கோவை,ஜன.10: கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் சிஎம்சி காலனி காலி மைதானம் பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் அவரை சோதனை செய்தனர். அதில் அவரிடம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது அந்த வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினார்.
அதில் தடுமாறி விழுந்த அந்த வாலிபருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விசாரணையில் அவர் வெரைட்டி ஹால் ரோடு சிஎம்சி காலனியை சேர்ந்த சதீஷ் என்கிற சதீஷ்குமார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
