மார்த்தாண்டம், ஜன.1 : மார்த்தாண்டம் அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து திமுக கவுன்சிலர் பலியானார். மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை மாங்காவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின்(50). உண்ணாமலைக்கடை பேரூராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தார். மேலும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.
கடந்த 17ம் தேதி இரவு ஸ்டாலின் தனது வீட்டின் அருகே உள்ள சிறிய பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்டாலின் பாலத்தில் இருந்து சுமார் 15 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இரவு நேரம் என்பதால் உடனடியாக யாரும் கவனிக்கவில்லை.
மறுநாள் காலை அந்த வழியாக சென்றவர்கள் மயங்கி கிடந்த ஸ்டாலினை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்டாலின் நேற்று காலை இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
