புதுடெல்லி: ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளதால், இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.ஈரானில் நிலவும் மோசமான பொருளாதார சூழல் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதாகக் கூறி, அந்த நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அங்கு நடக்கும் கலவரத்தில் சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்திருந்தது. இந்நிலையில், ஈரானுடனான வர்த்தகத்தை முடக்க நினைக்கும் அதிபர் டிரம்ப், அந்நாட்டுடன் வணிகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் தற்போது 25 சதவீதம் கூடுதல் வரியை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் நாட்டுடன் வணிகம் செய்யும் எந்த நாடாக இருந்தாலும், அவர்கள் அமெரிக்காவுடன் செய்யும் வர்த்தகத்திற்கு 25 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது மற்றும் இதுவே இறுதியானது’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈரானில் நடக்கும் அடக்குமுறையைக் கண்டிக்கும் வகையில், ‘ராணுவத் தாக்குதல் நடத்துவதும் பரிசீலனையில் உள்ள பல வழிகளில் ஒன்றாகும்’ என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் இந்தியப் பொருட்கள் மீதான மொத்த வரி 75 சதவீதத்தை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஈரான் இடையிலான வர்த்தக உறவு மிகவும் வலுவாக உள்ளது. கடந்த 2024 – 2025ம் நிதியாண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் சுமார் 1.68 பில்லியன் டாலராக, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இதில் ஆர்கானிக் ரசாயனங்கள் மட்டும் 512 மில்லியன் டாலருக்கும், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் 311 மில்லியன் டாலருக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஈரானில் இருந்து மெத்தனால், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உலர் பழங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய வரியால் இந்தப் பொருட்களின் விலை உயர்வதுடன், அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களின் விற்பனையும் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானை சாராமல் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்குச் செல்ல இந்தியா அமைத்த சபஹார் துறைமுகத் திட்டமும் இந்த அறிவிப்பால் கேள்விக்குறியாகி உள்ளது. இந்தத் துறைமுகத்தை இயக்க கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்தியா 10 ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்கிடையே டிரம்ப் விதித்துள்ள இந்தத் தன்னிச்சையான வரி விதிப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு ஒன்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை (ஜன. 14) வெளியாகவுள்ளது. அந்தத் தீர்ப்பு அதிபரின் முடிவுக்கு எதிராக வந்தால் மட்டுமே, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த 25 சதவீத கூடுதல் வரியில் இருந்து தப்பிக்க முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
