×

மூலிகைகளின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

சங்கு புஷ்பம்

இலை, தண்டுகள், பூ, வேர் ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது.கஷாயமாகப் பயன்படுத்தலாம். காயவைத்துத் தூளாக்கிப் பயன்படுத்தலாம்.சுரம், நரம்பு நோய்கள், வலிப்பு நோய் குணப்படுத்தும். மூளையைப் பலப்படுத்தும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். பசியை அதிகரிக்கும்.ஞாபகசக்தியை அதிகரிக்கப் பெரிதும் பயன்படுகிறது. கஷாயமெடுத்து 50 மில்லி குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

வயிற்றுக் கோளாறுகள் – சீதபேதி, பேதி, அஜீரணம் குணமாக சங்கு புஷ்பத்துடன் துளசி இலைகளையும் சேர்த்துக் கொதிக்க விட்டு எடுத்துக் குடிக்க வேண்டும். தோலில் நிறமாற்றத்தை உண்டாக்கும்.

எண்ணெய்யில் இலை, பூ, தண்டுகளை இடித்துப் போட்டுக் கொதிக்கவிட்டு எடுத்துப் பயன்படுத்தினால் முடிவளரும். தோலில் எண்ணெயைத் தேய்த்து மசாஜ் செய்து வரவும். முடி நன்கு வளரும்.

கீழாநெல்லி

நெல்லியில் பல ரகங்கள் உள்ளன. தற்போது சிறிய அளவிலான நெல்லிச் செடியின் இலைகளுக்குக் கீழே வரிசையாகக் கடுகளவு காய்களைக் கொண்டதுதான் கீழ்க்காய்நெல்லி. மற்ற நெல்லிக்காய்கள் மரங்களில் காய்த்தாலும், வித்தியாசமாகக் காய்க்கும் இந்த எளிய சிறிய மூலிகையின் பயன் ஒப்பிட முடியாதது என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.

மஞ்சள் காமாலையை எத்தகைய நிலையிலும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது கீழாநெல்லி. கீழாநெல்லியை மருந்தாகப் பயன்படுத்த அத்துடன் வேறு சரக்குகளைச் சேர்க்க வேண்டாம். நேரடியாக பூமியிலிருந்து எடுத்து சுத்தப்படுத்தி அரைத்துச் சாறுபிழிந்து மோரில் கலந்து குடித்தாலே போதும். அற்புதமான பலனை விரைவாக பெற முடியும்.

சிறுநீரைப் பெருக்கும். ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும். உடலைக் குளிர்விக்கும், மலமிளக்கும், கசப்புச் சுவை கொண்டது. உடலுக்குச் சத்தூட்டும்.கீழாநெல்லிச் சாற்றை ஏதாவது எண்ணெயில் கலந்து ஆறாத புண்களில் தடவினால் உடனே ஆறும். தோல்வியாதிகளுக்கு, அரிசி கழுவிய தண்ணீரில் கீழாநெல்லி இலைகளை வேகவிட்டு எடுத்து அரைத்துப் பத்துப்போடவும். சிரங்கு, அரிப்பு, வேறு தோல்வியாதிகளும் குணமாகும்.

நெருஞ்சில்

தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் வளரும் நெருஞ்சில், இலை, பூ, தண்டு, பழம், வேர் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயன்தருவன. குளிர்ச்சியுண்டாக்கும், சிறுநீர் பெருக்கும், பலம் தரும். நெருஞ்சிலைக் காயவைத்துத் தூளாக்கிப் பயன்படுத்தலாம். நீரில் கலந்து குடிக்கலாம்.மூட்டுவலி, வீக்கம் போக்க பழத்தைப் பயன்படுத்துகின்றனர். இதய நோய்களுக்கும் இருமலுக்கும் பயன்படுகிறது. சிறுநீர் கழிக்கும்போது வலியுண்டானால் அதைக் குணப்படுத்தும். சிறுநீரகக் கற்களை வெளியேற்றும். சிறுநீர் வெளிப்படாமல், தடைபட்டால் நெருஞ்சி கஷாயம் உடனடி நிவாரணம் தரும். சிறுநீர் தடையின்றி வெளியேறும்.

