மீனம்பாக்கம்: தங்களின் பன்னாட்டு விமானங்களில் பயணம் செய்யும் வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் உயர்ரக வெளிநாட்டு மதுபானங்கள் வழங்கும் திட்டத்தை ஏர்இந்தியா ஏர்லைன்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது. இத்தகைய உயர்ரக மதுபானங்களுக்கு பயணிகளிடம் கட்டணம் வசூலிக்காமல், அவர்களின் டிக்கெட் கட்டணத்திலேயே, பேக்கேஜின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஏர்இந்தியா விமானப் பயணிகளின் கேபின்களான முதல் வகுப்பு, பிசினஸ் கிளாஸ், பிரிமியம் எக்னாமி, எக்னாமி வகுப்பு போன்றவைக்கு தகுந்தாற்போல் வெளிநாட்டு மதுபானங்களின் ரகங்கள் மாறுபடுகின்றன. ஆனால், அனைத்து வகுப்புகளில் செல்லும் அனைத்து பயணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப மதுபானங்கள் வழங்கப்படுகின்றன என்று ஏர்இந்தியா நிறுவனம் தகவல் கூறுகிறது. இதில் மிக உயர்ரக மதுவான ஸ்காட்லாந்து 21, சிங்கிள் மால்ட் உள்பட இத்தாலியின் உயர்ரக மதுபானங்கள், சிவப்பு ஒயின், பீர் ரகங்கள் போன்றவை வழங்கப்படுவதாக ஏர்இந்தியா அறிவித்துள்ளது.
இந்த மதுபான விருந்து அனைத்தும் பன்னாடுகளுக்கு இயக்கப்படும் ஏர்இந்தியாவின் சர்வதேச விமானங்களில் மட்டுமே பயணிகளுக்கு வழங்கப்படும். உள்நாட்டில் இயக்கப்படும் ஏர்இந்தியா பயணிகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் ஏர்இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அகமதாபாத்தில் விமான விபத்துக்குப் பின், ஏர்இந்தியாவின் பன்னாட்டு விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் இதுபோன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, தங்களின் பன்னாட்டு விமானங்களில் பயணிகளை ஈர்ப்பதற்காக ஏர்இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது என்று பயணிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
