சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் உள்ள முல்லைப்பெரியாறு தடுப்பணைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதனால், ஆற்றுப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும், ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம், சின்னமனூர் வழியாக மார்க்கையன்கோட்டை, குச்சனூர், சீலையம்பட்டி, கோட்டூர், தேனி, அரண்மனைப்புதூர் வழியாக கொட்டகுடி மற்றும் மூல வைகையாறுகளுடன் கலந்து ஆண்டிபட்டி வைகை அணையில் சென்று சேர்கிறது. இந்த முல்லைப்பெரியாற்றின் பாசனத்தால் லோயர்கேம்ப் துவங்கி பிசி பட்டி வரை சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இரு போகம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
தற்போது தேக்கடி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 2022 கனஅடியாக உள்ளது. இதனால் அணையில் இருந்து தொடர்ச்சியாக 1100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் முல்லை பெரியாறு செல்லும் பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இதில் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை தடுப்பணை, சீலையம்பட்டி தடுப்பணை, வீரபாண்டி தடுப்பணை பகுதிகளில் அதிகளவில் மக்கள் சென்று குளிப்பது வழக்கம். இந்த நிலையில் தொடர்ச்சியாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என பொதுப்பணித்துறையினரும், போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தடுப்பணை பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post பெரியாறு தடுப்பணைகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: குளிக்க பொதுமக்களுக்கு தடை appeared first on Dinakaran.