×

விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் பட்டாசு கடை உரிமையாளர்களின் உரிமம் ரத்து, குற்றவியல் நடவடிக்கை

*கலெக்டர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி : பட்டாசு கடை உரிமையாளர்கள், அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், உரிமம் ரத்து செய்வதுடன், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சரயு எச்சரித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்குவது, பாதுகாப்பான பட்டாசு விற்பனை, பட்டாசு கடை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இது குறித்து கலெக்டர் கூறியதாவது:

வருகிற அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர், வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008ல் விதி 84னை முறையாக கடைபிடித்து, இணையதளத்தின் வாயிலாக எந்தவொரு இ-சேவை மற்றும் மக்கள் கணினி மையம் மூலம் உரிய ஆவணங்களுடன் வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதிக்குள் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்கள், சம்மந்தப்பட்ட ஊராட்சி வரி ரசீது, உரிமம் கோரும் இடத்தின் வரைபடம் (6 நகல்கள்), நடப்பு நிதி ஆண்டின் கட்டிட வரி ரசீது, வாடகை கட்டிடமாக இருப்பின் நோட்டரி வழக்கறிஞர் கையொப்பத்துடன் கூடிய ஓராண்டிற்கு குறையாத காலத்திற்கு செய்துகொள்ளப்பட்ட வாடகை ஒப்பந்த பத்திரம் (அசல் மற்றும் 5 நகல்கள்), உரிமக் கட்டணம் ₹500 செலுத்தி, அதற்கான அசல் சலான் இணைக்கப்பட வேண்டும்.

பட்டாசு கடை வைக்கும் கட்டிடம் கல் மற்றும் தார்சு கட்டிடமாக இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களினால் கட்டப்பட்டதாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும். அருகில் குடியிருப்புகள் இருத்தல் கூடாது. எதிர் எதிரே பட்டாசு கடைகள் இருப்பின் உரிமம் வழங்கப்படமாட்டாது. எண்ணெயில் எரியும் விளக்கு, எரிவாயு விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் இதர மின்சாரம் இல்லாத விளக்குகள் கடையில் பயன்படுத்தக் கூடாது.

மின்சார விளக்குகள் பயன்படுத்தும் போது மின்சார ஒயர்கள், சுவிட்சு பெட்டிகள் சுவற்றில் பாதுகாப்புடன், எவ்வித மின்கசிவும் இல்லாமல் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசு இருப்பு வைத்துக்கொள்ளக்கூடாது. அவசர காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் உரிமதாரரும், அவரது பணியாளர்களும் தெரிந்திருக்க வேண்டும். விபத்துகள் ஏதேனும் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையம், தாசில்தார், தீயணைப்பு அலுவலர் மற்றும் உரிமம் வழங்கிய அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களிடம் மட்டுமே பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய வேண்டும்.

உரிமம் பெற்ற இடத்தில் 2 தீணைப்புக் கருவிகள், 2 தண்ணீர் வாளிகள், 2 மணல் நிரப்பப்பட்ட வாளிகள் எற்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பட்டாசுகளை அனுபவம் பெற்றவர்களே கையாள வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கடை அருகில் வாகனங்களை நிறுத்துவதோ அல்லது சுற்றுப்புறத்தின் சூழலை கெடுக்கும் வகையிலோ வியாபாரம் செய்யக்கூடாது. மேற்கண்ட விதிமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். தவறும் உரிமையாளர்களின் உரிமத்தை ரத்து செய்வதுடன், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட எஸ்பி தங்கதுரை, டிஆர்ஓ சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி ஆர்டிஓ பாபு, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் பட்டாசு கடை உரிமையாளர்களின் உரிமம் ரத்து, குற்றவியல் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Collector ,Sarayu ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு...