×

மேம்பால பணிக்காக பள்ளம் தோண்டும்போது பாலாற்று குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவிலில் மேம்பால பணிக்காக பள்ளம் தோண்டும்போது, பாலாற்று குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில்வே கேட்டை கடப்பதற்கு மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பாலாற்றில் இருந்து மறைமலைநகர் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு பாலாற்று குடிநீர் பைப் மூலம் செல்கின்றது. இந்த நிலையில், மேம்பால பணிகளுக்காக இந்த பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக பாலாற்று குழாய் பைப் லைன் உடைந்து தண்ணீர் வெளியேறியது.

இந்த தண்ணீர் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் மார்க்கமாக சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்பு, இது குறித்து குடிநீர் வடிகால் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அடிப்படையில் அதிகாரிகள் விரைந்து வந்து உடைப்பு ஏற்பட்ட இடத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், லட்சக்கணக்கில் பாலாற்று குடிநீர் வீணாக சாலையில் ஓடியது குறிப்பிடத்தக்கது.

The post மேம்பால பணிக்காக பள்ளம் தோண்டும்போது பாலாற்று குடிநீர் குழாய் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Singaperumal temple ,Chennai-Trichy National Highway ,Singapperumal temple ,
× RELATED மதுராந்தகம் அருகே அடுத்தடுத்து...