சென்னை: இஸ்லாமியர்களின் அன்புதான் எனக்கு மிகப்பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்து வருகிறது. இஸ்லாமியர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதுடன் பெருமையும் அடைகிறேன். வழிபாட்டுத் தலங்கள் என்பவை தொழுகைகளுக்கான இடங்கள் மட்டுமின்றி சமூக ஒற்றுமை, சமூக வளர்ச்சியுடன் தொடர்புடையது என கும்பகோணம் அருகே சுவாமி மலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கும்பகோணம் அருகே சுவாமி மலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரையில்:
திமுகவை பொறுத்தவரை எப்போதும் இஸ்லாமியர்களுடன் இருப்பவர்கள் நாங்கள். உள்ளத்தால், உணர்வால் இஸ்லாமியர்களுடன் இருப்பவர்கள் நாங்கள். 1967 தேர்தலில் அண்ணாவுக்கு தோள் கொடுத்து நின்றவர் காயிதே மில்லத். மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தது கலைஞர்தான். உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கலைஞர். இஸ்லாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு கொண்டு வந்தது திராவிட மாடல் அரசுதான். இஸ்லாமியர்களுக்கு கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இஸ்லாமியர்கள் வேறு, தான் வேறு என்று கலைஞர் ஒருபோதும் நினைத்தது கிடையாது. கலைஞர் வழியில் தான் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 1 முதல் 8ம் வகுப்பு வரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த நாள்தோறும் சிந்தித்து செயல்பட்டு வருகிறோம் என முதல்வர் கூறினார்.
இஸ்லாமிய மக்களுக்கு 5 முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு பெற்றுள்ள உலமாக்களுக்கு ரூ.5,000ஆக ஓய்வூதியம் உயர்வு
- கோவையில் புதிய வக்ஃபு தீர்ப்பாயம் அமைக்கப்படும்
- உலமாக்களுக்கு குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500ஆக உயர்த்தி வழங்கப்படும்
- இஸ்லாமிய மக்களுக்கான அடக்கஸ்தலம் அமைக்க மாநகராட்சி பகுதிகளில் இடங்கள் அடையாளம் காணப்படும்
- இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாடு அமைதியாக இருப்பது சிலரின் கண்களை உறுத்துகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான தனது பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடர்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது காலில் விழுவதும், காலை வாரி விடுவதும்தான். இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களின்
பட்டியல் மிகப்பெரியது. அதிமுக ஆதரிக்க விட்டால் சி.ஏ.ஏ. மசோதா நிறைவேறி இருக்காது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியது திமுகதான். சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக போராடிய மக்கள் மீது தடியடி நடத்தியது அப்போதைய அதிமுக அரசுதான்.
சி.ஏ.ஏ. சட்டத்தை தமிழ்நாடு அமல்படுத்தாது என்று உறுதியாக அறிவித்தேன். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக மறுத்தது. முத்தலாக் சட்ட விவகாரத்திலும் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போட்டார். சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிமுகவின் சதி எண்ணத்தை நீங்கள் உணர வேண்டும். வரும் சட்டமன்றத் தேர்தல் என்.டி.ஏ. Vs தமிழ்நாடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
