உலக இயக்கத்திற்கு காரணமே பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும்தான். உலகம் அனைத்திற்கும் பொதுவான இறைவன் யாரென்றால் அது இந்த பஞ்ச பூதங்கள்தான்.
பஞ்சாங்கமும் பஞ்சபூதமும்
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் இன்றி இவ்வுலகம் இல்லை. அதுபோல வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை கொண்ட பஞ்சாங்கம் இன்றி ஜோதிடம் இல்லை.
வாரம்,(கிழமை), திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய பஞ்ச அங்கங்களும் பஞ்சபூத தத்துவத்திற்கு உட்பட்டவை ஆகும்.
1. கிழமைகள் – நெருப்பு தத்துவம்.
2. திதிகள்- நீர் தத்துவம்.
3. நட்சத்திரங்கள்- காற்று தத்துவம்.
4. யோகங்கள்-ஆகாய தத்துவம்
5. கரணம்- நில தத்துவம்.
பஞ்சபூத கோயில்களின் சூட்சுமம்
12 ராசிகளில் நீர் நிலம் நெருப்பு காற்று என்ற அடிப்படையில் நான்கு வகையாக நம் முன்னோர்கள் பிரித்திருக்கின்றனர். இதில் ஆகாய பூதம் இடம் பெறாது. ஏனென்றால், அனைத்து ராசி மண்டலமும் ஆகாயம் என்ற போர்வைக்குள் அடங்கும்.
நெருப்பு ராசிகள்
மேஷம் – சிம்மம் – தனுசு.
நில ராசிகள்
ரிஷபம் – கன்னி – மகரம்.
காற்று ராசிகள்
மிதுனம் – துலாம் – கும்பம்.
நீர் ராசிகள்
கடகம் – விருச்சிகம் – மீனம்.
மேற்கண்ட ராசிகளில் எது உங்கள் லக்னமாக வருகிறதோ, அந்த லக்னத்திற்கு உண்டான பஞ்சபூத தலத்தை தரிசனம் செய்தால், உங்கள் லக்ன தோஷம் நிவர்த்தியாகும். உதாரணத்திற்கு உங்கள் லக்னம் விருச்சிகம் என்றால், உங்களின் பிறந்த நட்சத்திர நாளில் நீர் தலத்திற்குச் சென்று வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும். விதி – மதி – கதி என சொல்லப்படும் லக்னம் சந்திரன் சூரியன் எது பலமாக இருக்கின்றதோ, அது எந்த ராசியை குறிக்கின்றதோ… அதற்குரிய பஞ்சபூத கோயிலுக்குச் சென்று வரலாம். தற்போது நடப்பு திசை உங்களுக்கு என்ன நடக்கிறதோ அந்த திசாநாதன் எந்த ராசியில் இருக்கிறாரோ, அந்த ராசி குறிக்கக்கூடிய பஞ்சபூத ஸ்தலத்திற்கு சென்று வருவதும் சிறப்பு.
தொழில்காரகன் என அழைக்கப்படும் சனி உங்களது ஜனன ஜாதகத்தில் எந்த ராசியில் அமர்ந்திருக்கின்றாரோ… அந்த ராசிக்குரிய பஞ்சபூத கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. அப்படிச் செய்தால் உங்களின் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பஞ்சபூத கோயில்களின் பின்னால் இருக்கும் சூட்சுமம் இதுதான். மனித உடல் இறைவனால் பஞ்ச பூதத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பஞ்சபூத பெருமையை சிறப்பிக்கும் விதமாக சிவனே பஞ்சபூத ஸ்தலங்களில் நாயகனாக நின்று அருள் பாலிக்கிறார். சிவன் அழிக்கும் கடவுள். மனிதனின் அஞ்ஞான இருளை கர்ம வினைகளை தீமைகளை அழித்து நன்மை தருபவர். நம் கர்ம வினைகளை தீர்க்கக் கூடிய ஆற்றல் கொண்டவர், சிவபெருமான் ஒருவரே.
தேங்காயில் பஞ்சபூத சக்தி
தேங்காய் – நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது இது. உடைபடும் இடங்களில் இந்த பஞ்சபூத சக்திகள் குவிக்கப்படுகின்றன.
தேங்காய் சிவனின் மூல சக்தியாக உள்ளது. இதில் உள்ள முக்கண்கள் வழியே பஞ்சபூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும். ஒரே இடத்தில் தேங்காய் சிதறுகாய் இடப்படும் போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும்.
பஞ்சபூத முக்கிய ஸ்தலங்கள்
1.நிலம் – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்.
2. நீர்- திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்.
3. நெருப்பு – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்.
4. காற்று- திருக்காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர் கோயில்
5. ஆகாயம் – சிதம்பரம் நடராஜர் கோயில்.
