புதுடெல்லி: இந்தியாவின் 77வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து கடமைப்பாதையில், ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவத்தின் வலிமை மற்றும் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்ட அணிவகுப்பு நடந்தது. விழாவில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கடந்த 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி இந்தியா குடியரசாக மாறியது. இந்த நாள் குடியரசு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நாட்டின் 77வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக பிரதமர் மோடி, தேசிய போர் நினைவிடத்தில் தேசத்திற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள வருகைப்பதிவேடு புத்தகத்தில் கையெழுத்திட்ட பிரதமர் மோடி, குடியரசு தின நிகழ்ச்சிகள் நடக்கும் கடமைப்பாதைக்கு வந்தார்.
இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, குதிரைகள் பூட்டப்பட்ட பாரம்பரிய சாரட் வண்டியில் கடமைப் பாதைக்கு வந்தார். அவருடன், இந்தாண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரும் உடன் வந்தனர். கடமை பாதைக்கு வந்த அவர்களை பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
சரியாக காலை 10.30 மணிக்கு, 21 பீரங்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மூவர்ண தேசியக் கொடியை ஜனாதிபதி முர்மு ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் கருப்பொருள் ‘வந்தே மாதரம்’ ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘தற்சார்பு இந்தியா’ ஆகும். வந்தே மாதரம் தேச பக்தி பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அப்பாடல் வரிகளுடன் பிரபல ஓவியர் தேஜேந்திர குமார் மித்ரா வரைந்த அரிதான ஓவியங்களின் கட் அவுட்கள் பார்வையாளர்கள் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அணிவகுப்பு நிகழ்ச்சி முழுவதிலும்ம் பின்னணியில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.
முதல் நிகழ்வாக, விண்வெளிக்கு பயணித்த முதல் இந்தியரான விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு நாட்டின் உயரிய அசோக சக்ரா விருதை ஜனாதிபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அதைத் தொடர்ந்து, சுமார் 100 கலைஞர்கள் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருப்பொருளுடன் அணிவகுப்பை தொடங்கினர். இது தேசத்தின் ஒற்றுமையையும், செழுமையான கலாச்சார பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய இசைக்கருவிகளை கலைஞர்கள் இசைத்தனர். பின்னர், கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பவ்னிஷ் குமார் தலைமையில் அணிவகுப்பு தொடங்கியது.
கடந்த மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுத அமைப்புகளின் மாதிரிகளை காட்சிப்படுத்தும் முப்படைகளின் அலங்கார ஊர்தி அனைவரையும் கவர்ந்தது. பிரம்மோஸ், எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு போன்றவற்றை பயன்படுத்தி ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதை சித்தரிக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றிருந்தன. குடியரசு தின அணிவகுப்பில், இதுபோல ராணுவத்தின் போர் வடிவமைப்பு காட்சிப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை.
இதைத் தொடர்ந்து, சூர்யாஸ்த்ரா யுனிவர்சல் ராக்கெட் லாஞ்சர் சிஸ்டம், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், ஆகாஷ் ஏவுகணை, டி-90 பீஷ்மா, அர்ஜுன் பிரதான போர் டாங்கிகள், பிஎம்பி-2 போர் வாகனம், நாக் ஏவுகணை அமைப்பு எம்கே-2 அணிவகுத்தன. ‘வலுவான தேசத்திற்கு வலுவான கடற்படை’ என்ற கருப்பொருளைத் சித்தரிக்கும் கடற்படை அலங்கார ஊர்தியில், கிபி 5ம் நூற்றாண்டை சேர்ந்த ஐஎன்எஸ்வி கவுண்டின்யா தையல் கப்பல், மராட்டிய கடற்படையின் குராப் வகை கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதயகிரி போன்ற முன்னணி போர் கப்பல்களின் மாதிரிகள் இடம் பெற்றிருந்தன. விமானப்படையின் அணிவகுப்பின் போது, வானில் 2 ரபேல் விமானங்கள், 2 மிக்-29 விமானங்கள், 2 எஸ்யூ-30 விமானங்கள் மற்றும் ஒரு ஜாகுவார் விமானம் ஆகியவை ‘ஸ்பியர்ஹெட்’ வடிவத்தில், ஆபரேஷன் சிந்தூரை சித்தரித்த காட்சிகள் சிலிர்ப்பூட்டின. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தனது அதிவேக சறுக்கு ஏவுகணையான எல்ஆர்-ஏஎஸ்எச்எம்-ஐ காட்சிப்படுத்தியது. இது நிலையான மற்றும் நகரும் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது மற்றும் பல்வேறு சுமைகளைச் சுமந்து செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது. முப்படைகளைச் சேர்ந்த குழுவினரின் மிடுக்கான அணிவகுப்பும், ராணுவ பேண்ட் இசைக்குழுவினரின் அணிவகுப்பும் நடந்தது.
