- அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சுப்பிரமணியன்
- இந்தியா காப்பீட்டு நிறுவனம்
- மருத்துவ அமைச்சர் மற்றும்
- பொது நலன்புரி
சென்னை: முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2026-27ஆம் ஆண்டிற்கான காப்பீட்டுத் தொகை ரூ.1,237.80 கோடிக்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கினார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (12.01.2026) சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2026-27ஆம் ஆண்டிற்கான காப்பீட்டுத் தொகை ரூ.1.237.80/- கோடிக்கான காசோலையை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கி, 2025-26ஆம் ஆண்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் மருத்துவமனை அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட செயலியினை வெளியிட்டார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம்;
ஏழை எளிய மக்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எவ்விதமான கட்டணமும் இல்லாமல் பயன்பெற வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தோடு முத்தமிழறிஞர் கலைஞர் 2009ஆம் ஆண்டு ஜீலை திங்கள் 23ஆம் தேதி உயிர்காக்கும் சிகிச்சைக்கான முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார்கள். அந்த திட்டத்தின் பயன்பாடு படிப்படியாக உயர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 1 கோடியே 45 இலட்சத்து 51 ஆயிரத்து 697 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மிகப் பெரிய திட்டமாக விளங்கி வருகிறது. அந்த திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் பிரிமியம் தொகை என்பது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலோடு. இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு இதுவரை 2023 ஜனவரி திங்கள் 10 ஆம் தேதி ரூ.1,200/- கோடியும், 2024 ஜனவரி திங்கள் 10 ஆம் தேதி ரூ.1.228.27 கோடியும், 2025 ஜனவரி திங்கள் 11 ஆம் தேதி ரூ.1,262.91 கோடியும் பிரிமியம் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு 11.01.2026 முதல் 10.01.2027 வரைக்கான பிரிமியம் தொகை ஒரு குடும்பத்திற்கு ரூ.849 என்கின்ற வகையில் 1 கோடியே 45 இலட்சத்து 51 ஆயிரத்து 697 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 95% தொகையான ரூ.1,173.66 கோடியும் மீதமுள்ள 5% பிரிமியம் தொகை ரூ.64.13 கோடி என ஆக மொத்தம் ரூ.1237.80 கோடிக்கான காசோலை இன்றைக்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் மிகச் சிறப்பாக சேவையாற்றி வரும் மருத்துவமனைகள், சேவையாற்றி வரும் மருத்துவர்கள். சேவையாற்றி வரும் அனைத்து அமைப்புகளுக்கும் பாராட்டுகளும், விருதுகளும் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தைப் பொறுத்தவரை முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு பல்வேறு மாற்றங்களை செய்து ஏழை, எளிய, நடுத்தர பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான திட்டமாக இதை மாற்றியிருக்கிறார்கள். கடந்த காலங்களில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டொன்றிற்கான தொகை ரூ.691/- என்று இருந்தது. முதலமைச்சர் அதனை ரூ.841/- ஆக உயர்த்தினார்கள். கடந்த காலங்களில் இதற்கான ஆண்டு வருமானம் ஒரு குடும்பத்திற்கு ரூ.72,000/- ஆக இருந்தது. அதனை ரூ.1,20,000/- ஆக உயர்த்தப்பட்டது. காப்பீடு தொகை ஒரு வருடத்திற்கு ரூ.2 இலட்சமாக இருந்தது. அது தற்போது ரூ.5 இலட்சமாக உயர்த்தி தந்தார்கள். கடந்த காலங்களில் காப்பீடு திட்டத்திற்கான சிகிச்சை முறைகள் 1090 மட்டுமே இருந்தது.
அது தற்போது கூடுதலாக்கப்பட்டு 2,053 என்கின்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கை 970, இன்றைக்கு 2,157 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த காலங்களில் பிரேத்யேக சிகிச்சை முறைகள் 2 என்றிருந்தது. தற்போது 8 ஆக உயர்ந்திருக்கிறது. அந்தவகையில் 8 உயர்சிறப்பு சிகிச்சைகளான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சை, காதுவால்வு உள் வைப்பு நரம்பு அறுவை சிகிச்சை, ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மற்றும் இருதய மாற்று
அறுவை சிகிச்சை, நுரையீரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை, செவிப்புல மூளை தண்டு உள் வைப்பு அறுவை சிகிச்சை என்று 8 வகையான சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த காப்பீட்டு திட்டத்தின்கீழ் 1.45 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வரும் நிலையில் இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு, பல்வேறு சிறப்பு பிரிவினரும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு அவர்களையும் இந்த திட்டத்தின்கீழ் இணைத்திருக்கிறோம். கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்கள், குழந்தை பராமரிப்பு இல்லக் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள், மனநல காப்பகத்தின் உள் மருத்துவ பயனாளிகள், முதியோர் நல காப்பக பயனாளிகள், ஆதரவற்றவர்கள், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் நலவாரியத்தை சேர்ந்தவர்கள், கட்டிடப் பணியாளர் நலவாரியத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஏறத்தாழ 10 பிரிவினர் 7,56,873 பேர் புதிய பயனாளர்களாக இதில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 5 மாதங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புக்குரிய திட்டங்கள் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்.
இந்த உங்களுடன் ஸ்டாலின் எனும் திட்டத்தில் இதுவரை 10,000 முகாம்கள் வரை நடத்தப்பட்டுள்ளது. நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 1,256 இடங்கள் என்று அறிவிக்கப்பட்டு அதுவும் தற்போது 1,000 முகாம்கள் நெருங்கி வருகிறது. இந்த முகாம்களின் வாயிலாக மட்டும் 2,77,735 புதிய பயனாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏழை எளிய மக்கள் ஒவ்வொருவரும் விடுபடாமல் பயன்பெறும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரே நாளில் 100 சட்டமன்ற தொகுதிகளில் மருத்துவக் காப்பீட்டு திட்ட பயனாளர்களை இணைக்கும் முகாம் நடத்தப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமே முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்திற்கான புதிய அட்டைகளை பெருகின்ற அமைப்பு இருந்தது. இந்த அரசுப் பொறுப்பேற்றதற்கு பிறகு கூடுதலாக இரண்டு இடங்களில் அதாவது சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதியில் புதிய அமைப்புகள் தொடங்கி வைக்கப்பட்டு அங்கேயும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்திற்கான புதிய அட்டைகள் சேர்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மரு.வினீத், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத் தலைவர் ராகுல், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சுகந்தி ராஜகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் மரு.சித்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் மணிகண்டன், இணை இயக்குநர் மரு.வினோத் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

