அகந்தை கிழங்கை வெளியே எடுத்துப் போடும்போது இந்த limitation எல்லாமுமே போய், எல்லாமே பிரம்மாண்டமாக விஸ்வரூபமாகத் தெரிகிறது. அங்கு எல்லாமே மஹா பத்மாடவியாக இருக்கிறது.
இந்த மஹா வாராஹி சொரூபமாக மஹா பத்மாடவியில் யார் இருக்கிறாளோ, நகரத்தில் இருக்கக் கூடியவளை பார்த்தோம். நம்முடைய சரீரத்தில் யோக மார்க்கத்தில் பிரம்மரந்திரமாக இருப்பதைப் பார்த்தோம். இப்போது இந்த இரண்டையும் தொடர்புபடுத்த வேண்டுமல்லவா… நமக்குத் தெரியாத ஒரு unknown விஷயத்தையும் நமக்குத் தெரிந்த known விஷயத்தையும் தொடர்பு படுத்தும் ஒரு புள்ளி இருக்கும். நமக்கு சரீரத்தில் இருக்கக்கூடிய ஸ்தானங்கள் ஓரளவு தெரியும். ஆனால், ஸ்ரீநகரத்திலிருக்கக்கூடிய மஹாபத்மாடவி… நகரத்தில் இருக்கக்கூடிய சிந்தாமணி கிருஹம்.., என்றெல்லாம் சொன்னால் தெரியாது. அது unknown ல் இருக்கிறது. இப்படி unknown ஐயும் known ஐயும் தொடர்புபடுத்தும் புள்ளி இருக்கிறது. இந்தப் புள்ளியாக, மையமாக ரிஷிகளும் முனிவர்களும் எதை அமைத்திருக்கிறார்கள் எனில் க்ஷேத்ரங்களை அமைத்திருக்கிறார்கள்.
அப்படி நம்முடைய சரீரத்தில் இருக்கக் கூடிய பிரம்மரந்திரம்தான் மஹாபத்மாடவி. சிந்தாமணி கிரஹத்தில் இருக்கக் கூடிய மஹாபத்மாடவி. இப்போது இங்கு நாம் பார்க்கக் கூடிய சரீரத்தில் விளங்கும் பிரம்மரந்திரதிற்கும், சிந்தாமணியிலிருக்கும் மஹாபத்மாடவிக்கும் ஒரு க்ஷேத்ரம் அமைத்து கொடுத்திருக்கிறார்கள். அந்த க்ஷேத்ரத்திற்குத்தான் திரு ஆனைக்காவல் என்று பெயர்.
ஏன் திரு ஆனைக்கா எனில், இந்த மஹாபத்மாடவி என்கிற நாமா இருக்கிறதல்லவா… இதில் மஹாபத்மம் எனில் யானைகளிலேயே உயர்ந்த அளவிலும் சரி, வலிமையிலும் சரி எல்லாமுமே பிரம்மாண்டமாக இருக்கும். அந்த யானைகளுக்கு மகாபத்மம் என்று பெயர். அந்த மஹாபத்மம் என்கிற யானை எந்த காட்டில் வசிக்கின்றதோ அந்தக் காட்டிற்குத்தான் ஆனைக்கா என்று பெயர். அதுதான் திரு ஆனைக்கா. அப்பேர்ப்பட்ட மஹா பத்மம் என்கிற யானை அங்கிருக்கும் ஜம்புகேஸ்வரரை பூஜை செய்தது. அப்போது மஹாபத்மாடவி என்பது நமக்கு எந்த க்ஷேத்ரமாக இருக்கிறதெனில், அப்படியே சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தால் மஹாபத்மம் என்றால் யானை. அடவி என்றால் காடு. யானை ஆனை காடு. திருஆனைக்கா என்பதேயாகும். இந்த தலத்தில் அம்பாள் மகாவாராஹி சொரூபத்தில் அகிலாண்டேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள்.
இப்போது நம்முடைய பிரம்மரந்திர ஸ்தானம், ஸ்ரீநகரத்திலிருக்கிற மஹாபத்மாடவி இரண்டையுமே இங்கு தொடர்பு படுத்தி இணைக்கும் தலமெனில் திருஆனைக்கா என்கிற க்ஷேத்ரம். நம்முடைய ஆக்ஞா சக்கரத்தில் மஹா வாராஹியாக இருக்கிறாள். ஸ்ரீநகரத்தில் மஹா பத்மாடவியில் அம்பிகை இருக்கிறாள். இந்த இரண்டையும் இணைக்கக் கூடிய திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியாக இருக்கிறாள்.
இப்போது ஒரு விஷயம் புரியும். எப்போது இந்த சாதகனுக்குள் இந்த limitations போய் உடைத்து எப்போது விஸ்வரூபத்தை பிரம்மாண்டத்தை காண்பிக்கிறாளோ… அப்போது அந்த அகிலாண்டத்தை காண்பித்துக் கொடுத்ததினால் அவளுக்கு அகிலாண்டேஸ்வரி என்று பெயர். அகிலாண்டேஸ்வரி இந்த தலத்தில் மஹாவாராஹி சொரூபத்தில் இந்த அகந்தைக்கிழங்கை பிடுங்கி எடுத்துப்போடுகிறாள்.