அணிவகுப்பில் மொத்தம் 30 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. இவற்றில் மாநிலங்கள் சார்பில் 17 அலங்கார ஊர்திகளும், ஒன்றிய அரசு துறைகள் சார்பில் 13 அலங்கார ஊர்திகளும் இடம் பெற்றன. தமிழ்நாடு அரசு சார்பில் ‘வளமையின் மந்திரம்: தற்சார்பு இந்தியா’ என்ற கருப்பொருளுடன் உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பெண்கள் சக்தியை பறைசாற்றும் வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த உதவி கமாண்டர் சிம்ரன் பாலா தலைமையில் 140 ஆண்கள் கொண்ட படைப்பிரிவு அணிவகுத்து சென்றது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் சஷஸ்திர சீமா பல் ஆகியவற்றின் கூட்டு ‘டேர்டெவில்ஸ்’ குழுவினரின் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் சுமார் 2,500 கலைஞர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடனமாடிய கலை நிகழ்ச்சி நடந்தது.
அணிவகுப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வான் சாகச நிகழ்ச்சி இறுதியாக நடந்தது. இதில், 16 போர் விமானங்கள், 4 போக்குவரத்து விமானங்கள் மற்றும் 9 ஹெலிகாப்டர்கள் உட்பட 29 விமானங்கள் பங்கேற்றன. ரபேல், எஸ்யூ-30 எம்.கே.ஐ, மிக்-29 மற்றும் ஜாகுவார் விமானங்கள், அத்துடன் சி-130 மற்றும் சி-295, கடற்படையின் பி-8ஐ விமானங்கள் அர்ஜன், வஜ்ராங், வருணா மற்றும் விஜய் ஆகிய வடிவங்களில் சாகசம் செய்து பிரமிப்பை ஏற்படுத்தின.
அணிவகுப்பு முடிந்ததும், வானில் பலூன்கள் பறக்கவிடப்பட்டு, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய ஜனாதிபதி முர்மு, சிறப்பு விருந்தினர்களுடன் ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
முதல் முறை…
- குடியரசு தின அணிவகுப்பில் மொத்தம் 6,000 ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
- சக்திபான், திவ்யாஸ்த்ரா ஆகிய நவீன டிரோன் அமைப்புகள், சூர்யாஸ்த்ரா ராக்கெட் லாஞ்சர் மற்றும் பைரவ் கமாண்டோ பட்டாலியன் படைப் பிரிவு ஆகியவை குடியரசு அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெற்றன. பனிப் பிரதேசங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் இரட்டை திமில் கொண்ட பாக்டிரியன் ஒட்டகங்களும் முதல் முறையாக அணிவகுப்பில் பங்கேற்றன.
- குடியரசு தின விழா பாதுகாப்பு பணியில் 30,000 டெல்லி போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். புதுடெல்லி மாவட்டத்தில் மட்டும் 10,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். 30 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, 3,000 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பங்களுடன் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
- பார்வையாளர்கள் அமரும் கேலரிகளுக்கு கங்கா, காவிரி, கிருஷ்ணா, யமுனா, கோதாவரி, பெரியாறு, பென்னாறு, நர்மதா என ஆறுகளின் பெயர்கள் சூட்பட்டிருந்தன.
- குடியரசு அணிவகுப்பு காலை 10.30 மணிக்கு தொடங்கி 90 நிமிடங்கள் நடந்தது.
தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி
தமிழ்நாடு அரசு சார்பில் ‘வளமையின் மந்திரம்: சுயசார்பு இந்தியா’ என்ற கருப்பொருளில் பாரம்பரியத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்த அலங்கார ஊர்தி இடம்பெற்றது. ஊர்தியின் இருபுறமும், மயிலாட்டம் ஆடும் பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் சிலம்பம் சுற்றும் வீரமங்கையர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். ஊர்தியின் முன்பகுதியில் தமிழ்நாட்டின் கலாசார வலிமையை குறிக்கும் வகையில், காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர் உருவம் வடிவமைக்கப்பட்டிருந்தது. நடுப்பகுதியில், மாசற்ற போக்குவரத்துக்கான மேம்பட்ட மின் வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தியை காட்டும் வகையில் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஊர்தியின் பின்பகுதியில், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்து எடுத்துகாட்டும் வகையில் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
பங்கேற்றவர்கள்
டெல்லி கடமைப்பாதையில் நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், சிவ்ராஜ் சிங் சவுகான், தர்மேந்திர பிரதான், அஸ்வினி வைஷ்ணவ், பியூஷ் கோயல், டெல்லி முதல்வர் ரேகா குப்தா, பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மோடியின் தலைப்பாகை
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் பிரதமர் மோடி கலர் கலரான தலைப்பாகை அணிவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பிரதமர் மோடி தங்க மயில் இறகு உருவம் பொறிக்கப்பட்ட அடர் அரக்கு நிற தலைப்பாகை அணிந்திருந்தார். பக்கவாட்டுப் பகுதியில் பல்வேறு வண்ணங்களும், தலைப்பாகையின் தொங்கும் பகுதி பச்சை நிறத்திலும் இருந்தது. அடர் கடற்படை நீல குர்தா, வெள்ளை பைஜாமாவுடன் வெளிர் நீல நிற அரை ஜாக்கெட் அணிந்திருந்தார்.
