×

பாஜ கொடி இருந்தால் சுங்கக்கட்டண விலக்கு?.. தென்மாவட்ட டோல்கேட்களில் புது சர்ச்சை

 

மதுரை: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் இயங்கும் சுங்கச்சாவடிகளில் பாஜ கொடி கட்டிச் செல்லும் வாகனங்களுக்கு கட்டண வசூலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக, வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், மதுரை அலகின் கட்டுப்பாட்டின் கீழ் திண்டுக்கல் முதல் கோவில்பட்டி வரையிலும், மதுரை முதல் நத்தம் வரையிலும், மேலூர் முதல் காரைக்குடி வரையிலும், திருமங்கலம் முதல் விருதுநகர் மாவட்டம் அழகாபுரி வரையிலும், மதுரை வெளிவட்ட சாலை முழுவதும் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய நான்கு மாவட்டங்களில் 315 கி.மீ தூரமுள்ள சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.

இதில், மதுரை-மேலூர் சாலையில் சிட்டம்பட்டியிலும், மதுரை-தூத்துக்குடி சாலையில் கப்பலூரிலும், மதுரை-அருப்புக்கோட்டை சாலையில் எலியார்பத்தியிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களிடம் கட்டண வசூல் நடைபெறுகிறது. இச்சாலைகளை பராமரிக்கும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் குறைந்தது 20 முதல் 30 ஆண்டுகள் வரை, சாலையை பராமரிப்பதற்கான கட்டணம் ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் செலுத்தப்பட்டு கட்டண வசூல் நடைபெற்று வருகிறது. இவற்றில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கட்டண உயர்வும் அமலாகிறது. இதற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், புதிதாக ஒரு சர்ச்சையும் வெடித்துள்ளது.

இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:மதுரை அலகின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுங்கச்சாவடிகள் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் உள்ள பல சுங்கச்சாவடிகளில் பாஜ கட்சியின் கொடி கட்டியபடி வரும் வாகனங்களிடம் கட்டண வசூல் செய்யப்படுவதில்லை. இது குறித்து, சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டபோது கட்டணம் வசூல் செய்யும் நிறுவனம் தரப்பில் வாய்மொழி உத்தரவாக பாஜ மற்றும் காவி நிற இந்து அமைப்புகளின் கொடி கட்டி வரும் வாகனங்களிடம் கட்டண வசூல் செய்ய வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வரி விலக்கு என்பது கண்டித்தக்கது என்றனர்.

Tags : Bahia ,Madurai ,Baja ,National Highway Commission ,National Highways Authority of India ,
× RELATED சொல்லிட்டாங்க…