண்காணிப்பாளர் மற்றும் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யும் பணியினை மீண்டும் வழங்கிட வேண்டும். 6 மாதங்களாகியும் கூட்டம் நடைபெறாததால் பல்கலைக்கழக நிர்வாகம் முடங்கி உள்ளது.

எனவே, உடனடியாக ஆட்சிக் குழுக் கூட்டத்தினை கூட்டிட வேண்டும். பேராசிரியர் நிலையில் இருந்து மூத்த பேராசிரியர் பதவி உயர்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் வேதியியல் துறைத் தலைவர் ஆகிய இருவரையும் உடனடியாக ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும். இதுபோன்று தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக நிர்வாகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தொடர் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும்: பேராசிரியர் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Professors' Association ,Salem ,Salem Periyar University administration ,Salem Periyar University Teachers Association ,President ,Vaidyanathan ,Higher Education ,Periyar University ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை.யில் விதிகளை...