சினைப்பைகள் பெண்களுக்கு இரண்டு உள்ளன. வலமும் இடமுமாக உள்ளன. இந்தப் பைகளில் சிலருக்குக் கட்டிகள் ஏற்படுகின்றன. அதை சிஸ்டு என்பர். நெருஞ்சில் இத்தகைய கட்டியைக் கரைத்துவிடும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது. கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கின்றது.

கற்றாழை

கற்றாழை சிறு தொட்டிகளில் கூட வளர்ப்பதைக் காணமுடியும். மிகச்சிறந்த மூலிகைகளில் ஒன்றாக இருக்கும். மலக்குடலில் இது அதிக அளவில் பணிபுரிகின்றது. அதனால் மலக்குடல் பிரச்னைகள் நிறைந்திருப்பவர்களுக்குத் தரப்பட வேண்டிய மூலிகைக் கற்றாழையாகும். உடலில் எரிச்சல், உள்ளேயும் வெளியேயும் உணரப்பட்டால் பயன்படுத்த வேண்டிய மூலிகை கற்றாழை. கற்றாழை தலை, கண்கள், காதுகள், முகம், மூக்கு, வாய், தொண்டை, வயிறு, அடிவயிறு, மலக்குடல், சிறுநீர்க் கோளாறுகள்.

ஆண்களின் புராஸ்டேட் சுரப்பிக் கோளாறுகள், சிறுநீரில் குறைபாடுகள், சுவாசக் கோளாறுகள் இடுப்பு, கைகால்களில் வலி, சோர்வு மூட்டுகளில் வலி போன்ற பல குறைபாடுகளைக் குணப்படுத்தும் ஆற்றல் மிக்க கற்றாழையை பயன்படுத்தி பயனடையலாம். கற்றாழையின் மடல்கள் மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. உடலைக் குளிர்விக்கும் புழுக்கொல்லி, வாயு அகற்றி, சிறுநீர் பெருக்கும். வயிற்றுவலி போக்கும். மாதவிடாய் பிரச்னைகளை சீர்படுத்தும்.கற்றாழைச் சாற்றில் சீராகப் பொடி சேர்த்துக் கலந்து புண்களுக்கு பூச. எரிச்சல் போகும். புண்கள் எளிதில் ஆறிவிடும்.

கண்டங்கத்திரி

சிறுநீர் பெருக்கி, வாயுவசுற்றி, சளியை வெளியேற்றும். சுரம் போக்கும், ஜீரணம் செய்யும். ரத்தக் கசிவை நிறுத்தும்.இலை, பூ, காய், பழம், வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயனுள்ளவை. கஷாயமிடும். காய வைத்துத் தூளாக்கவும் சாப்பிடலாம்.சிறுநீர் பெருக்கும் குணமுள்ளதாக இருப்பதால், மூத்திரப்பையைச் சுத்திகரிக்கும்.

வாதவலி, வீக்கம் இருந்தால் கஷாயமிட்டுக் குடித்தால் குணமாகும்.வெட்டை நோய்க்குக் கஷாயமிட்டுக் கொடுத்தால் குணமாகும். பழங்களைக் காயவைத்துத் தூளாக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். நாட்பட்ட இருமலுக்கும் கொடுக்கலாம். ஆஸ்துமா, இருமல், சுரம், நெஞ்சு வலிக்கும் தொண்டைப் புண்ணுக்கும் மருந்தாகக் கொடுக்கலாம்.

தொகுப்பு: ஜி. லாவண்யா

Tags : Dr. ,Sangu Bushbum ,
× RELATED அதிக சர்க்கரை இதய பாதிப்புகளை ஏற்படுத்தும்