துணை ஜனாதிபதி
ராதாகிருஷ்ணன் வாழ்த்து
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாட்டு மக்களுக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில், ‘‘ஜனவரி 26, அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு அஞ்சலியாக மட்டுமல்லாமல், ஜனநாயகத்தை காப்பதில் மக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை மீண்டும் உறுதிப்படுத்தும் புனிதமான நாளாகவும் திகழ்கிறது. இந்த குடியரசு தினம், ஒற்றுமையை வலுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை வளர்க்கவும், குடியரசின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பணியாற்றவும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கட்டும்’’ என கூறி உள்ளார்.
சீனாவும் இந்தியாவும் நட்பான அண்டை
நாடுகள் ஜி ஜின்பிங் வாழ்த்து
சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது வாழ்த்து செய்தியில், ‘‘சீனாவும், இந்தியாவும் ஒருவருக்கொருவர் வெற்றி பெற உதவும் நல்ல அண்டை நாடுகளாகவும், நண்பர்களாகவும், பங்காளிகளாகவும் இருப்பதே இரு நாடுகளுக்கும் சரியான தேர்வு என சீனா எப்போதும் நம்புகிறது. இருதரப்பு உறவுகளின் ஆரோக்கியமான, நிலையான வளர்ச்சியை இரு நாடுகளும் ஊக்குவிக்கும். பரிமாற்றங்களையும், ஒத்துழைப்புகளையும் விரிவுபடுத்தும்’’ என கூறி உள்ளார். பிரான்ஸ், பூடான், ஜப்பான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சீனா, இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் மூவர்ண தேசிய கொடி ஏற்றப்பட்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
வைபர் தீவில் தேசிய கொடி ஏற்றம்
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள வைபர் தீவு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுதந்திர போராளிகள், அரசியல் கைதிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது. இது வரலாற்று சிறப்பு மிக்க செல்லுலார் சிறை கட்டப்படுவதற்கு முன், ஆங்கிலேயர் ஆட்சியில் தண்டனை குடியேற்ற இடமாக இருந்தது. வைபர் தீவில் தற்போது மக்கள்யாரும் வசிக்கவில்லை.
இந்நிலையில் 77வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் நேற்று காலை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு சென்றார். அங்கு தீவுக்கூட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மதியம் 12.30 வைபர் தீவுக்கு சென்ற ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அங்கு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இங்கு சுதந்திரத்துக்கு பிறகு முதன்முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்டிருப்பது குறிப்பித்தக்கது.
இந்தியா-ஐரோப்பா
உறவு வலுவாகிறது
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனின் வருகை, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மையின் வளர்ந்து வரும் வலிமையையும், பகிரப்பட்ட மதிப்புகளுக்கான எங்கள் உறுதிப்பாட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், பல்வேறு துறைகளில் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஆழமான ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்புக்கு உத்வேகம் அளிக்கும்’’ என்று கூறி உள்ளார்.
சரியாக 10.30 மணிக்கு
கொடியேற்றுவது ஏன்?
கடந்த 1950 ஜனவரி 26ல் இந்தியா குடியரசாக மாறியதும் நாட்டின் முதல் ஜனாதிபதியாக ராஜேந்திர பிரசாத் காலை 10.24 மணிக்கு பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக அறிவிக்கப்பட்டு காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி தேசியக் கொடியேற்றி வைக்கிறார்.
அணிவகுப்பில்
ஐரோப்பிய குழு
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ராணுவக் குழுவினரும் அவர்களின் கொடிகளை ஏந்தி அணிவகுப்பில் பங்கேற்றனர். ஐரோப்பாவிற்கு வெளியே இதுபோன்ற ஒரு நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியம் பங்கேற்பது இதுவே முதல் முறை.
அதிபர் டிரம்ப் வாழ்த்து
இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வாழ்த்துச் செய்தியில், ‘‘77வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், இந்திய அரசுக்கும் மக்களுக்கும் அமெரிக்க மக்களின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக, அமெரிக்காவும் இந்தியாவும் வரலாற்றுப் பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன’’ என்று கூறி உள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘பாதுகாப்பு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மீதான நமது நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் குவாட் அமைப்பு மூலம் நமது பல அடுக்கு ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் அமெரிக்கா-இந்தியா உறவு இரு நாடுகளுக்கும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கும் உண்மையான பலன்களைத் தருகிறது’’ என்றார்.
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், குடியரசு தின விழாவில் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக உறவு பாதித்திருக்கும் நிலையில், அதிபர் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க உயர் அதிகாரிகள் இந்தியாவுக்கு வாழ்த்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகை நிலையானதாக பாதுகாக்கிறது இந்தியா
குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்ற ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ‘‘இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்பது வாழ்நாளில் கிடைத்த பெருமை. வெற்றிகரமான இந்தியா உலகை மேலும் நிலையானதாகவும், செழிப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது. மேலும் நாம் அனைவரும் அதனால் பயனடைகிறோம்’’ என புகழ்ந்துள்ளார்.

