×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமி; 24ம்தேதி முதல் 26ம்தேதி வரை சர்வ தரிசன டோக்கன் ரத்து

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரதசப்தமியொட்டி வரும் 24ம்தேதி முதல் 26ம்தேதி வரை சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 25ம்தேதி ரதசப்தமி நடைபெற உள்ளது. ஆண்டு பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் 7 சேவைகள் அன்று அதிகாலை முதல் இரவு வரை நடைபெறும். இதில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ஏழுமலையான் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மினி பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படும் இச்சேவையை தரிசிக்க சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை தினமாக இருப்பதால் அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. இதுதொடர்பாக திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று மாவட்ட மற்றும் தேவஸ்தான அதிகாரிகளுடன் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், கூடுதல் செயல் அலுவலர் வெங்கைய சவுத்ரி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பேசியதாவது:‘மினி பிரமோற்சவம்’ என அழைக்கப்படும் ரதசப்தமி நாளில் கோயிலின் நான்கு மாட வீதிகள், வரிசைகள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பக்தர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

ரதசப்தமி நாளில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு கூடுதலாக 5 லட்சம் லட்டுகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். வரும் 25ம்தேதி ஆர்ஜித சேவை, சிறப்பு தரிசனங்கள், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவைகள், வெளிநாடுவாழ் இந்தியர்கள், 1 வயது குழந்தைகளின் பெற்றோர், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் 24ம்தேதி முதல் 26ம்தேதி வரை திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது. எனவே ஜனவரி 24ம்தேதி விஐபி தரிசனங்களுக்கு எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது என்றார். 18 மணி நேரம் காத்திருப்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 74,056 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 27,517 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.3.98 கோடியை காணிக்கையாக செலுத்தினர். இன்று காலை வைகுண்டம் காத்திருப்பு வளாகத்தில் உள்ள 17 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

 

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,Rathasapthami ,Sarva Darshan Tokens ,Tirumala ,Brahmotsavam ,
× RELATED பெரும்பாலான கட்சிகள் கூட்டணிக்கு...