×

மலைக்க வைத்த மண்பாண்ட தம்பதி!

நன்றி குங்குமம் தோழி

சிதம்பரத்திலிருந்து பிச்சாவரம் செல்லும் சாலையில் குமாரமங்கலம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் 365 நாட்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும். காரணம், பிச்சாவரம் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் இந்த கிராமம் வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த கிராமத்திற்கு மற்றொரு சிறப்பம்சம் உள்ளது. இங்குள்ள 40 குடும்பங்களும் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழில்தான் அவர்களின் வாழ்வாதாரம். அதனை தன் கணவருடன் இணைந்து செய்து வருகிறார் ராணி.

‘‘திருமணமான பிறகுதான் நான் இந்த தொழிலில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். என் கணவர் 15 வயசில் இருந்தே இதனை செய்து வருகிறார். கல்யாணமான போது, இந்த வேலையை என் கணவர் செய்யும் போது பார்க்க பிரமிப்பா இருக்கும். ஆனால் இதில் பெரிய அளவில் வருமானம் கிடையாது என்பதால், என்ன செய்யலாம்ன்னு யோசித்தேன். எங்க ஏரியாவில் பெண்கள் யாரும் மண்பாண்ட தொழிலில் ஈடுபடவில்லை. இந்த தொழிலை பெண்களும் செய்ய முடியும் என்பதற்கு நாம ஒரு முன் உதாரணமாக இருக்கலாம்ன்னுதான் இவரிடம் எனக்கும் சொல்லித் தரச் சொன்னேன். அவரும் பொறுமையாக ஒவ்வொரு பொருளையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தார்.

இப்ப நானும் மண்பாண்ட பொருட்களை செய்வேன். என் கையிலும் ஒரு தொழில் இருக்கு. அதுவே எனக்கு ஒரு பெரிய தைரியத்தை கொடுக்குது. இருந்தாலும் பலரும் மண்பாண்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார்கள். மார்க்கெட்டில் வந்த பல கண்கவர் சமையல் பொருட்கள் காரணமாக இதனை மக்கள் முற்றிலும் மறந்துவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், மண்பாண்டத்தில் சமையல் செய்து சாப்பிடும் போது நம் உடல் ஆரோக்கியமாக இருந்தது. 100 வயது வரை கடந்து வாழ்ந்து வந்தார்கள். நோய்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. இப்போது மக்கள் பயன்படுத்தி வரும் நான்ஸ்டிக் பாத்திரங்களில் உணவினை சமைப்பதால், அச்சுறுத்தும் பல நோயின் பாதிப்பு ஏற்படுகிறது. காலத்திற்கு ஏற்ப நாம் மாறினாலும், அதற்கான விளைவுகளை நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். மண்பாண்டத்தில் சமைக்கும் உணவின் ருசி வேற எந்த பாத்திரத்தில் சமைத்தாலும் அனுபவிக்க முடியாது’’ என்றவர் காலம் மாறினாலும் நம் பாரம்பரியம் மாறாது என்றார் உறுதியாக.

‘‘மண்பாண்ட பொருட்களின் மகத்துவம் தெரிந்த பலர் இன்றும் இங்கு வந்து மண்பாண்ட பொருட்களை வாங்கி செல்கிறார்கள். சென்னை, பெங்களூர், கொல்கத்தா, கேரளா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலிருந்தும் இங்கு வாங்க வருவார்கள். என்னதான் நவீன உலகம் என்று சொன்னாலும், எவ்வளவுதான் பிரமாண்டமாக கல்யாணம் செய்தாலும். சில ஆயிரம் ரூபாய் கொடுத்து கல்யாண செட் மண்பாண்டங்கள் வாங்கி மணவறையில் வைத்தால் தான் திருமண சடங்கு நிறைவு பெறும்.

ஆனால் என்ன இதனை செய்ய பயன்படுத்தப்படும் மணல்களின் விலை அதிகமாக இருக்கிறது. ஒரு லோடு மணல் எட்டாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடலூருக்கு அருகில் உள்ள பாளையம் என்ற ஊரில் இருந்துதான் மணலை கொண்டு வர வேண்டும். எங்க ஊரில் மட்டுமே இந்த தொழிலினை 40 குடும்பங்கள் செய்து வராங்க. அப்படி இருந்தும் போதிய வருமானம் எங்களுக்கு கிடைப்பதில்லை. எங்களுக்கு பிறகு இந்த தொழிலை செய்ய யாரும் இல்லை.

என் மகன் கூட கட்டிட வேலைக்குதான் போகிறான். ஒரு பெண்ணாக நான் இந்த தொழிலை செய்ய ஆரம்பித்த பிறகு பல பெண்கள் என்னைப் பார்த்து அவர்களும் அதில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இது பெண்களுக்கு கிடைத்த வெற்றி. விடாமுயற்சி, தைரியம், மனதில் வைராக்கியம், தெம்பு இருந்தால் போதும் எந்த தொழிலிலும் கொடிக்கட்டி பறக்கலாம்’’ என்றவர் விவசாயம், இசைக்கு என தனிப்பட்ட கல்லூரிகள் இருப்பது போல் மண்பாண்டம் செய்ய கற்றுக் கொடுக்க தனிப்பட்ட பயிற்சி மையம் வைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

‘‘பானை, சட்டி, உண்டியல், குருவிக்கூடு, அடுப்புகள், குடம், அகல், தவிர குலதெய்வம் கோயில்களுக்கு குதிரை, திருஷ்டி பொம்மைகளும் செய்து கொடுக்கிறோம். மண்ணால் என்னெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்துமே செய்து தருகிறோம். இதில் என்ன சிறப்பு அம்சம் என்றால், மண்பாண்டங்களில் செய்யும் குருவிக்கூடு மழைக்காலங்களில் வெப்பமாகவும் கோடை நாட்களில் குளிர்ச்சியாகவும் இருப்பதால் குருவிகள் தங்க பாதுகாப்பாக இருக்கும்.

தீபாவளி மற்றும் கார்த்திகை காலத்தில் அகல் விளக்குகளை தயாரிப்போம். ஆனால் அதையுமே செம்மண் கொண்டு தயாரிக்கிறாங்க. இதுவும் எங்களின் தொழிலை பாதிக்கிறது. எங்களின் வேலைக்காக வங்கியில் லோன் கேட்டோம். ஆனால் இதற்கு தருவதில்லை என்று சொல்லிட்டாங்க. வரும் வருமானத்தை வைத்துதான் நாங்க வாழ்ந்து வருகிறோம். தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று மண்பாண்ட தொழில். இதைக் காப்பாற்ற அரசு சிறப்பு கவனம் எடுத்து எங்களுக்கு செய்தால் எங்களைப் போல் இந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்’’ என்றார் ராணி.

தொகுப்பு: கவிதா

The post மலைக்க வைத்த மண்பாண்ட தம்பதி! appeared first on Dinakaran.

Tags : Kungum Doshi ,Kumaramangalam ,Chidambaram ,Bichavaram ,Dinakaran ,
× RELATED கனமழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம்...