×

உடல் பருமன் என்பது நோய்தான்!

நன்றி குங்குமம் டாக்டர்

உடலை வளர்த்தேன்… உயிர் வளர்த்தேனே!

இன்றைய நவீன உலகில் மனித ஆரோக்கியத்தை மிக ஆழமாகவும், மெதுவாகவும் பாதித்து வரும் பிரச்னைகளில் உடல் பருமன் (Obesity) ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இது ஒரே நாளில் கவனிக்கப்படும் நோயல்ல; பல ஆண்டுகளாக நம் வாழ்க்கை முறையில் நிகழும் சிறு சிறு மாற்றங்களின் சேர்க்கை. வெளிப்படையாகத் தெரியும் கொழுப்பு அதிகரிப்பின் பின்னால், பல உடலியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. அதனால்தான் உடல் பருமனை ஒரு தனிப்பட்ட பிரச்னையாக அல்லாமல், ஒரு சமூக சுகாதார சவாலாக மருத்துவ உலகம் இன்று பார்க்கத் தொடங்கியுள்ளது.

உடல் பருமன் என்பது வெறும் “அதிக எடை” என்ற வார்த்தையால் சுருக்கிவிடக் கூடிய நிலை அல்ல. இது உடலில் தேவையை விட அதிகமாக கொழுப்பு திசுக்கள் (fat tissue) சேர்ந்து, உடலின் இயல்பான செயல்பாடுகளைப் பாதிக்கும் ஒரு நிலை. இந்த கொழுப்பு அதிகரிப்பு உடலின் உள்ளுறுப்புகளின் மீது அழுத்தம் கொடுப்பதுடன், ஹார்மோன் சமநிலையையும், சர்க்கரை மற்றும் கொழுப்பு மாற்றுச் செயல்முறைகளையும் (metabolism) பாதிக்கிறது. இதன் விளைவாக பல நீண்டகால நோய்கள் உருவாகின்றன.

ஒரு காலத்தில் உடல் பருமன் என்பது செல்வச் செழிப்பின் அடையாளமாக கருதப்பட்டது. ஆனால் இன்றைய அறிவியல் மருத்துவம் தெளிவாகச் சொல்வது என்னவென்றால், உடல்பருமன் ஆரோக்கியத்தின் அடையாளம் அல்ல; மாறாக, பல நோய்களின் ஆரம்ப எச்சரிக்கை மணி.உடல் பருமன் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் (Type 2 Diabetes Mellitus), உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம், கொழுப்பு கல்லீரல் நோய், மூட்டுவலி, முதுகுவலி, மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. பெண்களில் மாதவிடாய் சீர்கேடு, மகப்பேறு சிக்கல்கள், கர்ப்பகால உயர் ரத்தஅழுத்தம் மற்றும் சர்க்கரைநோய் போன்றவை ஏற்படலாம்.

ஆண்களில் ஹார்மோன் மாற்றங்கள், தளர்ச்சி, சில சமயங்களில் கருத்தரிப்பு சிக்கல்கள் கூட ஏற்படக்கூடும். இதற்கு மேலாக, சில வகை புற்றுநோய்களுடன் உடல் பருமன் நெருங்கிய தொடர்புடையது என்பதையும் மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.உடல் பருமனின் இன்னொரு முக்கியமான, ஆனால் அதிகம் பேசப்படாத பகுதி மனநலம். உடல் பருமன் கொண்ட பலர் சமூக அவமதிப்பு, கிண்டல், தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை குறைவு போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள். “நீ சாப்பிடுவதை குறை”, “உடற்பயிற்சி செய்தால் போதும்” போன்ற எளிய அறிவுரைகள், அந்த நபரின் மனநிலையை மேலும் பாதிக்கக்கூடும்.

நவீன வாழ்க்கை முறை, உடல் பருமனை உருவாக்கும் சூழலை இயல்பாகவே உருவாக்கியுள்ளது. இன்று பெரும்பாலான வேலைகள் உட்கார்ந்தபடியே செய்யப்படுகின்றன. உதாரணமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை, கைப்பேசி திரையை தொடர்ந்து பார்ப்பது, தொலைக்காட்சி முன் பல மணி நேரம் கழிப்பது.உடல் இயக்கம் குறைவதால், நாம் எடுத்துக் கொள்ளும் கலோரிகள் எரியாமல், மெதுவாக கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகின்றன.

உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமும் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு, அதிக உப்பு கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பேக்கரி உணவுகள், இனிப்புப் பானங்கள் ஆகியவை இன்று எளிதில் கிடைக்கின்றன. பசி இல்லாத நேரங்களிலும் சாப்பிடுவது, மன அழுத்தத்தை குறைக்க உணவை பயன்படுத்துவது, தூங்குவதற்கு முன் கனமான உணவு எடுத்துக் கொள்வது போன்ற பழக்கங்கள் உடல் பருமனை மெதுவாக வளர்க்கின்றன. பாரம்பரிய உணவுகளான கம்பு, கேழ்வரகு, சோளம், காய்கறிகள், மெதுவாக நம் தட்டிலிருந்து மறைந்து வருகின்றன.

தூக்கக் குறைபாடும் உடல் பருமனுடன் நெருங்கிய தொடர்புடையது. குறைவான தூக்கம், இரவு நேர விழிப்பு, மொபைல் மற்றும் டிவி திரை முன் நீண்ட நேரம் செலவிடுவது, இவை எல்லாம் நம் உணவு பழக்கத்தில் மாற்றத்தை விளைவிக்கும். இதனால் அதிக பசி, தவறான நேரங்களில் சாப்பிடும் பழக்கம் உருவாகிறது. மன அழுத்தமும், ஹார்மோன் மாற்றங்கள் மூலம் உடல் பருமனை ஊக்குவிக்கிறது.

குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே உடல் பருமன் அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரிய விஷயம். இன்று பல குழந்தைகள் வெளியில் விளையாடுவதற்குப் பதிலாக, மொபைல், டேப்லெட், வீடியோ கேம்கள் ஆகியவற்றில் அதிக நேரம் செலவிடுகின்றனர். குழந்தைப் பருவத்தில் உருவாகும் உடல் பருமன், பெரிய வயதில் நீண்டகால நோய்களுக்கு அடித்தளமாக அமைகிறது.

இந்த நிலையில், உடல் பருமனை எதிர்க்கும் முயற்சி ஒரே நபரின் பொறுப்பு மட்டும் அல்ல. குடும்பம், பள்ளி, வேலை இடம், சமூக அமைப்புகள் என அனைவருக்கும் பொறுப்பு வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கங்களை ஊக்குவித்தல், உடற்பயிற்சிக்கு இடமளித்தல், குழந்தைகளுக்கு வெளி விளையாட்டை ஊக்குவித்தல், திரை நேரத்தை கட்டுப்படுத்தல் ஆகியவை மூலம் குழந்தைகளில் உடல் பருமனை கட்டுப்படுத்தலாம்.

இந்த தொடர்கட்டுரைகளின் நோக்கம் பயம் அல்லது குற்ற உணர்வு உருவாக்குவது அல்ல. உடல் பருமன் ஒரு நோய் நிலை; அதை புரிந்து கொண்டு, அறிவியல் அடிப்படையில் அணுக வேண்டும் என்பதே இதன் மைய கருத்து. உணவு கட்டுப்பாடு மட்டும் தீர்வு அல்ல; அதோடு உடற்பயிற்சி, மனநலம், தூக்கம், குடும்ப ஆதரவு ஆகிய அனைத்தும் இணைந்த அணுகுமுறை தேவை.

உடல் பருமனைப் பற்றிய இன்னொரு முக்கியமான அம்சம் தவறான நம்பிக்கைகள். “ஒருமுறை எடை அதிகமானால் குறையவே குறையாது”, “மருந்து சாப்பிட்டால்தான் எடை குறையும்”, “ஜிம்முக்கு போனால் மட்டுமே உடல் பருமன் குறையும்” போன்ற கருத்துகள் சமூகத்தில் பரவலாக உள்ளன. இத்தகைய நம்பிக்கைகள் பலரை முயற்சி செய்யாமல் தடுத்து நிறுத்துகின்றன. உண்மையில், உடல் பருமன் கட்டுப்பாடு என்பது கடுமையான கட்டுப்பாடுகள் அல்ல; சிறிய, நிலையான வாழ்க்கை முறை மாற்றங்களின் தொகுப்பாகும். தினமும் 20-30 நிமிடம் நடைப்பயிற்சி, உணவில் சர்க்கரை மற்றும் எண்ணெய் அளவை சற்று குறைத்தல், சரியான நேரத்தில் சாப்பிடுதல் போன்ற எளிய மாற்றங்களே நீண்ட காலத்தில் பெரிய பலனைத் தருகின்றன.

