×

மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்கள் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு பேச்சு

சென்னை: தங்களுக்கு இல்லாத அதிகாரங்கள் இருப்பதாகக் கருதி மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற காமன்வெல்த் பாராளுமன்றக் கூட்டமைப்பின் இந்திய பிராந்தியத்தின் 10வது கூட்டத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேசியதாவது: சமீப காலங்களில், மாநில சட்டப்பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களால், சில சமயங்களில் ஒருமனதாக, நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்கள் காரணமின்றி பல ஆண்டுகளாக ஆளுநர் அலுவலகத்தில் முடங்கிக் கிடப்பதால், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல், அவர்களின் அதிருப்திக்கு ஆளாகின்றனர்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் எந்தக் காரணமும் கூறாமல் நிறுத்தி வைத்தார். உச்ச நீதிமன்றத்திடம் இப்பிரச்னை குறித்து எடுத்துச் சென்ற பின்னர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அம்மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்ட ஆளுநர், மசோதாக்களுக்கு தனது ஒப்புதலை வழங்குவதற்கு பதிலாக குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் இந்த மசோதாக்களில் பலவற்றிற்கு எந்தக் காரணமும் கூறாமல் தனது ஒப்புதலை நிறுத்தி வைத்தார்.

முதன்மைச் சட்டங்கள் ஏற்கனவே ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், அந்த மாநிலச் சட்டங்களின் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் மட்டுமே போதும், அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பத் தேவையில்லை. இவ்வாறு மசோதாக்களை நிறுத்தி வைப்பதன் மூலம், தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் நீட் விலக்கு தேர்வு மசோதா ஆளுநர் அலுவலகத்துக்கும், குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கும் இடையே இழுத்தடிக்கப்படுவதால் லட்சக்கணக்கான தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் மாநில சட்ட மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க வேண்டும். தங்களுக்கு இல்லாத அதிகாரங்கள் இருப்பதாகக் கருதி மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

The post மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்கள் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: சபாநாயகர் அப்பாவு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governors ,Speaker ,Appavu ,CHENNAI ,Commonwealth Parliamentary Federation ,Delhi ,Dinakaran ,
× RELATED அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்