சென்னை: அதிமுக – பாஜ கூட்டணி பிரிவு என்பது நாடகம் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இந்து சமய அறநிலைய துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கோயில்களில் வழங்கப்பட்டு வரும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலான உணவு பாதுகாப்பு கைபேசி செயலியை தொடங்கி வைத்தார். அன்னதானம் மற்றும் பிரசாதங்களை உணவு பாதுகாப்பு ஆலோசகர்கள் தரம் உறுதி செய்து செயலி மூலம் பதிவேற்றும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை ஆகிய கோயில்களில் முழுநேர அன்னதானத் திட்டமும், 7 கோயில்களில் ஒருவேளை அன்னதானத் திட்டமும் தொடங்கப்படவுள்ளது. சட்டமன்ற அறிவிப்பின்படி, கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரத்தோடு இருப்பதனை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் உறுதி செய்து செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் ஒவ்வொரு கோயிலிலும் ஆண்டிற்கு மூன்று முறை ஆய்வு செய்து அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமாக உள்ளதா எனவும், சமையல் கூடம், உணவருந்தும் கூடம் சுத்தமாக பாராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்கும். மாதந்தோறும் குறைந்தபட்சம் 125 கோயில்களை ஆய்வு செய்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம். அதனடிப்படையில் உணவு கூடங்களை மேம்படுத்துவது, சமைக்கின்ற உணவின் தரம் குறைவாக இருப்பின் அதனை உயர்த்துவது குறித்து முடிவெடுத்து பாதுகாப்பான, தரமான உணவை பக்தர்களுக்கு வழங்குவோம்.
அன்னதானம் தொடர்பான குறைபாடுகள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் கோயில் செயலி வாயிலாகவும், துறை இணையதளத்தில் “குறைகளை பதிவிடுக” என்ற பிரிவின் வாயிலாகவும் கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும் தெரிக்கலாம். எங்களுடைய பணி மக்களை நோக்கி மக்களுடைய தேவைகளை நிறைவு செய்கின்ற கண்ணோட்டத்தோடு சென்று கொண்டிருக்கின்றது. இந்தியா கூட்டணி வலுவாக இருக்கின்றது. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகம் போல் தான் எங்கள் எண்ணங்களுக்கு தெரிகிறது.
The post அதிமுக – பாஜ கூட்டணி பிரிவு என்பது நாடகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சனம் appeared first on Dinakaran.