மருத்துவர்கள் அடிக்கடி சந்திக்கும் இன்னொரு சவால்-விரைவான தீர்வுகள் தேடும் மனநிலை. “ஒரே மாதத்தில் 10 கிலோ குறையணும்”, “டீடாக்ஸ் டயட்”, “மேஜிக் பவுடர்”, “ஃபாட் கட்டர்” போன்ற விளம்பரங்கள் பலரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. இத்தகைய முறைகள் சில சமயம் உடல்நலத்திற்கு ஆபத்தாகவும் இருக்கலாம். உடல் பருமன் பல ஆண்டுகளில் உருவானது என்றால், அது குறையவும் நேரம் எடுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மெதுவாகவும், பாதுகாப்பாகவும் குறையும் எடைதான் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.பெண்கள் வாழ்க்கையின் பல கட்டங்களில்-மாதவிடாய் பருவம், கர்ப்பம், பிரசவத்திற்குப் பிந்தைய காலம், மாதவிடாய் நிறுத்தம்-ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். இந்த காலகட்டங்களில் உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். அதனால் பெண்களுக்கான உடல் பருமன் மேலாண்மை தனிப்பட்ட கவனத்துடன் அணுகப்பட வேண்டும். அதேபோல், வயதானவர்களில் தசை குறைவு (muscle loss) மற்றும் (sarcopenic obesity) போன்ற நிலைகளும் கவனிக்கப்பட வேண்டியவை.

இந்த தொடரின் வழியாக, “எடை” என்ற எண்ணிக்கையை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், ஆரோக்கியத்தை மையமாகக் கொள்ளும் அணுகுமுறையை வளர்க்க விரும்புகிறோம். நல்ல ஆரோக்கியம் என்பது மெலிதான உடலமைப்பு மட்டுமல்ல; நல்ல சக்தி, மன நிம்மதி, செயல்திறன், நோய்களிலிருந்து பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. உடல் பருமனைப் புரிந்து கொண்டு, அறிவுடன் எதிர்கொள்வதே உண்மையான தீர்வு.

இந்த பயணத்தில் மருத்துவரும் நோயாளியும், குடும்பமும் சமூகமும் அனைவரும் இணைந்தே நடக்க வேண்டும். இந்த தொடரில், அடுத்த அத்தியாயங்களில் உடல் பருமனின் காரணிகள், வகைகள், உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களில் உள்ள சிறப்பு அம்சங்கள், உணவுப் பழக்க மாற்றங்கள், உடற்பயிற்சியின் அறிவியல், மனநலத்தின் பங்கு, தவறான நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள் போன்ற பல தலைப்புகளை விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

உடல் பருமனை எதிர்க்கும் போராட்டம் ஒருநாளில் முடிவடையும் ஒன்றல்ல. ஆனால் இன்று எடுக்கப்படும் ஒரு சிறிய முடிவு கூட தினமும் சிறிது நடப்பது, உணவில் ஒரு சிறிய மாற்றம், தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது போன்றவற்றால் எதிர்காலத்தில் பெரிய நோய்களைத் தடுக்க முடியும். ஆரோக்கியமான உடல் என்பது ஒரு இலக்கு அல்ல; அது ஒரு தொடர்ச்சியான வாழ்க்கைமுறை. இந்த தொடரின் முதல் அத்தியாயம், அந்த நடைப்பாதையில் நீங்கள் எடுக்கும் முதல் அடி உறுதியான அடியாக இருக்கட்டும்.

தொகுப்பு: பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல்

Tags : Saffron ,
× RELATED மூலிகைகளின் பயன்கள்!