×

ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்


இஸ்ரேல்: ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக இன்று (அக். 26) அதிகாலை இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. ஈரானில் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த அக். 7-ம் தேதியில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் பல்வேறு தாக்குதல்களை நடத்தியதற்கு பதிலடி என ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல் ராணுவம், காஸாவின் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 14 குழந்தைகள் உள்பட 38 பாலஸ்தீனர்கள் பலியாகினர். இவர்களில் 13 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இஸ்ரேலிய ஏவுகணைகளின் புகையின் விளைவாக பல குழந்தைகள் மூச்சுத் திணறி இறந்துள்ளனர்.

மேலும், லெபனானில் ஒரு விடுதி மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 3 பத்திரிகையாளர்களும் பலியாகினர். அந்த நேரத்தில், விடுதியில் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த 18 பத்திரிகையாளர்கள் தங்கியிருந்துள்ளனர். இது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை என காஸா செய்தி நிறுவனங்கள் இஸ்ரேலை குற்றம் சாட்டி வருகின்றன. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் தற்போது வரை வரவில்லை.

இதன் மூலம் லெபனானில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து காஸாவில் மட்டும் 128 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான ஆண்டனி பிளிங்கனை ஜோர்டான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அய்மன் சஃபாதி சந்தித்து பேசினார்.

இந்நிலையில், ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக இன்று (அக். 26) அதிகாலை இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் வகையில்-இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானில் உள்ள ஆட்சியும் பிராந்தியத்தில் அதன் பினாமிகளும் அக்டோபர் 7 முதல் ஈரானிய மண்ணில் இருந்து நேரடி தாக்குதல்கள் உட்பட ஏழு முனைகளில் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர்.

உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் இஸ்ரேல் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” என இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

The post ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் appeared first on Dinakaran.

Tags : Israel ,Iran ,Israeli army ,Tehran ,Dinakaran ,
× RELATED புத்தாண்டிலும் இஸ்ரேல் தாக்குதல் காசாவில் 9 பேர் பலி; படுகாயம் 12