சென்னையில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்கள்
1. நிலம் – ஏகாம்பரேஸ்வர்கோயில் தங்க சாலை மின்ட் பூங்கா நகர்.
2. நீர் – கங்காதரேஸ்வர் ஆலயம்- புரசைவாக்கம்
3.நெருப்பு – அருணாச்சலேஸ்வரர், அபிதகுலசாம்பாள் கோயில் சௌகார்பேட்டை
4.காற்று – அருள்நிறை காளத்தீஸ்வரர் ஞானபிரசன்னாம்பிகை கோயில், பாரிமுனை
5. ஆகாயம் – சிதம்பரேஸ்வரர் கோயில் சூளைமேடு
மதுரையில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்கள்
1.நிலம் – இம்மையில் நன்மை தருவார் கோயில். மேல மாசி வீதி
2. நீர் – திருவாப்புடையார் கோயில் செல்லூர்.
3.நெருப்பு – தென் திருவாலவாய் திருக்கோயில் தெற்கு மாசிவீதி.
4 காற்று – முக்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளம்.
5.ஆகாயம் – சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில்.
தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத ஸ்தலங்கள்
தென்பாண்டி நாடு என்று சிறப்பித்து அழைக்கப்படும் திருநெல்வேலி சீமையில் எண்ணற்ற சிவாலயங்கள் அமையப் பெற்றுள்ளன. அவற்றுள் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தத்துவத்தில் அமையப் பெற்றுள்ள கோயில்கள் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத ஸ்தலங்கள் என்று சிறப்பிக்கப்படுகின்றன.
1. நிலம் – அருள்மிகு கோமதி அம்மாள் சங்கரநாராயணன் கோயில் – சங்கரன்கோவில்.
2. நீர் – அருள்மிகு அகிலாண்டேஸ்வரி மத்தியஸ்தநாதர் கோயில் – தாருகாபுரம்.
3. நெருப்பு – அருள்மிகு ஒப்பனை அம்மாள் பால்வண்ண நாத சுவாமி கோயில் – கரிவலம்வந்தநல்லூர்.
4. காற்று – அருள்மிகு சிவபூரணியம்மாள் திரிபுரநாதர் கோயில் – தென்மலை.
5. ஆகாயம்- அருள்மிகு தவம் பெற்ற நாயகி நச்சாடை தவிர்த்தருளியநாதர் கோவில் தேவதானம். ( இந்த தேவதானம் ஊர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.
மேற்கண்ட தென்பாண்டி நாட்டில் அமையப் பெற்றுள்ள பஞ்சபூத தலங்களை சிவசக்தி அருளால் சிவராத்திரி அன்று இரவு சங்கரன்கோவில் இருந்து தரிசனம் ஆரம்பித்து ஒவ்வொரு கோயிலாக ஜாமபூஜை தரிசனம் பார்த்து கடைசியாக தேவதான கோயிலில் தரிசனத்தை பூர்த்தி செய்தால் எல்லா வளமும் நலமும் தீர்க்க ஆயுளும் கிட்டும்.
வசிஷ்ட நதிக்கரையோரம் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்கள்
சேலம் மாவட்டத்திலும் பஞ்சபூத தலங்கள் உள்ளன. இது வசிஷ்ட நதிக்கரையோர பஞ்சபூத தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் தொடங்கி விழுப்புரம் மாவட்ட எல்லை வரையில் வசிஷ்ட நதிக்கரை ஓரத்தில் இந்த ஐந்து கோயில்களும் அமைந்திருக்கின்றன. வசிஷ்ட மகரிஷி யாகம் செய்த நதிக்கரையோரம் என்பதால் இது வசிஷ்ட நதி என்று பெயர் பெற்றது.
1. நிலம் – போளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில்
2. நீர் – ஏத்தாப்பூர் சாம்ப மூர்த்தி ஈஸ்வரர் கோயில்.
3. நெருப்பு – ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோயில்
4.காற்று – ஆறகளூர் காம நாதீஸ்வரர் கோயில்.
5. ஆகாயம் – கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோயில்
பஞ்சபூத சக்திகள் சமநிலை பெற…
திண்ணமான ஒரு வெள்ளை நிற அட்டையில் நில பூதம் நன்றி, நீர் பூதம் நன்றி, நெருப்பு பூதம் நன்றி, காற்று பூதம் நன்றி, ஆகாயம் பூதம் நன்றி என பச்சை கலர் ஸ்கெட்ச் பேனாவினால் எழுதி லேமினேட் செய்து சட்டை இடது பக்கம் உள் பாக்கெட்டில் வைக்கவும். ஏனெனில் இடது பக்கத்தில் தான் இருதயம் உள்ளது மனிதன் தூங்கி விடுவான். ஆனால், இதயம் தூங்காது இதன் மூலம் பஞ்சபூத சக்திகள் உயிர்ப்பு பெற்று சமநிலை பெறும்.
