தஞ்சை: ‘திமுக மகளிரணியினர் ராணுவப் படையை போல திரண்டுள்ளனர். பெண்கள்தான் எப்போதும் பவர் ஹவுஸாக இருக்கிறார்கள். அரசின் திட்டங்களை பரப்புரை செய்யும் பணிகளை பெண்களிடம்தான் ஒப்படைத்துள்ளோம். தேர்தல் பரப்புரையின் முன்கள வீராங்கனைகளாக மகளிரணியினர் இருக்க வேண்டும்’ என தஞ்சை வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
மேலும் முதலமைச்சர் ஆற்றிய உரையில்; “இராணுவப் படையை, ‘ஃபோர்ஸ்’ என்று சொல்வார்கள். இங்கு நான் நுழைந்தவுடன், உங்களைப் பார்த்தபோது, கருப்பு மற்றும் சிவப்பு ‘டெல்டா ஃபோர்ஸ்’ என்று சொல்லத்தக்க வகையில், இராணுவப் படை போன்று மிடுக்காகத் திரண்டிருக்கும் என் அன்புச் சகோதரிகளான உங்களுக்கு என் முதல் வணக்கம்! வீட்டை மட்டுமல்ல – கழகத்தையும் நாங்கள் காப்போம் என்ற உணர்வோடு கருப்பு – சிவப்பு கடல்போன்று திரண்டிருக்கிறீர்கள்!
வீட்டையும் – கழகத்தையும் மட்டுமல்ல, நம்முடைய தமிழ்நாட்டையும், ஏன் இந்திய நாட்டையும் காப்பதற்கு நாங்கள் தயார். யாருக்கும் நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்ற துணிச்சலுடன் திரண்டிருக்கிறீர்கள்!
தஞ்சை மண், கம்பீரமான மண்! மன்னர்களுக்கு எல்லாம் மன்னரான, ராசராச சோழன் ஆட்சி செய்த சோழ மண், இந்த மண்! கம்பீரமாய் நிற்கும் பெரிய கோயிலும் – காலங்கள் கடந்தும் உறுதியாய் நிற்கும் கல்லணையும் நிலைத்து நிற்கும் மண், இந்த தஞ்சை மண்!
நவீனத் தமிழ்நாட்டின் சிற்பியான – நம் உயிர்நிகர்த் தலைவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரைக் கொடுத்த மண், இந்த மண்! ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பிறந்து, காவிரி நீரைக் குடித்து வளர்ந்தவர், நம்முடைய தலைவர் கலைஞர்! ஏன், நானும் டெல்டாகாரன்தான்!
இந்த மாநாட்டை எழுச்சியோடும் – உணர்ச்சியோடும் ஏற்பாடு செய்திருக்கிறார், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் – கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர், என் அன்புத் தங்கை கனிமொழி அவர்கள்! தங்கை கனிமொழி அவர்களிடம் ஏதாவது ஒரு பொறுப்பை ஒப்படைத்தால், அதை அமைதியாகவும் சிறப்பாகவும் செயல்படுத்திக் காண்பிப்பார் என்பதற்கு இந்த மாநாடும் ஒரு எடுத்துக்காட்டு! கழகப் பணிகளில்தான் இந்த அமைதி; உரிமைக் குரல் எழுப்ப வேண்டிய நேரத்தில் கர்ஜனைமொழியாக மாறிப் போராடுவார், அதுதான் கனிமொழி! அவருக்கு என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகள்!
அதேபோன்று, இந்த மண்டலத்தின் பொறுப்பு அமைச்சர் – முதன்மைச் செயலாளர் – என்னுடைய அன்புச் சகோதரர் – “திருச்சி தந்த தீரர்” கே.என். நேரு. கழகத்தை வளர்ப்பதில் – எழுச்சிமிக்க மாநாடுகளை நடத்துவதில் – மக்களை திரட்டுவதில் – அசகாய சூரர் அவர்! அவருக்கும் – மகளிரணி நிர்வாகிகளுக்கும் – மாவட்டக் கழகத்தின் செயலாளர்களுக்கும் – கழக முன்னணியினருக்கும், என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!
