×
Saravana Stores

திருவேற்காடு நகராட்சி கோலடி சாலையில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி; ஆப்பூர் பகுதிக்கு கொண்டு செல்ல கோரிக்கை

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் 25 மெட்ரிக் டன் குப்பைகள் கோலடி சாலையில் மலைபோல் கொட்டப்பட்டுள்ளன. இந்த குப்பைகளை செங்கல்பட்டு அருகே உள்ள ஆப்பூர் பகுதிக்குக் கொண்டு செல்ல பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் புகழ்பெற்ற கருமாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் அம்மனை தரிசிக்க வருகின்றனர். கோயில் நகரமான திருவேற்காட்டை தூய்மையான நகராக மாற்ற நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக நகர்மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதில், திருவேற்காடு சிறப்புநிலை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் ஏராளமாக‌ உள்ளன. இந்தநிலையில் இந்த நகராட்சிக்கு உட்பட்ட 30 இடங்கள் அதிகளவில் குப்பை உள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

இங்கு தினந்தோறும் உருவாகும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை அகற்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த நிறுவனத்தின் சார்பில் 250க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மூலம் நாள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. திருவேற்காடு நகராட்சியில் தினமும் 25 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை இயற்கையான முறையில் உரமாக்கப்படுகிறது. மக்காத குப்பை மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. இதில் மிக குறைந்த அளவிலேயே மக்கும் குப்பைகள் பிரிக்கப்பட்டு உரமாக்கப்படுகிறது.

பிரிக்க முடியாத குப்பைகள் 3வது வார்டு கோலடியில் இருந்து பருத்திப்பட்டு செல்லும் பிரதான சாலையோரம் உள்ள எரிவாயு தகன மேடை அருகே தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள குப்பைகள் மலைபோல் காட்சியளிக்கிறது. இந்த குப்பைகள் கொட்டும் இடத்தில் மின் உயர் கோபுரம் உள்ளது. இதன் உயர் அழுத்த மின்சார கம்பிகளை தொடும் அளவுக்கு தற்போது குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இப்படி கொட்டப்பட்டு வரும் குப்பையால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இப்படி கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 3 லாரிகளில் செங்கல்பட்டு அருகே உள்ள ஆப்பூர் பகுதிக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அங்கு குப்பைகளை எடுத்துச் செல்லாததால் மலைபோல் குப்பைகள் தேங்கியுள்ளது.

* தொற்றுநோய் பரவும் அபாயம்
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மழைநீர் குப்பையில் ஊறி சாலையோரம் சாக்கடை போல் வடிந்து செல்கிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்துக்கொண்டு கடந்து செல்கின்றனர். இவ்வாறு குப்பை கொட்டப்படுவதால் அந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. மேலும் சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு சுகாதாரக் சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. குப்பைமேடு பகுதி வழியாக வீசும் காற்றில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. தொடர்ந்து குப்பைகள் கொட்டுப்பட்டு வருவதால் அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குப்பை கழிவுகளில் உள்ள உணவுப் பொருட்களை தின்பதற்காக பறவைகள், நாய், பன்றி, மாடுகள் போன்ற கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதன் மூலமும் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

* நகராட்சியே இப்படி செய்யலாமா?
இதுகுறித்து திருவேற்காடு நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் அவர்கள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் குப்பை கொட்டப்பட்டுள்ள இந்த இடத்தைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடர், கிரிமி நாசினி மருந்து தெளிப்பதும் இல்லை. வீடுகளில் குப்பையை சேர்த்து வைக்கக்கூடாது, வீதிகளில் குப்பைகளை கொட்டக்கூடாது, நம் குப்பை நம் பொறுப்பு, நமது சுகாதாரம் என்று சுகாதாரத் துறை சார்பில் பல ஆண்டுகளாக விழிப்புணர்வு பிரசாரங்கள், விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் மூலம் திருவேற்காடு பகுதி முழுவதும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒட்டு மொத்த குப்பைகளையும் ஒரே இடத்தில் மலைபோல் குவித்துவிட்டு, நோய் பரவும் சூழலை நகராட்சி நிர்வாகமே உருவாக்கி வருகிறது என்று இப்போது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மலைபோல் குவிந்து கிடக்கும் இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post திருவேற்காடு நகராட்சி கோலடி சாலையில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி; ஆப்பூர் பகுதிக்கு கொண்டு செல்ல கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Koladi Road ,Thiruvananthapuram Municipality ,Apur ,Poonthamalli ,Thiruvechad ,Appur ,Chengalpattu ,Karumariyamman ,Chennai ,Thiruvechadu ,
× RELATED சிங்கபெருமாள் கோயில் அருகே சாலையை...