கொல்கத்தா: தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யாதது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் மேற்கு வங்க தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் போலியான பெயர்களை சேர்த்தது மற்றும் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் போது பர்பா மற்றும் மொய்னா தொகுதிகளைச் சேர்ந்த தேபோத்தம் தத்தா சவுத்ரி, பிப்லப் சர்க்கார், ததாகதா மண்டல் மற்றும் சுதீப்தா தாஸ் ஆகிய 4 தேர்தல் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மாநில அரசு தன்னிச்சையாக விசாரணை நடத்தி ஒருவரை விடுவித்தும், மற்றொருவருக்கு சிறிய தண்டனையும் வழங்கி வழக்கை முடித்து வைத்தது.
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு முடிவெடுத்தது விதிகளுக்கு முரணானது என்பதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று தலைமை தேர்தல் ஆணையம் மேற்கு வங்க தலைமை செயலாளர் நந்தினி சக்ரவர்த்திக்கு கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் ‘குற்றச்சாட்டுக்கு ஆளான 4 அதிகாரிகள் மீது ஏன் இன்னும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறித்து 72 மணி நேரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
வரும் சனிக்கிழமை அதாவது 24ம் தேதி மாலை 5 மணிக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசு மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கை சட்டப்படி செல்லாது என்றும், அதனை ‘சட்ட ரீதியாக இல்லாத ஒன்று’ என்றும் ஆணையம் நிராகரித்துள்ளது. மாநிலத்தின் மொத்த வாக்காளர்களில் கால்வாசி பேர் தரவுகளில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கை முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
