- மீன்பிடித்தல்
- பரந்தூர் விமான நிலையம்
- ஐஐடி
- சென்னை
- சென்னை மீனி நிலையம்
- பரந்தூர்
- சென்னை ஒருங்கிணைந்த பெருநக
- தின மலர்
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு 15 நிமிடத்தில் செல்லும் வகையில், ஹைப்பர் லூப் ரயில் சோதனை திட்டத்தை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மற்றும் ஐஐடி குழுவினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இங்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக இது உள்ளது. பல நாடுகளுக்கு இங்கிருந்து விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இதனால் நாள்தோறும் ஏரளமான பயணிகள் விமானத்தில் செல்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாளும் விமான நிலையமாகவும் இது உள்ளது.
இதனால், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாளுக்கு நாள் இட நெருக்கடி அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. இங்கு ₹32,704.92 கோடியில் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பரந்தூர் விமான நிலையத்திற்கான இட அனுமதி விண்ணப்பம் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தால் அனுப்பப்பட்டது. அந்த வகையில், பரந்தூரில் முன்மொழியப்பட்ட விமான நிலையத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதை தொடர்ந்து, அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து பயணிகள் இந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு செல்லும் வகையில், பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூர் விமான நிலையம் வரை ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் கொண்ட அதிவேக ரயில் இயக்குவதற்கான திட்டத்தை முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடைபெற்றால் வரும் 2035ம் ஆண்டிற்குள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பரந்தூர் விமான நிலையத்திற்கு வெறும் 15 நிமிடங்களில் செல்லும் வகையில், இந்த ஹைப்பர் லூப் ரயில் இயக்கப்படும்.
ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் என்பது வெற்றிடமான ஒரு குழாய்க்குள் ரயில் போன்ற வாகனம் மின்னல் வேகத்தில் செல்லக்கூடியது ஆகும். குழாய்க்குள் ரயில் போன்ற வாகனம் இருக்கும். இதில் அமர்ந்து பயணிகள் பயணிப்பார்கள். காந்த அலைகள் மூலம் இந்த ரயில் பயணிக்கும். ஒரே நேரத்தில் 40 பேர் இதில் பயணம் செய்யலாம். இந்த அதிவேக ஹைப்பர் லூப் தொழில்நுட்ப ரயில் திட்டத்தை சாத்தியப்படுத்துவது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் மற்றும் சென்னை ஐஐடி குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
விமானத்திற்கு இணையான வேகம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் – பரந்தூர் விமான நிலையம் வழித்தடம் மட்டுமின்றி, சென்னை துறைமுகம் மற்றும் அருகில் உள்ள முக்கிய தொழில் பகுதிகளை இணைக்கும் விதமாக ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் கொண்ட ரயிலை இயக்குவது தொடர்பாகவும் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாகவும் இதை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குறைந்த அழுத்தக் குழாய்களில் காந்தத்தின் இழுக்கும் சக்தியைப் பயன்படுத்தி விமானம் போன்ற வேகத்தில் ரயில்களை இயக்கும் தொழில்நுட்பம் கொண்ட இந்த ஹைப்பர் லூப் ரயில் சேவைக்கு டிராக் எதுவும் தேவைப்படாது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post மீனம்பாக்கம் – பரந்தூர் விமான நிலையம் இடையே ஹைப்பர் லூப் ரயில் சேவை: ஐஐடி குழுவினர் ஆலோசனை appeared first on Dinakaran.