பல்லடத்தில் தீபமாய் ஒளிர்ந்த இந்த வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு, இப்போது தஞ்சையில் தகதக என்று மின்னுகிறது! தஞ்சை என்பது, திராவிட இயக்கத்தின் கோட்டை! வெல்லும் தமிழ்ப் பெண்களே… கழகத்தை காக்க வேண்டிய கடமை – தமிழ்நாட்டை வளர்க்க வேண்டிய கடமை – உங்களுக்குத்தான் நிறைய இருக்கிறது! சாதி ஆதிக்க ஒழிப்பு மட்டுமே திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கம் இல்லை! பெண் விடுதலையும்தான் நம்முடைய அடிப்படை! சாதியால் உயர்வு – தாழ்வு இல்லை என்பதற்காகவும் – ஆண் உயர்ந்தவன் – பெண் தாழ்ந்தவர் என நினைப்பதும், நடத்துவதும் தவறானது என்பதை உணர்த்துவதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் நம்முடைய திராவிட இயக்கம். “சூத்திரர்களைப் போன்று பெண்களும் இழிவானவர்கள்” என்று ஒடுக்கப்பட்ட காலத்தில், இந்த இருவரின் விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் உழைத்தார் தந்தை பெரியார்.
திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சியில்தான், பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை தரப்பட்டது. அந்த வழித்தடத்தில் வந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றினார். பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு உண்டு என்று உரிமை கொடுத்தார் தலைவர் கலைஞர். இது 1929-ஆம் ஆண்டு தந்தை பெரியார் போட்ட தீர்மானம். அதை, 1989-இல் நிறைவேற்றியவர் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள்! பெண் காவலர்களை உருவாக்கியவர் கலைஞர். மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, பெண்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்தியவர் கலைஞர். உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டைக் கொடுத்தார்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இன்றைக்கு 1 கோடியே 30 லட்சம் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உரிமைத் தொகை வழங்கிக் கொண்டிருக்கிறேன்.
நான் C.M. ஆனதும் போட்ட முதல் கையெழுத்தே பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்திற்குத்தான்! ‘ஸ்டாலின் பஸ்’ என்றே மக்கள் அதற்குப் பெயர் வைத்துவிட்டார்கள். அதுதான் அந்தத் திட்டத்தின் வெற்றி!
கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தில் 5 லட்சம் மாணவிகள் பயனடைகிறார்கள்.
கொரோனா கால இன்னல்களில் இருந்து மகளிர் சுய உதவிக் குழுவினரைக் காப்பாற்றிய கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 674 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்துவிட்டு, 17 லட்சத்து 33 ஆயிரத்து 696 சுய உதவிக் குழுக்களுக்கு, 1 லட்சத்து 5 ஆயிரத்து 235 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கிச் சாதனை படைத்திருக்கிறோம்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், மகளிர் சுய உதவிக் குழுவினரை ஈடுபடுத்துவது மூலமாக அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கிறோம்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் சுய உதவிக் குழு மகளிரை பங்கு பெறச் செய்திருக்கிறோம்.
பணிக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பாகத் தங்குவதற்கு, தோழி விடுதிகள் திறந்திருக்கிறோம். அடுத்து, இன்னும் பல மாவட்டங்களில் தொடர்ந்து திறக்கப் போகிறோம்.
அனைத்து மாவட்டங்களிலும் ‘பாலின வள மையங்கள்’ துவக்கப்பட்டிருக்கிறது. இந்த மையங்கள் மூலமாக, குழந்தைத் திருமணம், குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கிறோம்.
உள்ளாட்சியில் மகளிர் அதிகாரம் மிக்கவர்களாக வர வேண்டும் என்று 50 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கி இருக்கிறோம். வெற்றி பெற்ற பெண்களில், 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் சுய உதவிக் குழு மகளிர்தான்! அதில், எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி!
இப்படி, பெண்ணுரிமைக்கான ஆட்சியாக – பெண்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் ஆட்சி இயங்கி வருகிறது.
நான் செல்லும் இடமெல்லாம் கூடும் மக்களில் அதிகம் இருப்பது மகளிர்தான். அதுமட்டுமல்ல, அவர்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சி, அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆட்சியைப் பற்றி கேட்கும்போது, ஒவ்வொருவரும் சொல்கிறார்களே, “உரிமைத்தொகை ரொம்ப பயனுள்ளதா இருக்கு”, “தினமும் ஸ்டாலின் பஸ்லதான் வேலைக்குப் போறேன்”, “புதுமைப்பெண்ல ஆயிரம் ரூபாய் வர்ற காரணத்துனால வீட்டுல காலேஜுக்கு என்னை அனுப்புறாங்க” – இவ்வாறு அவர்கள் சொல்லும்போது எனக்கு மனநிறைவாக இருக்கிறது! இதற்காகத்தான் நான் ஆட்சிக்கு வந்தேன் என்று நினைத்து, உண்மையிலேயே பெருமை அடைந்து கொண்டிருக்கிறேன்.
