சென்னை, ஜன.10: சென்னை பெருநகர மாநகராட்சி, தனது வரலாற்றிலேயே முதன்முறையாகப் பசுமை பத்திரங்களை வெளியிட்டு வெற்றிகரமாக ரூ.205 கோடி நிதி திரட்டியுள்ளது. தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் இத்தகைய பசுமைப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டிய முதல் மாநகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிதி திரட்டல் முயற்சிக்கு முதலீட்டாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சென்னை மாநகராட்சி தனது முதல் பசுமை நகராட்சி நிதி பத்திரம் மூலம் ரூ.205.59 கோடியை தேசிய பங்கு சந்தை (என்.எஸ்.சி) வாயிலாக வெற்றிகரமாக நிதி திரட்டியுள்ளது. இந்த நிதி பத்திரம் 2026 ஜனவரி 12ம் தேதி தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது. இது சென்னை மாநகராட்சியின் நிலையான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றத்திற்கேற்ற உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கான நிதி ஆதாரங்களை திரட்டும் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. இது நடப்பு நிதியாண்டில் சென்னை மாநகராட்சியின் 2வது நகராட்சி நிதி பத்திர வெளியீடு ஆகும்.
அதே நேரத்தில், முதல் பசுமை நிதி பத்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதுமையான மற்றும் நவீன நிதி திரட்டும் முன்னெடுப்புகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவதை வெளிப்படுத்துகிறது. இந்த பசுமை நகராட்சி நிதி பத்திரம் மூலம் திரட்டப்பட்ட நிதி சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரும் முக்கிய சுற்றுச்சூழல் உட்கட்டமைப்பு திட்டமான கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம், பயோ மைனிங் மற்றும் மீட்டுருவாக்கம் பணிகளுக்காக பயன்படுத்தப்படும். இந்த திட்டம், மொத்தம் 342.91 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் இருந்து சுமார் 252 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியதாகும். பல ஆண்டுகளாக சேர்க்கப்பட்ட பழைய திடக்கழிவுகளை அறிவியல் முறையில் அகற்றுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.648.38 கோடி ஆகும்.
இதில் சென்னை மாநகராட்சியின் பங்கு தொகை ரூ.385.64 கோடி ஆகும். மாநகராட்சியின் இந்த பங்கு தொகையிலிருந்து ரூ.205.59 கோடி தொகைக்கு பசுமை நகராட்சி நிதி பத்திரங்கள் மூலம் சென்னை மாநகராட்சி 10 ஆண்டு காலத்திற்கு, ஆண்டுக்கு 7.95 சதவீதம் என்ற மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் நகர்ப்புற நிதி பத்திரங்களை வெற்றிகரமாக திரட்டியது. இந்த வெளியீட்டுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி ரூ.100.03 கோடி அடிப்படை வெளியீட்டு தொகையை விட 5.02 மடங்கு அதிகமாக, அதாவது ரூ.501.90 கோடி மதிப்பிலான ஏலங்கள் தேசிய பங்குச் சந்தையின் மின்னணு ஏலம் மூலம் பெறப்பட்டன. இது சென்னை மாநகராட்சியின் வலுவான நிதி மேலாண்மை மற்றும் திட்டத்தின் கட்டமைப்பிற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
சென்னை மாநகராட்சியின் பசுமை நகர்ப்புற நிதி பத்திரங்களுக்கு கேர் ரேட்டிங்ஸ் மற்றும் அக்யூட் ரேட்டிங்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ‘ஏஏ’ என தரமதிப்பீடு செய்துள்ளன. இது சென்னை மாநகராட்சியின் சீரிய நிதி மேலாண்மையை எடுத்துக்காட்டுகிறது. மேலும், ஒன்றிய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நகர்ப்புற பசுமை நிதி பத்திர வெளியீட்டு ஊக்கத்தொகையாக மாநகராட்சிக்கு ரூ.20 கோடி ஊக்கத்தொகையும் பெறப்படும். இது நகர்ப்புற பசுமை நிதி பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் செலவினை மேலும் குறைத்திட உதவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
