திருவொற்றியூர்: திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர், மாணவிகளை செல்போனில் படம் எடுத்து, அதை ஆபாசமாக மார்பிங் செய்து, வாட்ஸ் அப்பில் பரப்பிள்ளனர். இதுபற்றி அறிந்த பாதிக்கப்பட்ட ஒரு மாணவி, சம்பந்தப்பட்ட மாணவனை கண்டித்து, கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும், இதுபற்றி பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம், இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்பதற்காக அதை விசாரிக்காமல் மறைக்க முயன்றுள்ளனர்.
மேலும், புகார் கொடுத்த மாணவியிடம், இப்பிரச்னை குறித்து வெளியே தெரிவிக்ககூடாது, என பள்ளி நிர்வாகத்தினர் மிரட்டி உள்ளனர். ஆனால் இந்த விவகாரம் மற்ற பெற்றோருக்கும் தெரியவரவே மற்ற மாணவியரின் பெற்றோரும் பள்ளி நிர்வாகத்தில் முறையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி நிர்வாகம், புகார் கொடுத்த மாணவியையும், மாணவிக்கு ஆதரவாக இருந்த 3 மாணவர்களையும் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதுபற்றி அறிந்த மாணவியின் தந்தை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையரிடம், பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் கொடுத்தார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருவெற்றியூர் மகளிர் போலீசார், செல்போனில் மாணவிகளை போட்டோ எடுத்து, ஆபாசமாக சித்தரித்த 3 மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வரும் நிலையில் தனியார் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகி உள்ளனர். ஏற்கனவே இந்த பள்ளியில் பள்ளி கட்டணம் அதிகமாக வாங்குவதாகவும், பள்ளி கட்டணத்தை முறையாக செலுத்தாத மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்த நிலையில் தற்போது பள்ளியில் மாணவிகளுக்கு நடந்த கொடுமைகளை பள்ளி நிர்வாகமே மறைக்க முயன்று, போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது, திருவொற்றியூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
The post மாணவிகள் படத்தை ஆபாசமாக சித்தரித்த விவகாரம் பிரபல தனியார் பள்ளி மீது போக்சோ வழக்குப்பதிவு: தலைமறைவான நிர்வாகிகளுக்கு வலை appeared first on Dinakaran.