இந்த 5 ஆண்டில், ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைக் நம்முடைய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் வீடு வீடாகச் சென்று பரப்புரைச் செய்யும் பெரிய கடமையை பெண்களான உங்களை நம்பித்தான் ஒப்படைத்திருக்கிறேன்! வீட்டின் வாசல் வரைதான் ஆண்களால் செல்ல முடியும். ஆனால், நீங்கள் நினைத்தால், ஹால்-க்கு செல்லலாம்; கிச்சன்-க்கு செல்லலாம்; ஏன், அந்த வீட்டுப் பெண்மணியின் மனசுக்குள்ளேயே நீங்கள் நுழைய முடியும்! அதுதான் மகளிருக்கு இருக்கும் பவர்! மகளிர்தான் எப்போதும் பவர்ஹவுஸ்!
மகளிர் குழுவினரின் பயணம், ஒவ்வொரு பாகத்திலும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 8 மகளிர் தினம் வரை நடக்கப் போகிறது! அதற்கு நீங்கள் அனைவரும் தயாராகிவிட்டீர்களா?
அடுத்து, ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என்று தொகுதிகள்தோறும் பிப்ரவரி 28 வரைக்கும் பொதுக்கூட்டங்கள் நடக்கப் போகிறது! இளைஞரணியினரும், பிப்ரவரி 7-ஆம் நாள் விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடத்துவதற்கு ஆயத்தமாகிவிட்டார்கள்! பிப்ரவரி 11 தொடங்கி, பூத் கமிட்டி மாநாடு மண்டல வாரியாக நடக்கப் போகிறது! மாதம் ஒரு மாநாடு! ஆனால், பிப்ரவரி மாதம் மட்டும் 5 மாநாடு நடத்தப் போகிறோம்! நான்கு வாரம்தான் ஆனால், 5 மாநாடு நடக்கப் போகிறது! இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, மார்ச் 8-ஆம் நாள், தீரர்கள் கோட்டமாம் திருச்சியில், பத்து லட்சம் உடன்பிறப்புகள் கூடும், மாநில மாநாட்டைப் பேரெழுச்சியுடன் நடத்தப் போகிறோம்!
அதனால் சொல்கிறேன்… ஜனநாயகப் போர்க்களத்தில், வெற்றியைப் பெறும் வரைக்கும், உடன்பிறப்புகளுக்கான உங்களுக்கும் – உங்களை வழிநடத்தும் இந்த தலைமைத் தொண்டனான எனக்கும், ஓய்வில்லை! உறக்கம் இல்லை!
முக்கியமாக, மகளிரணியினரான நீங்கள், பரப்புரையின் முன்கள வீராங்கனைகளாக நிற்க வேண்டும்! ஏன் என்றால், எதிரணியினரின் பொய்ப் பிரச்சாரங்களை, பெண்களான உங்களால்தான் முறியடிக்க முடியும்! வாதத்தால் உங்களால்தான் வெல்ல முடியும்! அதனால்தான், நான் அதிகமாக உங்களை நம்புகிறேன்! பெண்களையும் – இளைஞர்களையும்தான் நான் அதிகம் நம்புகிறேன்!
இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்த மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், ஏராளமான பொய்களைச் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்! உலக வரைபடத்தில் இருக்கும் அத்தனை நாடுகளுக்கும் சென்றுவிட்டு, தேர்தல் காலங்களில் இந்தியாவிற்குள் வருவார் நம்முடைய பிரதமர். இப்போது தமிழ்நாட்டுக்குத் தேர்தல் சீசன் என்பதால், இங்கேயும் வந்தார். இனியும் வருவார்.
