×

தீபாவளியும் மகாலட்சுமியும்!

மகாலட்சுமியால்தான் தீபாவளியே ஏற்பட்டது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மூலம் ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமான சத்யபாமாவால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டான். நரகாசுரனும், ‘‘நான் இறந்த இந்த நாளை எல்லோரும் தீபாவளித் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென’’ வேண்டிக் கொண்டான். இங்கு வதம் செய்தல் என்பதைவிட, நரகாசுரன் பெரிய வரம் பெற்றான் என்றே புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில், இத்தனை நாளும் நரகாசுரனை, அவனது இல்லாத மாயையான அகங்காரம் ஆட்டிவைத்துக் கொண்டிருந்தது. அந்த தாயார் அதைக் கருணையோடு வெட்டி எறிந்தாள். அந்தக் கணமே தான் இந்த உடம்பல்ல என்கிற தேகாபிமானத்தையும் நரகாசுரன் இழந்து பரமாத்ம சொரூபத்தோடு ஒன்றினான். இந்த நிலையில்தான், எய்திய மாபெரும் பிரம்மானந்தத்தை உலகமே கொண்டாடட்டும் என்றே வேண்டிக் கொண்டான்.

தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து தீபங்கள் ஏற்றி புத்தாடைகள் அணிந்து மகாலட்சுமியை உளமார பிரார்த்திக்க வேண்டும். தீபாவளியன்று நிறைய தீபங்களை ஏற்றிவைத்து பூஜிக்க செல்வ வளம் பெருகும் என்பதை,

‘‘நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன் ச்ரியமச்சனுதே தீ பைர் நிராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸ்ம்ருதா’’
எனும் வரிகள் கூறுகின்றன.

தீபாவளியன்று தலைக்குத் தேய்க்கும் எண்ணெயில் மகாலட்சுமியும், குளிக்கும் வெந்நீரில் கங்கையும் வாசம் செய்கிறாள் என்பதை,

‘‘தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவளிதினே வஸேத்’’
எனும் வரிகள் உறுதிப்படுத்துகின்றன.

எனவே, தீபாவளியன்று மகாலட்சுமியைத் தியானித்து வணங்க சித்தத்தில் தெளிவும், லௌகீக வாழ்வின் வளங்களும், ஞானமார்க்கத்தில் இச்சையும் நிச்சயம் உண்டாகும்.

திருத்தங்கல்: ஸ்ரீ தேவி எனும் மகாலட்சுமி வைகுண்டத்தைவிட்டு புறப்பட்டு ‘தானே மற்ற தேவியரைக் காட்டிலும் சிறந்தவள்’ என்று நிரூபிக்க தங்காலமலை எனும் திருத்தங்கலுக்கு வந்து தவமியற்றினாள். செங்கமல நாச்சியார் எனும் திருநாமத்தோடு இத்தலத்தில் திருமகள் தங்கியதால் திருத்தங்கல் என்றாயிற்று. இத்தலம் விருதுநகருக்கு அருகே அமைந்துள்ளது.

மாமாகுடி: ஸ்ரீ மகாலட்சுமி அவதரித்த தலமாக இதைத்தான் குறிப்பிடுகின்றனர். திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு வடக்கிலும், ஆக்கூருக்கு அருகேயும் இத்தலம் அமைந்துள்ளது.

திருவாலி: திருமங்கையாழ்வாருக்கு அருள்பாலிக்க வேண்டுமென்று லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். லட்சுமியும் திருவாலியில் தவமியற்றும் பூர்ண மகரிஷிக்கு மகளாக அவதரித்தாள். பெருமாளை லட்சுமி தேவியார் மணம்புரிந்து வரும்போது திருமங்கை மன்னன் வழிப்பறி செய்ய அவரது காதில் பெருமாள் அஷ்டாட்சர மந்திரத்தைக் கூறி ஆட்கொண்டார். மூலவராக இருக்கும் நரசிம்மர் லட்சுமியாகிய திருவை ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பதால் திரு ஆலிங்கன ஊர் என்பது திருவாலி என்று மருவியது. இத்தலம் சீர்காழிக்கு அருகேயுள்ளது.

திருக்கண்ணமங்கை: பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட மகாலட்சுமி முதலில் பெருமாளின் அழகிய திருமுகத்தை கண்டாள். அதை உள்ளத்தில் நிறுத்தி இத்தல நாயகனையே திருமணம் செய்ய வேண்டுமென்று இங்கு வந்து தவமியற்றினாள். பெருமாளே தன் பாற்கடலை விட்டு இங்கு வந்து மகாலட்சுமியை மணம்புரிந்ததால் பெரும்புறக் கடல் என்கிற திருநாமமும் பெருமாளுக்கு உண்டு. மேலும், இந்த க்ஷேத்ரத்திற்கே லட்சுமி வனம் எனும் திருப்பெயர் உண்டு.

தொகுப்பு: ஜெயசெல்வி

The post தீபாவளியும் மகாலட்சுமியும்! appeared first on Dinakaran.

Tags : Diwali ,Mahalakshmi ,NARAKASURAN ,SATYABAMA ,SRI MAHALAKSHMI ,SRI KRISHNA ,Narakhasueran ,
× RELATED ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை