×
Saravana Stores

உழவர்களின் உழைப்பால் மண்ணும் பொன்னாச்சு…கம்பத்தில் அறுவடைக்கு தயாரான நெல் சாகுபடி: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதற்காக சின்னமனூர் பகுதியில் அறுவடை இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் தொடங்கி வீரபாண்டி வரை 14,700 ஏக்கர் பரப்பளவில் பெரியாறு பாசனம் மூலம் நெல் இருபோக சாகுபடி நடக்கிறது. இந்தாண்டு கடந்த ஜூன் 1ம் தேதி தமிழக அரசு பெரியாறு அணையில் இருந்து 120 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டது.

இதையடுத்து உழவுப்பணி, நெல் நாற்று நடவு, களையெடுத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. குறிப்பிட்ட நேரத்தில் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், கம்பம் பள்ளத்தில் 11,807 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட முதல் போக நெல் நன்றாக விளைந்து பொன்னிறமாய் அறுவடைக்கு தயாராக உள்ளது. லோயர்கேம்ப் முதல் சின்னமனூர் வரை உள்ள 11,807 ஏக்கர் பரப்பை தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் என அழைக்கின்றனர். இதேபோல, பெரியாறு தண்ணீர் மூலம் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களும் பாசன வசதி பெறுகின்றன.

இந்தாண்டு முல்லைப் பெரியாற்றில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருந்ததாலும், தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லை. கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்படும் ஐ.ஆர்.20, விஜய, எம்.ஜி.ஆர் ரக நெல்லை காங்கேயம், தாராபுரம் பகுதி அரிசி ஆலைகளுக்கு வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். உரிய நேரத்தில் தண்ணீரை திறந்துவிட்ட தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அறுவடைக்கு இயந்திரங்கள் தயார்…
சின்னமனூர் பகுதியில் வேம்படிக்களம், முத்துலாபுரம் பிரிவு, கருக்கட்டான் குளம், பெருமாள் கோயில், நத்தத்து மேடு, உடையகுளம், செங்குளம் ஆகிய பரவுகள் மற்றும் மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம் உள்ளிட பகுதிகளில் 4 ஆயிரம் ஏக்கரில் பெரியாறு பாசனம் மூலம் முதல் போக நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதற்காக வயல்வெளிகளில் அறுவடை இயந்திரங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

The post உழவர்களின் உழைப்பால் மண்ணும் பொன்னாச்சு…கம்பத்தில் அறுவடைக்கு தயாரான நெல் சாகுபடி: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி appeared first on Dinakaran.

Tags : Gampat ,Tamil Nadu government ,Chinnamanur ,Periyaru Dam ,Kampala ,Tamil Government ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...