பிரதமர் வருகிறார் என்றதும், நான் அவரிடம் பல கேள்விகளை முன்வைத்தேன். அதை நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்; ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்; பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். ஆனால், அவர், அது எதற்கும் பதில் சொல்லாமல், வழக்கம்போல் பழைய ‘கண்டெண்ட்’-ஐயே பேசிவிட்டு, நமக்கு புது ‘கண்டெண்ட்’ கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று ஒரு அபாண்டமான பொய்யைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். பெண்களான நீங்களே சொல்லுங்கள்… தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லையா? எப்படி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறார் பாருங்கள்… நாட்டில், இப்போது என்ன நடந்துகொண்டு இருக்கிறது… பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், குறிப்பாக, பா.ஜ.க.வினரால் பெண்கள் படும் தொல்லைகள் என்று அனைத்தையும் தெரிந்துகொண்டே, தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்ப விமானத்தில் வந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஆயிரக்கணக்கான பெண்கள் கூடியிருக்கும் இந்த மாநாட்டில் நின்றுகொண்டு, நான் தலைநிமிர்ந்து சொல்கிறேன்… இந்திய மாநிலங்களிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம், எங்கள் தமிழ்நாடுதான்! அடித்துச் சொல்கிறேன். இங்குதான், அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள்! அண்மையில், அவதார் என்ற குழுமம், இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு – ஆரோக்கியம் – கல்வி முதலான சமூகக் காரணிகளில் சிறந்து விளங்கும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்கள்! 125 நகரங்கள் கொண்ட அந்தப் பட்டியலில், முதல் 25 நகரங்களில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், ஈரோடு ஆகிய ஏழு நகரங்கள் இருந்தது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?
மாண்புமிகு பிரதமர் அவர்களே… மணிப்பூரை மறந்துவிட்டீர்களா? 2023-ஆம் ஆண்டு மே மாதம் எரியத் தொடங்கிய மணிப்பூரில், இதுவரைக்கும் அரசு கணக்குப்படி, ஒருவர், இருவர் அல்ல… 260 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், உண்மையான எண்ணிக்கை இன்னும் ஒரு மடங்கு இருக்கும். 3 ஆயிரம் பேர் காயம் அடைந்திருக்கிறார்கள். ஒரு லட்சம் பேருக்கு மேல், மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்துவிட்டார்கள். மூன்று ஆண்டுகளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், ஒன்றியத்தை ஆள்வதும் – மணிப்பூரை ஆண்டதும் பா.ஜ.க.தான். ஆனால், நீங்கள் டபுள் எஞ்சின் என்று ஓட்டிய டப்பா எஞ்சின் மணிப்பூர் மக்களை ஏன் காப்பாற்றவில்லை? மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் வீடு – அமைச்சர்கள் வீடு – எம்.எல்.ஏ.க்கள் வீடு – பிரேன் சிங்கின் மருமகனும் எம்.எல்.ஏ.வுமான ராஜ்குமார் இமோசிங் வீடு என்று அனைத்தையும் போராட்டக்காரர்கள் தாக்கி, தரைமட்டம் ஆக்கியிருக்கிறார்கள். ஆனால், மணிப்பூரை ஆண்ட பா.ஜ.க.வால் ஏன் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை? இதுதான், பா.ஜ.க.வின் லட்சணமா!
மாண்புமிகு பிரதமர் அவர்களே… மணிப்பூரையும் – உத்திரப் பிரதேசத்தையும் சென்று பாருங்கள்! ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பா.ஜ.க. ஆளும் இரண்டு மாநிலங்கள் மூலமாகத்தான் போதைப் பொருட்கள் பரவுகிறது என்று ஆதாரங்களுடன் செய்தி வருவதைப் பத்திரிகைகளில் நீங்கள் படிப்பதில்லையா? இது அனைத்தையும் மறைத்துவிட்டு, அமைதியான தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பாதீர்கள்?
அடுத்து, தங்களுக்குச் சாதகமான ஊடகங்கள் மூலமாக, ‘நரேட்டிவ் செட்’ செய்யப் பிரதமர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். ஏதோ புதிதாகக் கூட்டணியை உருவாக்கிவிட்டது போன்று, அவரும் தோள் உயர்த்தியிருக்கிறார். தோற்ற கூட்டணியை புதுப்பித்துவிட்டு, அதற்கு பில்டப் கொடுத்திருக்கிறார்கள்! அந்தக் கூட்டணியில் இருக்கும் அனைவருமே, E.D. – I.T. – C.B.I. என்று ஏதோ ஒரு வகையில் பா.ஜ.க.விடம் சிக்கி, அந்த வாஷிங் மெஷின் தங்களையும் வெளுக்காதா என்ற நப்பாசையில், கையைக் கட்டி உட்கார்ந்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.
ஏற்கனவே, இதே பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி, 2019 தேர்தலிலும் – 2021 தேர்தலிலும் ஒன்றாக நின்று பார்த்தார்கள். தோற்றுப் போனார்கள். அடுத்து, 2024 தேர்தலில், அ.தி.மு.க.வானது பா.ஜ.க. எனும் வேஸ்ட் லக்கேஜ்-ஐக் கழட்டிவிட்டு நிற்கலாம்; பிறகு சேர்ந்து கொள்ளலாம் என்று மறைமுகக் கூட்டணியாக வந்தார்கள். ஆனால், எந்த கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு “கெட் அவுட்”-தான் என்று தமிழ்நாட்டு மக்கள் திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டார்கள்.
இப்போது, திரும்ப பழையபடியே உடைந்துபோனதை எல்லாம் ஒட்டி எடுத்துக்கொண்டு, புதிதாக NDA அரசு என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அனைவருக்கும் தெரியும். பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி, கட்டாயத்தால் உருவாகியிருக்கும் கூட்டணி. மிரட்டல் உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி. உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக, அமித்ஷா அவர்களால் திணிக்கப்பட்ட கூட்டணி! முழுவதும் தன்னுடைய சுயலாபத்துக்காக – வழக்குகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள – தன்னுடைய பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப் பழனிசாமி உருவாக்கிய சுயநலக் கூட்டணி! டெல்லிக்கு ரகசியமாகப் பல கார்கள் மாறி மாறிச் சென்று, அங்கு வழக்குகளைக் காட்டி மிரட்டியதும், ஏ.சி. காரிலேயே ஒருவருக்கு முகமெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் போனது! எவ்வாறு, கர்ச்சீப் வைத்து, துடைத்துக் கொண்டே வந்தார் என்று நாடே பார்த்தது! அந்தக் காட்சியை நாமும் பார்த்தோம்!
மீண்டும் தங்களின் கண்ணசைவிற்கு ஏற்ப தலையாட்டும் எடுபிடிகளை வைத்துக் கொண்டு, டெல்லியில் இருந்தே தமிழ்நாட்டையும் ஆளலாம் என்று பா.ஜ.க. நினைக்கிறது. உங்களுக்குத் தக்க பதிலடியைத் தமிழ்நாடு தரும்! அ.தி.மு.க. ஆட்சி என்ற பெயரில், பா.ஜ.க.வின் ப்ராக்சி ஆட்சி நடந்ததையே ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழ்நாட்டு மக்கள்! இப்போது, வெளிப்படையாக பா.ஜ.க. அரசு என்றே சொல்லிக் கொண்டு வந்தால், உங்களை எங்களின் எல்லைக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம்!
நடக்கப் போகும் தேர்தல், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி vs NDA கிடையாது… தமிழ்நாடு vs NDA! மறந்துவிடாதீர்கள். தமிழ்நாடு என்றாலே, தமிழ்நாட்டு மக்களுக்காக உண்மையாக உழைக்கும் – நாடே திரும்பிப் பார்க்கும் திட்டங்களைச் செயல்படுத்தும் – தலைநிமிர்ந்து தன்மானத்தோடு போராடும் தி.மு.க.தான்! எனவே, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மீண்டும் வெற்றியை வழங்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.
பெண்கள் – மாணவர்கள் – வணிகர்கள் – உழவர் பெருமக்கள் – விவசாயத் தொழிலாளர்கள் – நெசவாளர்கள் – தொழில் முனைவோர் – ஏழை எளியோர் – அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் என்று அனைவரும் நம்மை நன்றாகப் புரிந்து கொண்டு, நமக்கு ஆதரவைத் தந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் நாம் பெற்றிருக்கிறோம். நான் என்னைவிட அதிகமாக நம்புவது, நம்முடைய தமிழ்நாட்டு மக்களைத்தான்! எனவே, என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களை, நாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்! என்றைக்கும் – எப்போதும் மக்களுடனே இருக்க வேண்டும்! இதுதான், உங்களுடைய சகோதரனாக இருக்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் வேண்டுகோள்! எனவே, அதற்கான பரப்புரையில் ஈடுபட – வெல்லும் தமிழ்ப்பெண்களே புறப்படுங்கள்! மீண்டும் இந்த ஸ்டாலின் ஆட்சி, கழக ஆட்சி, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய – ஓய்வை மறந்து, உழையுங்கள்! உழையுங்கள்! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!” என உரையாற்றினார்.

