×
Saravana Stores

சென்னை விமான நிலையத்தில் சேட்டிலைட் போனுடன் வந்த அமெரிக்க பயணி: போலீசார் தீவிர விசாரணை

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்திற்கு தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் வந்த அமெரிக்க பயணியை, பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டேவிட் (55) என்ற பயணி, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்தார். அவருடைய உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்த போது, அவர் சேட்டிலைட் போன் ஒன்றை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக சேட்டிலைட் போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகள் சேட்டிலைட் போன் எடுத்து வந்தால், பாதுகாப்பு அதிகாரிகள் அதை வாங்கி வைத்துக் கொண்டு, ரசீது கொடுத்து விடுவார்கள். அதன் பின்பு அந்த பயணி இந்தியாவில் இருந்து திரும்பி செல்லும் போது, அந்த போனை திருப்பிக் கொடுப்பது வழக்கமாக உள்ளது. இதனால் இந்த அமெரிக்க பயணி, தடையை மீறி சேட்டிலைட் போன் வைத்திருந்ததால், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து விமானத்தில் அந்தமானுக்கு சுற்றுலா பயணியாக வந்ததாகவும், நேற்று முன்தினம் காலை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், அந்தமானிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டு, இப்போது சிங்கப்பூர் புறப்பட்டு செல்வதாகவும், அமெரிக்காவில் இருந்து வரும் போது இந்த சேட்டிலைட் போனை எடுத்து வந்தேன்.

அப்போது எந்த விமான நிலையத்திலும் யாரும் தடுக்கவில்லை. எங்களுடைய நாட்டில் சேட்டிலைட் போனுக்கு எந்த தடையும் இல்லை. எனவே நான் எடுத்து வந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.ஆனால் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அமெரிக்க பயணியின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவர் வைத்திருந்த சேட்டிலைட் போனையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு அமெரிக்க பயணி டேவிட்டையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த சேட்டிலைட் போனையும், பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, அமெரிக்கா பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்துக்கும் தகவல் தெரியப்படுத்தியுள்ளனர்.

The post சென்னை விமான நிலையத்தில் சேட்டிலைட் போனுடன் வந்த அமெரிக்க பயணி: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai International Airport ,Singapore Airlines ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் 453 ஆமைகள் பறிமுதல்