×
Saravana Stores

கோயில்களில் தீபாவளி !

திருக்குடந்தையில் தீபாவளி

திருக்குடந்தையில் தீபாவளி மிகச் சிறப்பாக நடைபெறும். திருவரங்கத்தில் அரங்கனின் நடை அழகு. திருமாலிருஞ்சோலை அழகரின் படை அழகு. ஸ்ரீவில்லிபுத்தூராரின் தொடை அழகு. திருமலை திருப்பதி வேங்கடவனின் வடிவம் அழகு. திருநாராயணபுரத்தானுக்கு முடிஅழகு. திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் உடைஅழகு. சாரங்கனுக்கோ கிடை அழகு. பாம்பணையில் கிடந்த கோலம் அழகு. இந்த அழகு பெருமாளுக்கு அற்புத வைபவம் தீபாவளி வைபவம். குடந்தை சாரங்கபாணி ஆலயக் கல்வெட்டு, தீபாவளியன்று பெருமாளுக்கு விசேஷபூஜை, ஆராதனை நடந்ததைக் கூறுகிறது. இங்கு இன்னும் ஒரு சிறப்புண்டு.

லட்சுமி நாராயணன் என்னும் பக்தர், சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். தனது இறுதிக் காலம் வரையில் பெருமாளுக்கு சேவை செய்தார். இந்த ஆலயத்தின் 65 அடி உயரம் கொண்ட பதினொரு நிலை ராஜகோபுரத்தினைக் கட்டியவரும் இவரே. அமுதனைத் தவிர வேறு உறவு இல்லாத அவர் ஒரு தீபாவளி நன்னாளன்று பெருமாளின் திருவடியை அடைந்தார். அந்த சமயத்தில், பெருமாள் வந்து தன்னுடைய பக்தருக்கு, தானே மகனாக இருந்து, சடங்குகளைச் செய்தாராம்.

இது நடந்த மறுநாள் கோயிலை திறந்தபோது, பெருமாள் விக்கிரகத்தில் ஈர வேட்டியும், மாற்றிய பூணூலுமாக இறைவன் காட்சியளித்துள்ளார். அருகில் தர்ப்பைகள் கிடந்துள்ளன. இது நடந்தது ஒரு தீபாவளித் திருநாளில். இதனை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று உச்சி காலத்தில், திதி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆனால், இதை பக்தர்கள் பார்க்க அனுமதியில்லை. இந்த பக்தரின் சிலையை இப்பொழுதும் நாம் பெருமாள் கோயிலின் பிராகாரத்தில் பார்க்க முடியும்.

திருவரங்கத்தில் தீபாவளி

திருவரங்கத்தில் மிக விசேஷமாக பெருமாள் தீபாவளியைக் கொண்டாடுவார். அதுவும், அவர் மாப்பிள்ளை பெருமாள் அல்லவா. அதனால், தன் மாமனாரான பெரியாழ்வாருக்குச் சீர்செய்வார். இந்த உற்சவத்தை “ஜாலி உற்சவம்’’ அல்லது “ஜாலி அலங்காரம்’’ என்பார்கள். ஆயிரம், ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி, மேளதாளங்கள் முழங்க, நாதஸ்வர இசை ஒலிக்க, வேதபாராயணத்துடன் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பதே ஜாலி அலங்கார வைபவம் ஆகும்.

தீபாவளிக்கு முதல் நாள், மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார். கோயிலில் கைங்கரியம் செய்வோருக்கும், அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சிகைக்காய் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்படும். இரவு உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்யப்படும். கோயிலில் உள்ள ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம் எண்ணெய், சிகைக்காய், மஞ்சள் அனுப்பி வைக்கப்படும்.

திருமலையில் தீபாவளி ஆஸ்தானம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெங்கடாசலபதி சந்நதிக்கு முன்பு உள்ள தங்கவாசலுக்கு அருகே கண்டா மண்டபத்தில் ஆஸ்தான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருமலையில் தீபாவளியன்று பெருமாளுக்கு, தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும். இது மிகச் சிறப்பானது. தீபாவளிக்கு முதல் நாள் அன்று இரவு, மலையப்ப சுவாமி ஊர்வலமாக எழுந்தருளி காட்சி தருவார். பின்பு அங்குள்ள பக்தர்களுக்குத் தைலம் விநியோகிக்கப்படும். அதை மறுநாள் காலையில் தலைக்குத் தேய்த்து, தலைக் குளியல் செய்துகொண்டு, திருவேங்கடமுடையானின் அருளைப் பெறவேண்டும். தீபாவளியன்று சுப்ரபாதம் தொடங்கி, முறையே முதல் மணி நிவேதனம் நடைபெறும்.

தொகுப்பு: நாகலட்சுமி

The post கோயில்களில் தீபாவளி ! appeared first on Dinakaran.

Tags : Tirukutanda ,Thiruvarangal ,Thirumalrunchole ,Srivilliputur ,Thirumalai ,Tirupathi ,Thirunarayanapurathan ,Thiruvallikeni ,Parthasarathi ,
× RELATED அமிர்தவர்ஷிணி யோகம்!