×

இறுதி கட்டமாக 40 ெதாகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு; ஜம்மு – காஷ்மீரில் இன்றுடன் தேர்தல் நிறைவு: 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை; ஆட்சியை பிடிப்பது யார்?

காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில் இன்றுடன் தேர்தல் நிறைவு பெறுவதால் 40 ெதாகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு நடந்தது. 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அங்கு ஆட்சியை பிடிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, கடந்த 2019ல் ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீர், லடாக்) பிரிக்கப்பட்ட பின்னர், தற்போது சட்டப் பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் தேர்தல் நடைபெறுவதால் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் மக்களவை தேர்தல் நடந்தது. தற்போது முதல் இரண்டு கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், கடைசி மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு 40 தொகுதிகளிலும் இன்று நடைபெறுகிறது.

காலை 7 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். 5,060 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 20,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ஜம்மு, உத்தம்பூர், சம்பா, கதுவா உள்ளிட்ட பகுதிகளிலும் வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா, பந்திபோரா, குப்வாரா ஆகிய பகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 40 தொகுதிகளில் 24 தொகுதிகளில் காங்கிரஸ் – பாஜக இடையே நேரடி போட்டி உள்ளது. மற்ற 16 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர்களுக்கும், ஜம்மு – காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி, அவாமி இதிஹாத் கட்சி கூட்டணி வேட்பாளர்களுக்கும் இடையே போட்டி உள்ளது.

இந்த கட்சிகளில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. தேர்தல் களத்தில் 415 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 17 பேர் முன்னாள் அமைச்சர்கள், 8 பேர் முன்னாள் எம்எல்ஏக்கள், 4 பேர் விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்ளனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் இன்று மாலை 6 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். அக்டோபர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முன்னதாக செப்டம்பர் 18 அன்று நடந்த முதல் கட்டமாக 61.38 சதவீத வாக்கும், செப்டம்பர் 26 அன்று நடந்த இரண்டாம் கட்டத்தில் 57.31 சதவீத வாக்கும் பதிவானது. இன்று நடக்கும் இறுதிகட்ட வாக்குப்பதிவில் 60 சதவீதத்தை தாண்டும் என்றும் தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன.

 

 

The post இறுதி கட்டமாக 40 ெதாகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு; ஜம்மு – காஷ்மீரில் இன்றுடன் தேர்தல் நிறைவு: 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை; ஆட்சியை பிடிப்பது யார்? appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Kashmir ,Jammu and ,Jammu ,Dinakaran ,
× RELATED அக்டோபர் 3-வது வாரத்தில் வடகிழக்கு...