சென்னை: தமிழ்நாட்டில் 2025-26ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட 1.39 இலட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 84,848 விவசாயிகள் பயன் பெறும் வகையில் நிவாரணத்தொகையாக ரூ 111.96 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2025-2026ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக 1.39 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 01.12.25 அன்று ஆய்வு கூட்டம் நடத்தி பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை உடனடியாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நெல் உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக எக்டருக்கு ரூ. 20,000/-ஆகவும் வழங்க உத்தரவிட்டார்.
இவ்வுத்தரவின்படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது.
டித்வா புயல் மற்றும் வட கிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழை மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு 3.60 இலட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.289.63 கோடி நிவாரணத்தொகை 2025 டிசம்பர் மாதம் ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டு நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இயற்கைப்பேரிடர்களால் எப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளின் துயர்துடைக்க நேசக்கரம் நீட்டி, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை அளித்து வருகிறது.
தற்போது ஒப்பளிக்கப்பட்ட நிவரணத்தொகையான ரூ.111.96 கோடி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம். கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளுர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர். திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
