பெய்ரூட்: நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக பதவி ஏற்க இருந்த ஹசீம் சைபுதீன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. காசாவில் ஹமாசுக்கு எதிராக ஓராண்டாக போர் புரியும் இஸ்ரேல், ஹமாசை ஆதரித்த லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராகவும் சண்டையிட்டு வருகிறது. இதற்காக லெபனானில் வான்வழி, தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் பெய்ரூட்டில் இஸ்ரேல் போர் விமானங்கள் வீசிய குண்டுவீச்சில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து, நஸ்ரல்லாவுக்குப் பிறகு ஹிஸ்புல்லா தலைவராக பொறுப்பேற்க இருந்த ஹசீம் சைபுதீனையும் இஸ்ரேல் கொன்று விட்டதாக நேற்று உறுதி செய்தது. பெய்ரூட்டில் கடந்த 4ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் சைபுதீன் உட்பட 25 ஹிஸ்புல்லா தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் காசாவில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் படைகள் கொன்றது குறிப்பிடத்தக்கது. முக்கிய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டாலும் ஹமாஸ், ஹிஸ்புல்லா படைகள் தொடர்ந்து எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே, பெய்ரூட்டில் போரால் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட டாக்டரை இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி கொன்றதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஐநாவின் விதிகளை மீறும் செயல் எனவும் கூறி உள்ளது.
The post நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா புதிய தலைவராக பதவி ஏற்க இருந்தவரை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல் தகவல் appeared first on Dinakaran.