×

நிராகரிப்பு முடிவல்ல

ஒருவன் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்காக விண்ணப்பித்தான். முதல்சுற்றில் அவனுக்கு சில வேலைகள் கொடுக்கப்பட்டன. அவற்றை அவன் மிகச் சிறப்பாக செய்து காட்டினான். அதனால் அவன் முதல்சுற்றில் தேர்வானான்.

இரண்டாவது சுற்றில் நேர்முகத் தேர்வுக்கு சென்ற அவனிடம் அதிகாரிகள் சில கேள்விகள் கேட்டார்கள். பின்னர் ஒரு விண்ணப்பத்தை கொடுத்து, அவனுடைய முகவரி மற்றும் இ-மெயில் ஐ.டி எழுதச் சொன்னார்கள். அதற்கு அவன் மிகவும் எளிமையாக, “எனக்கு இ-மெயில் இல்லை” என்று சொன்னான்.

அதை கேட்ட அதிகாரிகள், “ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைக்காக வந்து, இ-மெயில் கூட இல்லாத உனக்கு இங்கு வேலை செய்யத் தகுதி இல்லை” என்று சொல்லி அவனை வெளியே அனுப்பிவிட்டார்கள். அந்த நிராகரிப்பு அவனை மனமுடைந்தவனாக்கியது.

சோர்ந்த மனநிலையுடன், அவன் கையில் இருந்த சில நூறு ரூபாயை எடுத்துக் கொண்டு வெங்காயம் வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினான். அவன் உழைப்பில் சிறிது லாபம் கிடைத்தது. அந்த லாபத்தை மீண்டும் முதலாக வைத்து வியாபாரத்தை விரிவாக்கினான். நாளடைவில் அவன் ஒரு பெரிய வெங்காய வியாபாரியாகவும், பின்னர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் உயர்ந்தான்.

ஒருநாள், வங்கியில் கணக்கு தொடங்குவதற்காக அவன் வங்கி மேலாளரை சந்தித்தான். விண்ணப்பங்களை நிரப்பிய பிறகு, மேலாளர் அவனிடம் இ-மெயில் ஐ.டி கேட்டார். அதற்கு அவன், “எனக்கு இ-மெயில் ஐ.டி இல்லை” என்று சொன்னான்.

அதை கேட்ட மேலாளர் ஆச்சரியத்துடன், “இன்டர்நெட், இ-மெயில் எதுவுமே தெரியாமல் இத்தனை பெரிய தொழிலதிபராக எப்படி ஆனீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதன் அமைதியாகச் சொன்னான்: “இவை எல்லாம் தெரிந்திருந்தால், இன்று நான் ஒரு நிறுவனத்தில் தரையைத் துடைத்துக் கொண்டிருப்பேன்.”

இறைமக்களே, இந்தக் கதை நமக்கு ஒரு முக்கியமான ஆன்மிக உண்மையை கற்றுத் தருகிறது. கல்வியும் அறிவும் மிக மிக அவசியமானவை; ஆனால் அவற்றை மட்டும் வைத்து மனிதனை மதிப்பிடக் கூடாது. மனிதர்கள் வெளிப்படையான தகுதிகளைப் பார்க்கிறார்கள்; ஆனால் தேவனோ மனிதனுடைய இருதயத்தையும் அவன் உண்மை, நேர்மை, உழைப்பையும் பார்க்கிறார் (1 சாமுவேல் 16:7). ஒரு இடத்தில் நாம் நிராகரிக்கப்படும்போது அது தோல்வி அல்ல; தேவன் நமக்காக வைத்திருக்கும் பெரிய திட்டத்தின் தொடக்கம் ஆகலாம்.

இப்புதிய ஆண்டில் மனிதர்கள் மூடிய கதவுகள் தேவனால் திறக்கப்படுவதுடன், புதிய வாய்ப்புகளாகவும் மாறட்டும். ஆகவே, நிராகரிப்பு வந்தாலும் மனம் தளராமல், தேவனை நம்பி உழைத்தால், தேவன் நம்மை ஏற்ற காலத்தில் உயர்த்துவார். புதுவருட வாழ்த்துகள்!

– அருள்முனைவர். பெவிஸ்டன்.

Tags :
× RELATED பாதுகையின் பெருமை