இங்கு அம்பிகை அகிலாண்டேஸ் வரியாக இருக்கிறாள். சரித்திரத்தில் அம்பிகை உக்கிர ரூபமாக இருந்தபோது ஆதிசங்கரர் தாடங்கம் சாற்றி, அதையும் தாண்டி அம்பிகையின் உக்கிர ரூபம் குறைப்பதற்கு அம்மாவிற்கு முன்னால் குழந்தையை வைத்தால்தான் உக்கிர ரூபம் குறையும் என்று சொல்லி விநாயகரை பிரதிஷ்டை செய்து உக்கிர ரூபத்தை குறைத்தாள் என்பது சரித்திரம்.
இந்த சரித்திரத்திற்குள் ஒரு யோக ரகசியம் உண்டு. இவள் இந்த சரீரத்திற்குள் சுருங்கி சுருங்கி இருப்பதை வெளியே அகந்தைக் கிழங்கை வெளியே எடுத்து அகிலாண்டத்தையே காண்பித்துக் கொடுப்பதால் அகிலாண்டேஸ்வரியாக இருக்கிறாள். எல்லாமும் சரி, இதெல்லாம் பெரிய யோகிகள்… ஞானிகள் அனுபவிக்க முடிகின்றது. ஆனால், இந்த க்ஷேத்ரத்தில் இருக்கும்போது அம்பாளை சாதாரணமாக எல்லோருமே பார்க்க வருவார்கள் அல்லவா… சிறிய வேண்டுதல் முதல் பெரிய விஷயம் வரை வந்து வேண்டிக் கொள்வார்கள் அல்லவா! இப்போது உக்கிரமாக இருந்து சில விஷயங்களை செய்ய வேண்டியதாக இருக்கும்.
அதனால், ஏன் ஆதிசங்கரர் விநாயகரை குழந்தையாக முன்னே வைக்கிறார் என்பது வெளிப்படையாக விஷயமாக இருந்தால் கூட, ஆக்ஞா சக்கரத்திற்குரிய மஹாவாராஹி… மூலாதாரத்திற்குரிய கணபதியை அங்கு வைக்கும்போது, அங்கு ஆக்ஞா சக்கரம் என்கிற ஆறாவது சக்கரத்திற்கும் மூலாதாரம் என்கிற கணபதியும்… இங்கு இரண்டும் நேருக்குநேர் வரும்போது அங்கு ஒருவிதமான சமநிலை ஏற்படுத்தப்படுகிறது. சமநிலை தாமாகவே உருவாகிறது.
சரீரத்திற்குள் இருக்கின்ற இந்த விஷயத்தை பகவத்பாத சங்கரர் இங்கு வெளியில் கொண்டு வந்து காண்பித்துக் கொடுக்கிறார். சரீரத்திற்கு அப்பால் எல்லாவற்றையும் விரிக்கக்கூடிய நிலையில் இருந்த அம்பாளை என்ன செய்கிறார் எனில், ‘‘அம்மா நீ எல்லாவற்றையும் விரிக்கின்றாய். அருள் செய்கிறாய். அப்படி உன்னை தேடிவந்த பக்தர்களுக்கு நீ அருள் செய்ய வேண்டுமல்லவா.. அப்போது நீ என்ன செய்ய வேண்டுமெனில், மூலாதாரத்திற்கு அதிபதியாக இருக்கக் கூடிய உன்னுடைய மகனை கணபதியை உன்னுடைய முன்னாடி வைக்கிறேன். நீ அவரை பார்த்துக் கொண்டே இருந்தால் மூலாதாரத்திற்கும் ஆக்ஞாவிற்கும் ஒரு சமநிலை (balance) ஏற்படுகிறது.
அம்பாள் வந்து நம்முடைய சரீரத்தில் எப்படி அடங்கி குண்டலினியாக இருக்கிறாளோ… அதுபோல தன்னுடைய க்ஷேத்ரத்தில் தன்னுடைய பிரபாவத்தை மொத்தமாக அடக்கி விநாயகரை பார்த்துக் கொண்டே சாந்தமாக இருக்கிறாள். அப்போது பக்தர்களுக்கும் அருள்புரிய முடிகிறது. ஆனால், யோகிகளுக்கு யோக மார்க்கத்தில் அதனுடைய உண்மையாக அகிலாண்டத்தில் பெரிதாக தெரிகின்றது. இப்படி பக்தர்களுக்கும் யோகிகளுக்கும் ஒரே நேரத்தில் இரண்டையும் செய்கிறாள்.
அப்போது ஒரு குரு என்ன செய்து கொடுக்கிறார் எனில், நம்முடைய எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு நடக்கக் கூடிய விஷயத்தை நம்முடைய புரிதலுக்கு ஏற்றமாதிரி கொண்டுவந்து கொடுக்கிறார். சங்கரபகவத்பாதர் இந்த சரித்திரத்தின் மூலமாக இதைத்தான் காண்பித்துக் கொடுக்கிறார். அம்பாள் உக்கிரமாக இருந்தாள் என்றால் கோபமாக இருக்கிறாள் என்றா அர்த்தம். கட்டுப்பாடுகளை மீறி, அதீத சக்தியாக இருக்கிற விஷயங்களை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் நமக்கு புரிகிற மாதிரி சூட்சுமமாக குரு கொண்டு வந்து காண்பித்துக் கொடுக்கிறார். இந்த நாமாவிற்கு தலமே திருவானைக்கா ஆகும். இதைத்தான் நாம் மேலேயும் விரிவாகப் பார்த்து விட்டோம்.
(சுழலும்)
The post அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் அம்பிகை appeared first on Dinakaran.