×

மொழி, இனம், பண்பாடு சிதைந்து விட்டால் தமிழர் என்ற அடையாளத்தை இழந்து விடுவோம்: அயலகத் தமிழர்களுக்கு விருதுகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மொழி சிதைந்தால், இனம் சிதையும். இனம் சிதைந்தால், நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால், நம்முடைய அடையாளம் போய்விடும். அடையாளம் போய்விட்டால், தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியையே இழந்துவிடுவோம் என்று அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடந்த ‘அயலகத் தமிழர் தினம் – 2026’ விழாவில், அயலக தமிழர்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உலகின் பல நாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும், தமிழர்களான நீங்களும், உங்களின் குடும்பத்தாரும், பல முக்கிய பொறுப்புகளிலும், நல்ல நிலையிலும் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நீங்கள் எல்லோரும், உங்கள் சொந்தங்களை பார்க்க தமிழ்நாட்டிற்கு வருகிறீர்கள். நாம் எல்லோரும் எதனாலும், யாராலும் பிரிக்க முடியாத தமிழ்ச் சொந்தங்கள். தமிழின சொந்தங்கள். இது பல்லாயிரம் ஆண்டு காலத்து சொந்தம். இன்னும் பலப்பல ஆண்டு தொடர இருக்கின்ற சொந்தம். நாடுகளும், கடல்களும் நம்மை பிரித்தாலும், மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது.

70 நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நீங்கள் அனைவரும் வந்திருக்கிறீர்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் நேரத்தில் இந்த மாபெரும் தமிழர் ஒன்று கூடக்கூடிய கடலை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அயலகத் தமிழர் நலத் துறை அமைச்சர் நாசருக்கும், துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். நாசரைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், கொஞ்சம் சத்தமிடுவார். ஆனால் வேலை நடைபெறும்.

ஒரு வேலையை அவரிடத்தில் ஒப்படைத்தால், நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர் நாசர். நேற்றில் இருந்து நிகழ்ச்சியை பற்றி நீங்கள் கொடுத்த பேட்டியை பார்த்து, நாசர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து ‘ப்ரூவ்’ செய்துவிட்டார். நூற்றாண்டுகளுக்கு முன் தங்களின் தாய்மண்ணான தமிழ்நாட்டில் இருந்து, பல்வேறு காரணங்களுக்காக, வாய்ப்புகளுக்காக பறந்து சென்றவர்கள் உங்கள் முன்னோர்கள்.

அவர்களை வாழ்க்கை தேடி சென்றவர்கள் என்று சொல்வதைவிட, அந்தந்த நாடுகளை வளப்படுத்த சென்றவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். தாங்களும் வளர்ந்து, தங்களின் உழைப்பால் அந்த நாட்டையும் வளப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு சிறந்த சான்று நீங்கள்தான். வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ்நாட்டை மறக்காதவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். அதனால்தான், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு நன்மை செய்வதை போலவே, அயல்நாட்டு தமிழர்களுக்கும் சகோதரனாக இருந்து நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது.

உங்களுக்காகவே அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது. வேறு நாட்டில் செட்டிலான சிட்டிசனாக இருந்தாலும், அயலகத்தில் உழைக்கும் தமிழ்நாட்டு தமிழர்களாக இருந்தாலும், நீங்கள் எந்த குறையும் இல்லாமல் வளமாய் வாழ வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளையும் கேட்க வேண்டும் என்று ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை, தமிழ்நாட்டு மக்கள், தங்களின் கனவுகளால் உருவாக்க வேண்டும் என்று, இந்த திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். 2030ம் ஆண்டை மனதில் வைத்து உருவாக்கியிருக்கிறோம். இன்னும் சொல்கிறேன். தமிழ்நாட்டில் வாழும் மக்கள் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களான நீங்களும் உங்கள் கனவுகளை சொல்ல வேண்டும் என்றுதான், இன்றைக்கு உங்களிடமும் கனவுகளை கேட்டிருக்கிறோம். தமிழர்கள் கனவு கண்டால், அதை நிச்சயம் அடைந்தே தீருவோம்.

கனவுகளை சுமந்து வந்து, தாய்நிலத்தில் கனவுகளை சொல்லியிருக்கும் உங்களை நான் கேட்டுக்கொள்வது என்ன என்றால், உலகத்தில் எங்கு இருந்தாலும் உங்கள் அடையாளத்தையும், வேர்களையும் மறக்காதீர்கள். உங்கள் உறவுகளை மறக்காதீர்கள். எக்காலத்திற்கும் பொருந்தும் உலக பொதுமறையை தந்த வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண்ணிற்கு சொந்தக்காரர்கள் நாம்.

ஊரைத் தாண்டிய ஊரும் – உலகமும் எப்படி இருக்கும் என்றே தெரியாத காலத்தில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எல்லோரையும் சொந்தங்களாக கருதி இலக்கியம் படைத்த கணியன் பூங்குன்றனாரின் மண் இது. மொழிக்காக போராடிய இயக்கம் மட்டுமல்ல, மொழியுரிமை காக்க தங்கள் உயிரையே தந்த தியாக மறவர்களை கொண்ட இயக்கம் திமுக. மொழி சிதைந்தால், இனம் சிதையும்.

இனம் சிதைந்தால், நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால், நம்முடைய அடையாளம் போய்விடும். அடையாளம் போய்விட்டால், தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியையே இழந்துவிடுவோம். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், ஒற்றுமையாக வாழுங்கள். அந்த நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுங்கள். அதேவேளையில், தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வாருங்கள். அங்கு உள்ளவர்களுக்கும் தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்துச் சொல்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* 9 விருதாளர்களுக்கு விருது
அயலகத் தமிழர் தினம் 2026 விழாவில், அயலகத் தமிழர்களுக்கான தமிழ் மாமணி விருது, கணியன் பூங்குன்றனார் விருது மற்றும் சிறந்த பண்பாட்டு தூதுவர் விருது என 9 விருதாளர்களுக்கு விருதுகளையும், தமிழ் மணம் திட்டத்தின் கீழ் 10 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், தமிழ் இணையக் கல்வி கழகத்தின் தமிழ் மொழிக்கான பாடத்திட்ட புத்தகங்களை தமிழ்ச்சங்க பிரதிநிதிகளுக்கும் வழங்கினார். மேலும், முதல்வர் முன்னிலையில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...