×

“அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அறிக்கை வெளியிடும் ஆளுநர் ஆர்.என்.ரவி” : அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலடி!

சென்னை : தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசே பாராட்டிய நிலையை அறியாமல், ஒரு எதிர்கட்சி தலைவர் போல் அறிக்கை வெளியிடும் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், “தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இன்று (20.1.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் MSME நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளதாகவும், தொழில் முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்படுள்ளனர் என்றும், இந்தியாவில் 55 மில்லியன் MSME நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது எனவும், அதில், தமிழ்நாட்டில் 4 மில்லியன் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் அவர்கள் எவ்வித ஆதாரம் இன்றியும், புள்ளிவிவரங்கள் இல்லாமலும் தமிழகத்தில் உள்ள MSME நிறுவனங்களையும், தமிழ்நாடு அரசையும் அவமதிக்கும் வகையில் அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார்.
இன்று (20.1.2026) வரை நாட்டில் 4,51,01,634 (45 மில்லியன்) MSME நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய அரசின் MSME துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://dashboard.msme.gov.in) குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் அவர்கள் 55 மில்லியன் MSME நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என எதை வைத்து கூறுகிறார் என தெரியவில்லை.

இதே இணையதளத்தில், நாட்டில் குஜராத் மாடல் என்று அவர்களால் கூறப்படும் மத்தியிலும் – மாநிலத்திலும் ஒரே ஆட்சியில் உள்ள குஜராத் மாநிலத்தில் 29,13,816 MSME நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை விட பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தில் 47,17,342 MSME நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் எவ்வித உதவியும் இன்றி அரசியல் அழுத்தங்களையும் மீறி, தமிழ்நாட்டில் 40,13,701 MSME நிறுவனங்கள் பதிவு செய்துள்ள சூழலை உருவாகியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் அவர்கள். MSME நிறுவனங்கள் என்பது அந்தந்த இடங்களில் கிடைக்க கூடிய மூலப்பொருட்களை ஆதராங்களாக கொண்டு உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகவும், பெரு நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களாகவும் உள்ளதால், அந்நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல எவ்வித அவசியமும் இல்லை. எவ்வித ஆதாரங்களும் இன்றி குறை கூற வேண்டும் என்ற ஓரே நோக்கத்திற்காகவே ஆளுநர் அவர்கள் குறைக் கூறியுள்ளார்.

ஆளுநர் அறிக்கையில், தமிழ்நாட்டில் MSME நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளுடனான தவறான வெளியுறவுக் கொள்கைகளால் தமிழ்நாட்டில் உள்ள MSME நிறுவனங்கள் மட்டும் அல்ல: இந்தியாவில் உள்ள அனைத்து MSME நிறுவனங்களுமே பெரும் அழுத்தத்தில் உள்ளது.

கழக அரசு பொறுப்பேற்றபோது கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட MSME நிறுவனங்களை மீட்டெடுக்க, டாக்டர் என்.சுந்தரதேவன் இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தியும், செயல்பாட்டில் உள்ள திட்டங்களில் சீர்த்திருத்தங்கள் செய்தும் MSME நிறுவனங்களை மீட்டெடுத்துள்ளார் முதல்வர் அவர்கள்.

120-க்கும் மேற்பட்ட உரிமங்களை ஓரே இடத்தில் பெற்று வழங்கும் ஒற்றைச் சாளர இணைய தளம் 2.O திட்டத்தின் மூலம் 1,00,269 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 91,831 நிறுவனங்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும். சுய தொழில் திட்டங்காளான NEEDS, UYEGP, PMEGP, PMFME ஆகிய திட்டங்களுடன், சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களையும் தொழில் முனைவோர்களாக உருவாக்கும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம் உள்ளிட்ட 6 திட்டங்களின் கீழ், கடந்த 4 ½ ஆண்டுகளில், ரூ.2,407.97 கோடி மானியத்துடன், ரூ.6,200.16 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 80,169 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டு, அதன் மூலம் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

MSME தொழில் நிறுவனங்கள் எளிதாக தொழில் தொடங்க, தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 43,056 தொழில் முனைவோர்களின் ரூ.7,894 கோடி கடனுக்கு, தமிழ்நாடு அரசு ரூ.750.74 கோடி கடன் உத்தரவாதம் வழங்கி உள்ளது. TN-TReDS திட்டத்தின் கீழ் 34,557 விலைப்பட்டியல்களுக்கு ரூ. 5,171.91 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சமச்சீர் தொழில் வளர்சியை கொண்டு வருவதற்கதாக 12 மாவட்டங்களில் ரூ.387 கோடி மதிப்பீட்டில், 697.81 ஏக்கர் பரப்பளவில், 17 சிட்கோ தொழில்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 14 மாவட்டங்களில் 543.31 ஏக்கர் பரப்பளவில் ரூ.419.58 கோடி மதிப்பீட்டில் 16 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

PMFME திட்டத்தினை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தியமைக்காக குடியரசு தலைவர் அவர்கள் விருது வழங்கி பாராட்டியுள்ளார். ஒன்றிய அரசு வெளியிட்ட தர வரிசை பட்டியலில்-Start up -TN நிறுவனம் இந்திய அளவில் முதல் இடம் பிடித்து சிறந்த செயற்பாட்டாளர் என்ற விருதினை பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், ரூ.3,617 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், மாண்புமிகு முதல்வர் அவர்கள் MSME துறையின் வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி, 5 ஆண்டுகளில், ரூ. 6,625 கோடி நிதி ஒதுக்கி சாதனை படைத்துள்ளார். ஆளுநர் அவர்கள் MSME துறையை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது என உண்மைக்கு புறம்பாக கூறியுள்ளார்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில், முதல்வர் அவர்களால் செயல்படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்களால் பொருளாதார வளர்சியில் குஜராத், மகாராஷ்ரா மாநிலங்களை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்சியான 11.19 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்து கொண்டே தமிழ்நாட்டின் வளர்ச்சியை அறியாமல் ஒரு எதிர்கட்சி தலைவர் போல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அறிக்கையை வெளியிடுவது ஆச்சரியமாக உள்ளது.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Governor ,R.N. Ravi ,Minister ,T.M.O. Anparasan ,Chennai ,Tamil ,Nadu ,Governor R.N. Ravi ,Union government ,Tamil Nadu ,
× RELATED வரும் 23ம் தேதி பிரதமர் மோடி வருகை:...